ஹெல்மெட் அணியவில்லை... போலீசார் நடவடிக்கை எடுத்தது யார் மீது என தெரிந்தால் அதிர்ச்சி உறுதி...
ஹெல்மெட் அணியவில்லை என்ற காரணத்திற்காக ஒருவர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அவர் யார் என தெரிந்தால், நீங்கள் அதிர்ச்சியடைவது உறுதி.

சாலை பாதுகாப்பு என்ற விஷயத்தில் இந்தியா மிக மோசமான நிலையில் இருந்து வருகிறது. இந்தியாவில் உள்ள சாலைகள் மிகவும் அபாயகரமானவையாக கருதப்படுகின்றன. விபத்துக்கள் என்ற வடிவில் இந்திய சாலைகள் ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் உயிர்களை குடித்து கொண்டிருப்பதே அதற்கு சாட்சி.

எனவே சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை செய்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக போக்குவரத்து போலீசாரால், வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் தண்டிக்கப்படுகின்றனர். குறிப்பாக ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை போக்குவரத்து போலீசார் எடுத்து வருகின்றனர்.

டூவீலர்களில் பயணம் செய்பவர்கள்தான் சாலை விபத்துக்களால் அதிகம் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். கார்களில் பயணம் செய்பவர்களுடன் ஒப்பிடும்போது, டூவீலர்களில் பயணம் செய்பவர்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் மிக மிக குறைவு. ஹெல்மெட் ஒன்றுதான் அவர்களுக்கான முக்கிய பாதுகாப்பு.

எனவேதான் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலானோர் அதனை பின்பற்றுவது கிடையாது. அத்தகைய நபர்கள் மீது போக்குவரத்து போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில் ஹெல்மெட் அணியாததற்காக கேரளாவில் சமீபத்தில் போலீசார் அபராதம் விதித்துள்ளனர். இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள சாஸ்தம்கோட்டா - சவாரா சாலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அப்போது அவ்வழியாக வந்த வாகன ஓட்டி ஒருவருக்கு 100 ரூபாய் அபராதம் விதித்து, அதற்கான ரசீதையும் போக்குவரத்து போலீசார் வழங்கியுள்ளனர். ஹெல்மெட் அணியாததால் அபராதம் என அந்த ரசீதில் காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் என்ன சர்ச்சை என கேட்கிறீர்களா?

அபராதம் விதிக்கப்பட்டது இரு சக்கர வாகன ஓட்டிக்கு அல்ல. டாடா நெக்ஸான் காரை ஓட்டி வந்த டிரைவருக்கு! இதுதான் சர்ச்சைக்கு காரணம். கோபா குமார் என்பவர் இது குறித்து பேஸ்புக்கில் எழுதியுள்ளார். அவர்தான் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்.

கோபா குமாரின் பேஸ்புக் பதிவு மூலமாக, அபராதம் விதித்து போலீசார் வழங்கிய ரசீது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சாஸ்தம்கோட்டா - சவாரா சாலையில், தனது டாடா நெக்ஸான் காரில் பயணித்து கொண்டிருந்தபோதுதான், போலீசாரால் கோபா குமார் நிறுத்தப்பட்டுள்ளார்.

அந்த காரின் படத்தையும் கோபா குமார் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். ஆனால் அவரை போலீசார் நிறுத்தியது ஏன்? என்பதற்கான காரணம் தெரியவில்லை. காரணம் குறித்த தகவல் எதுவும் அவரது பேஸ்புக் பதிவில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் அவருக்கு போலீசார் 100 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

அத்துடன் அதற்கான ரசீதையும் வழங்கியுள்ளனர். ரசீதில் ஹெல்மெட் அணியவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. கார் உள்பட அனைத்து வாகன ஓட்டிகளும் ஹெல்மெட் அணிய வேண்டும் என புதிதாக சட்டம் ஏதேனும் பிறப்பிக்கப்பட்டுள்ளதா? என பயப்பட வேண்டாம்.

சம்பவ இடத்தில் போலீசார் செய்த தவறாகவே இது பார்க்கப்படுகிறது. போலீசார் பல்வேறு வாகனங்களை நிறுத்தி வாகன தணிக்கை நடத்தி கொண்டிருக்கும்போது இந்த தவறு நிகழ்ந்திருக்கலாம். அனேகமாக வேறு இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் ஹெல்மெட் அணியாமல் இருந்திருக்கலாம்.

அதனை மனதில் நிறுத்தி கொண்டு, போலீசார் கோபா குமாருக்கு வழங்கிய ரசீதில் தவறுதலாக ஹெல்மெட் அணியவில்லை என எழுதியிருக்கலாம். ஆனால் வெறுமனே கோபா குமாரை விசாரணைக்காக போலீசார் நிறுத்தினார்களா? அல்லது அவர் வேறு ஏதேனும் தவறு செய்தாரா? என்பது தெரியவில்லை.

ஆனால் போலீசார் இவ்வாறு செய்வது இது ஒன்றும் முதல் முறை அல்ல. ஹெல்மெட் அணியவில்லை என்ற காரணத்திற்காக கார் டிரைவர்களுக்கு பல முறை இது போல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர சீட் பெல்ட் அணியவில்லை என்பதற்காக இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இரு சக்கர வாகனத்தில் பயணிப்பவர் எப்படி சீட் பெல்ட் அணிய முடியும்? சமீபத்தில் கோவாவில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ராயல் என்பீல்டு பைக்கை ஓட்டி கொண்டு வந்த ஒருவருக்கு, சீட் பெல்ட் அணியவில்லை என்ற காரணத்திற்காக போலீஸ்காரர் ஒருவர் அபராதம் விதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








