ரோட்டில் போகும் எல்லாரும் ஒரு நிமிஷம் நின்று பார்த்துட்டு போறாங்க... விபத்து என்று எத்தனை பேர் ஏமாந்தீங்க?
இந்தியாவில் கார்களை மாடிஃபிகேஷன் (Modification) செய்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. இருப்பினும், அவ்வாறான கார் மாடிஃபிகேஷன்கள் குறைந்தப்பாடில்லை. அதன் வெளிப்பாடாக, அவ்வப்போது புது, புது கார் மாடிஃபிகேஷன்களை பற்றி தொடர்ந்து பார்த்து வருகிறோம். இருப்பினும், தற்போது இந்த தொகுப்பில் நாம் பார்க்க போகும் மாடிஃபிகேஷன் ஆனது முற்றிலும் விசித்திரமானது ஆகும். சாலையில் இவ்வாறான ஒரு வாகனத்தை நீங்கள் இதுவரையில் பார்த்திருக்க மாட்டீர்கள். அவ்வாறான ஒரு மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வாகனத்தை பற்றித்தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி (Maruti Suzuki)-இல் இருந்து பல்வேறு தரமான வாகனங்கள் கடந்த காலங்களில் இருந்து வெளிவந்துள்ளன. அவற்றுள் ஒன்றாக, ஆம்னி (Omni) வாகனத்தை சொல்லலாம். தற்போது விற்பனையில் இருக்கும் மாருதி சுஸுகி ஈக்கோ (Eeco) வேனுக்கு முன்பு விற்பனையில் இருந்த வேன் மாடல்தான் ஆம்னி ஆகும்.

ஈக்கோவை போலவே, மாருதி சுஸுகி ஆம்னியும் பயணிகளை அழைத்து செல்வதற்கு மற்றும் சரக்கு பொருட்களை ஏற்றி செல்வதற்கு என 2 விதமான உடலமைப்புகளில் விற்பனை செய்யப்பட்டது. சில ஆம்னி வாகனங்கள் இப்போதும் தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளன. அவற்றுள் ஒரு ஆம்னி வாகனத்தை இங்கு சிலர் விசித்திரமான வாகனமாக மாற்றியுள்ளனர்.
எந்த அளவிற்கு விசித்திரமான வாகனம் என்றால், ஆம்னி வாகனத்தை அப்படியே தலைக்கீழாக கவிழ்த்து போட்டு ஓட வைத்துள்ளனர். வாகனத்தை கவிழ்த்து போட்டால், அது எப்படி ஓடும் என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம். இதற்காக, இந்த ஆம்னி வாகனத்தின் மேற்கூரையில் சக்கரங்களை பொருத்தியுள்ளனர்.

ஆனால் அதேநேரம், வாகனத்தில் ஏற்கனவே இருந்த சக்கரங்களை அகற்றவில்லை. இதனால், சட்டெர்ன பார்ப்போர்க்கு இந்த ஆம்னி வாகனம் சாலையில் குப்புற கவிழ்ந்து கிடப்பதுபோல தெரியும். இதற்கேற்ப, மேற்கூரையில் பொருத்தப்பட்ட சக்கரங்கள் மிகவும் சிறியவைகளாக உள்ளன. மேலும், அந்த சக்கரங்கள் முக்கால்வாசி வாகனத்திற்குள் புதைந்து கிடக்கின்றன.
இதனால், இந்த மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வாகனத்தின் மேற்கூரைக்கும் தரைக்கும் இடையே சிறிய இடைவெளி மட்டும்தான் உள்ளதை பார்க்கலாம். இதன் காரணமாக, சாலையின் மேடு, பள்ளங்களில் ஏற்றி, இறக்கினால் வாகனத்தின் அடிப்பகுதி அடிப்படுவதற்கு வாய்ப்புள்ளது. இதுதவிர்த்து, வெள்ளை நிறத்திலான இந்த ஆம்னி வாகனத்தின் வெளிப்பக்கத்தில் வேறு எந்த மாற்றமும் கொண்டுவரப்பட்டதுபோல் தெரியவில்லை.

இதுகுறித்து இன்ஸ்டாகிராம் (Instagram)-இல் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், வாகனத்தின் உட்புறம் காட்டப்படவில்லை. இதனால், வாகனத்திற்குள் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்பதை அறிய முடியவில்லை. வாகனம் மொத்தமாக தலைக்கீழாக மாற்றப்பட்டுள்ளதால், அதற்கேற்ப வாகனத்திற்குள் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டி இருந்திருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அழகிற்காக வாகனத்தில் சிறிய மாற்றங்களை செய்தாலே போலீசார் கொத்தாக பிடித்துவிடுவர். அப்படியிருக்க, இந்த மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட ஆம்னி வாகனத்தை எல்லாம் பார்த்தார்கள் என்றால், வாகனத்தை பறிமுதல் செய்வதோடு, பெரிய அபராதத்தை விதிப்பர். இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவை வைத்து கூட இந்நேரம் சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்திருக்கலாம்.


Click it and Unblock the Notifications









