ஒட்டுமொத்த டோல்கேட் நிர்வாகத்திற்கும் தனி ஆளா தண்ணி காட்டிய இளைஞர்! நாட்டையே திரும்பி பாக்க வெச்சுட்டாரு!
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களுக்கு டோல்கேட் கட்டணங்கள் (Toll Charges) மிகப்பெரிய தலைவலியாக இருந்து வருகின்றன. பல இடங்களில் சாலை தரமாக இல்லை. குண்டும், குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. அத்துடன் வாகன உரிமையாளர்களுக்கான அடிப்படை வசதிகளும் போதுமான அளவில் வழங்கப்படுவதில்லை.
ஆனால் டோல்கேட் கட்டணங்கள் மட்டும் முறையாக வசூல் செய்யப்படுகிறது. அத்துடன் சீரான இடைவெளிகளில், டோல்கேட் கட்டணங்கள் உயர்த்தப்படவும் செய்கின்றன. எனவே வாகனங்களின் உரிமையாளர்கள் மத்தியில் டோல்கேட்களுக்கு எதிராக மிகப்பெரிய அதிருப்தி நிலவி கொண்டுள்ளது. இதன் காரணமாக வாகன உரிமையாளர்களுக்கும், டோல்கேட் ஊழியர்களுக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வருகிறது.

நிறைய வாகன உரிமையாளர்கள், டோல்கேட் கட்டணம் செலுத்த மறுத்து, போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால் இதில் பெரும்பாலும் டோல்கேட் ஊழியர்கள்தான் வெற்றி பெறுகின்றனர். எனினும் வழக்கத்திற்கு மாறாக, டோல்கேட் கட்டணம் செலுத்த மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) காரின் உரிமையாளர் ஒருவர் தற்போது வெற்றி பெற்றுள்ளார். இதுகுறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் ஷென்டோ வி. அன்டோ (Shento V. Anto). இவர் ஒளிப்பதிவாளர் ஆவார். எனவே வேலை காரணமாக அடிக்கடி திருச்சூர் மற்றும் எர்ணாகுளம் ஆகிய பகுதிகளுக்கு, ஷென்டோ வி. அன்டோ காரில் சென்று வருவது வழக்கம்.

இதன்படி சமீபத்தில் அவர் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பனியன்கரா டோல்கேட்டிற்கு, ஹூண்டாய் ஐ20 காரில் சென்றார். அந்த பகுதியில் தற்போது சாலையின் கண்டிஷன் மிகவும் மோசமாக உள்ளது. நிறைய இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது வாகன உரிமையாளர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தி கொண்டுள்ளது.
அத்துடன் நேர விரயமும் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக நிறைய வாகன உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஷென்டோ வி. அன்டோவும் ஒருவர். கடந்த காலங்களில் இந்த சாலையால் நிறைய முறை அவருக்கு மோசமான அனுபவம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கர்ப்பமாக உள்ள தனது சகோதரியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று வரும்போதெல்லாம், மிக கடுமையான பிரச்னைகளை ஷென்டோ வி. அன்டோ சந்தித்துள்ளார்.
எனவே பனியன்கரா டோல்கேட்டில், போராட்டம் நடத்த அவர் முடிவு செய்தார். இதன்படி பாஸ்ட்டேக் (FASTag) ரீசார்ஜ் செய்யாமல், அவர் சமீபத்தில் பனியன்கரா டோல்கேட்டிற்கு, ஹூண்டாய் ஐ20 காரில் சென்றார். அப்போது கட்டணம் செலுத்தும்படி, டோல்கேட் ஊழியர்கள் கூறியுள்ளனர். ஆனால் சேவை மோசமாக இருப்பதால், தன்னால் கட்டணம் செலுத்த முடியாது என ஷென்டோ வி. அன்டோ கூறியுள்ளார்.
அத்துடன் ஒவ்வொரு வாகனம் செல்வதற்காகவும் திறக்கப்படும் பூம் பேரியருக்கு முன்னால், தனது ஹூண்டாய் ஐ20 காரை அவர் நிறுத்தி கொண்டார். நீண்ட நேரமாகியும் அவர் காரை எடுக்கவில்லை. தன்னிடம் கட்டணம் வசூல் செய்யாமல், பூம் பேரியரை திறந்து விட வேண்டும் என்பதுதான் அவர் வைத்த கோரிக்கை.
ஆனால் இதற்கு டோல்கேட் ஊழியர்கள் செவி சாய்ப்பதாக இல்லை. கட்டணம் செலுத்த வேண்டும் என அவர்கள், ஷென்டோ வி. அன்டோவிடம் தொடர்ந்து வலியுறுத்தினர். ஆனால் ஷென்டோ வி. அன்டோவும் கட்டணம் செலுத்துவதாக இல்லை. நேரம் ஆகி கொண்டே இருந்தபோதும், அவர் காரை எடுக்கவில்லை. காருக்கு உள்ளேயே உட்கார்ந்திருந்தார்.
இடையில் டோல்கேட் நிர்வாகம் தரப்பில் பலரும் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ஷென்டோ வி. அன்டோ நிதானத்தை இழக்காமல் அமைதியாக போராட்டம் நடத்தினார். அப்போது ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் கூட இந்த சாலையில் பயணம் செய்ய முடியவில்லை என அவர் டோல்கேட் ஊழியர்களிடம் தெரிவித்தார்.
இப்படியாக சுமார் 10 மணி நேரம் கடந்த நிலையில், டோல்கேட் ஊழியர்கள் வேறு வழியே இல்லாமல், பூம் பேரியரை திறந்து விட்டனர். ஷென்டோ வி. அன்டோவிடம் கட்டணம் வசூல் செய்யவில்லை. இதன் மூலம் இறுதியில் ஷென்டோ வி. அன்டோ இந்த போராட்டத்தில் வெற்றி பெற்றார்.
இடையில் ஷென்டோ வி. அன்டோ சமூக வலை தளங்கள் மூலமாக, அங்கு நடைபெற்ற போராட்டத்தின் அப்டேட்களை, தன்னை பின் தொடர்பவர்களுக்கு வழங்கி கொண்டிருந்தார். ஒரு வகையில் இது டோல்கேட் நிர்வாகத்திற்கு அழுத்தத்தை ஏற்படுத்தி விட்டது. இந்த சம்பவத்தை விளக்கும் வீடியோ, மருநாடன் எக்ஸ்க்ளூசிவ் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் மிகவும் மோசமான நிலையில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் டோல்கேட்களில் வசூல் செய்யப்படும் அதிகப்படியான கட்டணங்கள் ஆகியவற்றால், வாகன உரிமையாளர்கள் எந்த அளவிற்கு விரக்தி அடைந்துள்ளனர்? என்பதற்கு இந்த போராட்டம் ஒரு சிறிய சான்று மட்டுமே.
உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தேசிய நெடுஞ்சாலைகளின் தரத்தை உயர்த்த வேண்டும். அத்துடன் வாகன உரிமையாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால், வரும் காலங்களில் இது போன்று இன்னும் நிறைய போராட்டங்களை டோல்கேட்களில் நாம் காண நேரிடலாம்.


Click it and Unblock the Notifications








