அநியாயமா ஒரு உசுரு போச்சு... வேற எங்கேயும் இல்ல, நம்ம சென்னையில்தான்! கார் டிரைவர் ஆவது சொல்லி இருக்கலாம்!
சென்னை திருப்போரூர் (Thiruporur) அருகே நிகழ்ந்த கார் விபத்தில் கெவின் (Kevin) என்ற ஏழு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். கார் விபத்தின் போது ஏர்பேக் (Airbag) வெடித்ததால் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது, பயணிகளின் உயிரை பாதுகாக்க காரில் வழங்கப்படும் ஏர்பேக்கே சிறுவனின் உயிரை காவு வாங்கியுள்ளது.
உயிரிழந்த சிறுவன் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த வீரமுத்துவின் மகன் கெவின் என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். கடந்த அக்.13ஆம் தேதி திங்கட்கிழமை இரவு, கெவின் தனது தாயார், தந்தை, ஓட்டுநர் மற்றும் மேலும் இரண்டு பேருடன் வாடகை காரில் கல்பாக்கத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.

காரின் முன் இருக்கைகளில் டிரைவர் மற்றும் கெவினின் தந்தை அமர்ந்திருக்க, கெவின் தனது தந்தையின் மடியில் அமர வைத்து அழைத்து செல்லப்பட்டு உள்ளான். அலந்தூர் வழியாக பழைய மாமல்லபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அவர்களது காருக்கு முன்னால் சென்ற வாகனம் திடீரென பிரேக் போட்டு ஆலத்தூர் பெட்ரோல் நிலையம் அருகே வலதுபுறம் திரும்பியது.
அந்த வாகனத்தை ஓட்டிச் சென்ற 48 வயதான பையனூரைச் சேர்ந்த சுரேஷ், இண்டிகேட்டர் (Indicator) போடவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். திடீர் திருப்பத்தால் நிலைதடுமாறிய 26 வயதான கார் டிரைவர் விக்னேஷ், தனது காரை நிறுத்த முடியாமல் சுரேஷின் வாகனத்தின் மீது மோதினார். இந்த விபத்தில் காரின் முன் பகுதியில் இருந்த ஏர்பேக் வெடித்து கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுவன் கெவின் மீது பலமாகத் தாக்கியது.

கெவினுக்கு வெளிப்புற காயங்கள் ஏதும் இல்லையென்றாலும், அவன் சுயநினைவை இழந்தான். உடனடியாக அருகில் இருந்த திருப்போரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, மருத்துவர்கள் கெவின் இறந்துவிட்டதாக தெரிவிக்க, அவனது குடும்பத்தினர் மருத்துவமனையில் கதறி அழுதனர். அலட்சியமாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாக சுரேஷ் மீது திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கெவினின் உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. சுரேஷ் இண்டிகேட்டர் பயன்படுத்தாமல் அதிவேகமாகச் சென்று திடீரென பிரேக் போட்டதுதான் விபத்துக்கு முக்கிய காரணம் என போலீசார் குறிப்பிட்டனர். மேலும், சிறுவன் முன் இருக்கையில் அமர்ந்திருந்ததும் அவனது உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே மரணத்தின் உண்மையான காரணம் தெரியவரும் என்றாலும், முதல் கட்ட ஆய்வில் அதிர்ச்சி மற்றும் பலத்த காயம் காரணமாக ஏற்பட்ட ரத்தப்போக்கு தான் காரணம் என்று போலீசார் கூறியுள்ளனர். ஏர்பேக்குகள் மிக வேகமாக விரிவடைவதால், அவை குழந்தைகளுக்கு கடுமையான காயம் அல்லது மரணத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை பலமுறை நமது செய்தித்தளத்தில் கூறியுள்ளோம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெரியவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஏர்பேக்குகள், சிறிய மற்றும் லேசான எடையுள்ள குழந்தைகளுக்குப் பொருந்தாது. மேலும், முன் பக்க மோதல்களில் பின் இருக்கை குறைந்த தாக்கத்தையே பெறும் என்பதால், 13 வயது வரை குழந்தைகளை பின் இருக்கையில் அமர வைப்பதே பாதுகாப்பானது. முன் இருக்கையில் குழந்தைகள் அமர்வதால் ஏற்படும் ஆபத்துகளை கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.
ஏர்பேக் அபாயங்கள்: ஏர்பேக்குகள் பெரியவர்களைப் பாதுகாக்க வடிவமைக்கப்படுபவை ஆகும். அவை மிக அதிக வேகத்தில் விரிவடைகின்றன. இந்த விசை, முன் இருக்கையில் அமர்ந்திருக்கும் குழந்தைகளுக்கு, குறிப்பாக டாஷ்போர்டுக்கு அருகில் இருப்பவர்களுக்கு, தலை மற்றும் கழுத்துப் பாதிப்பு அல்லது மரணத்தை ஏற்படுத்தலாம்.
பாதிப்புக்குள்ளான நிலை: முன் இருக்கையில் குழந்தைகள் பெரும்பாலும் தவறான நிலையில் அமர்ந்திருப்பார்கள். அவர்கள் டாஷ்போர்டுக்கு மிக அருகில் அமர்வதால், ஏர்பேக் முழுமையாக விரிவடைவதற்கு முன்பே அவர்களைத் தாக்கி, ஆபத்தை அதிகரிக்கும். அதிக தாக்கங்கள்: கார் விபத்துகள் பெரும்பாலும் முன் பக்க மோதல்களாலே நடக்கின்றன. இதில் முன் இருக்கைகள் அதிக தாக்கத்தை எதிர்கொள்கின்றன. இத்தகைய அதிக தாக்கமுள்ள சூழ்நிலைகளில் பின் இருக்கைகள் கூடுதல் பாதுகாப்பை வழங்குகின்றன.

