ஸ்விக்கி ஊழியரை தாக்கிய டாடா கார் டிரைவர்! வீடியோவை பாக்கும்போதே ஒடம்பெல்லாம் நடுக்கம் எடுக்குது!
இந்திய சாலைகளில் வாகனம் ஓட்டுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. அது மிகவும் சவாலானது. ஏனெனில் இங்கு நிறைய பேர் கவனக்குறைவாக வாகனங்களை ஓட்டுகின்றனர். போக்குவரத்து விதிமுறைகளை (Traffic Rules) கடைபிடிப்பது கிடையாது. இது மற்றவர்களுக்கு அசௌகரியம் மற்றும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
சில சமயங்களில் இது வாகன ஓட்டிகளுக்கு இடையே மோதலையும் உருவாக்கி விடுகிறது. வாகன ஓட்டிகளுக்கு இடையே நிறைய மோதல்கள் நடைபெறும் நகரங்களில் ஒன்றாக பெங்களூர் (Bangalore) உள்ளது. பெங்களூர் நகரில் வாகன ஓட்டிகளுக்கு இடையே நடைபெற்ற மோதல்களை எடுத்துக்காட்டும் வீடியோக்கள் இணையத்தில் நிறைய உலா வந்து கொண்டுள்ளன.

இந்த வரிசையில் தற்போது ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ வெளியாகியுள்ளது. யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில் (Viral Video), டாடா நெக்ஸான் (Tata Nexon) கார் டிரைவர் ஒருவர் வேண்டுமென்றே ஸ்விக்கி (Swiggy) டெலிவரி பாய் மீது மோதுவதை நம்மால் பார்க்க முடிகிறது.
சம்பவம் நிகழ்ந்த இடத்தின் வழியாக பயணம் செய்த ஒரு காரின் டேஷ்போர்டு கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன. அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் இருப்பதை இந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது. போதாக்குறைக்கு சாலைகள் வேறு குறுகலாக இருந்தன. இதன் காரணமாக வாகனங்களால் மெதுவாகதான் அப்பகுதியை கடக்க முடிந்தது.

அப்போது ஸ்விக்கி டெலிவரி ஊழியர் ஒருவர் கிடைத்த சிறிய இடைவெளியில் முன்னோக்கி செல்ல முயல்கிறார். வீடியோவை பார்க்கையில் இது பொறுப்பற்ற செயல் போலவே இருக்கிறது. அப்போது அந்த வழியாக வந்த டாடா நெக்ஸான் காரின் டிரைவர் ஒருவர், ஸ்விக்கி டெலிவரி ஊழியரின் டூவீலரின் மீது மோதாமல் இருப்பதற்காக பிரேக் பிடித்தார்.
அந்த நேரத்தில் ஸ்விக்கி டெலிவரி ஊழியர் ஏதோ வார்த்தைகளை உதிர்த்துள்ளார். இது டாடா நெக்ஸான் காரின் டிரைவருக்கு ஆத்திரத்தை தூண்டியது போல் தெரிகிறது. இதன் காரணமாக அவர் வேண்டுமென்றே, ஸ்விக்கி டெலிவரி ஊழியரின் கார் மீது மோதினார். இந்த மோதலால், ஸ்விக்கி டெலிவரி ஊழியர் நிலை தடுமாறினார்.
டாடா நெக்ஸான் காரின் டிரைவர் அத்துடன் நிற்காமல், காரில் இருந்து இறங்கி வந்து, ஸ்விக்கி டெலிவரி ஊழியரை தாக்கவும் செய்தார். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்திய சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு இடையே தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இது போன்ற மோதல்கள் கவலையை ஏற்படுத்துவதாக உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்த சம்பவத்தில் இரு தரப்பு மீதும் தவறு உள்ளதாகவே நாங்கள் கருகிறோம். ஸ்விக்கி டெலிவரி ஊழியர் மற்ற வாகன ஓட்டிகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் சிறு இடைவெளியில் நுழைந்து செல்ல முயன்றது தவறுதான். அதேபோல் டாடா நெக்ஸான் காரின் டிரைவர் தெரிந்தே அவரது டூவீலர் மீது காரை மோதியதும், அவரை தாக்கியதும் தவறுதான்.
இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க வேண்டுமென்றால், முதலில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுங்கள். எப்போதும் சாந்தமான மன நிலையில் இருங்கள். எங்கோ இருக்கும் கோபத்தை சாலையில் யாரிடமோ காட்ட வேண்டாம். தவறுகளை மன்னித்து பழகுங்கள். இந்த விஷயங்களை பின்பற்றினாலே, சாலையில் பிரச்னைகளை தவிர்க்க முடியும்.
இதே வீடியோவில் மற்றொரு மோதலையும் நம்மால் பார்க்க முடிகிறது. சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையே மோதல்கள் நடைபெறுவது சர்வ சாதாரணமாகி விட்டன என்பதை இது காட்டுகிறது. நீங்கள் இது போன்ற பிரச்னைகளில் சிக்கி கொள்ளாமல் இருக்க வேண்டுமென்றால், பொறுமையை கடைபிடிப்பது சிறந்தது.


Click it and Unblock the Notifications