சரியற்ற பொருத்தம்: பின் இருக்கைகளில் கூட குழந்தைகளை சாதாரணமாக அமர வைப்பது கொஞ்சம் ஆபத்தானதே. ஏனென்றால், சீட் பெல்ட் (Seat Belt) அவர்களுக்கு சரியாக பொருந்தாது. சீட் பெல்ட் சரியாகப் பொருந்தாத ஒரு குழந்தை, அதை அணிந்திருந்தாலும் காயம் ஏற்படும் ஆபத்து உள்ளது. சீட் பெல்ட் உள் உறுப்புகளுக்குக் கடுமையான காயங்களை ஏற்படுத்தலாம் அல்லது விபத்தின் போது சீட் பெல்ட் பயனில்லாமல் போகலாம்.
ஆகையால், குழந்தைகளுக்கென பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் இருக்கைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும். வெளிநாடுகளில் எல்லாம் இவ்வாறுதான் செய்கின்றனர். நம் இந்தியாவில்தான் சர்வ சாதாரணமாக மற்ற பயணிகளை போன்று குழந்தைகளையும் காரில் அழைத்துச் செல்கிறோம். அப்படியிருக்க, குழந்தையை முன் இருக்கையில், அதுவும் மடியில் அமர வைத்து அழைத்து செல்வது மிகவும் முட்டாள்தனமானது.
பாதுகாப்பான மாற்று வழிகள் - பின் இருக்கையே சிறந்தது: 13 வயது அடையும் வரை அனைத்து குழந்தைகளையும் பின் இருக்கையில் அமர்த்துவதே பாதுகாப்பானது. சரியான கார் இருக்கை: குழந்தையின் வயது, எடை மற்றும் உயரத்திற்கு ஏற்ற பிரத்யேகமான இருக்கையைத் தேர்ந்தெடுத்து, அதை பின் இருக்கையில் சரியாகப் பொருத்தி பயன்படுத்துவது அவசியம்.
குழந்தைகளுக்குப் பின்னோக்கிப் பார்க்கும் கார் இருக்கைகள் (Rear-facing car seats) மிகவும் பாதுகாப்பானவை. அவை தலை, கழுத்து மற்றும் முதுகெலும்புக்கு சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன. முன் இருக்கைகளுக்கு இடையில் குழந்தை வேண்டாம்: முன் இருக்கைகளுக்கு இடையிலோ அல்லது சென்டர் கன்சோல் பகுதியிலோ குழந்தைகளை நிற்க வைத்தோ அல்லது தரையில் அமர வைத்தோ ஒருபோதும் அழைத்து செல்ல வேண்டாம்.


Click it and Unblock the Notifications









