தெரியாமல் கூட இந்த தப்பை செய்திடாதீங்க!! ரூ.2,000 அபராதம் கட்டனும்... நம்ம சென்னை எவ்வளவோ பரவாயில்லை!
கோடை பருவம் முடிவடையும் நாட்களில் இருக்கிறோம். நீர் தட்டுப்பாடு நாட்டில் பல பகுதிகளில் தலைவிரித்தாடுகிறது. நீர் பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் பல மாநில அரசாங்கங்கள் திண்டாடுகின்றன. இந்த வரிசையில், டெல்லி மாநில அரசு நீர் தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில் அதிரடியாக ஒரு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. குறிப்பாக, இந்த நடவடிக்கை கார் வைத்திருப்பவர்களுக்கு பெரிய தலைவலியாக அமைந்துள்ளது. அப்படி என்ன நடவடிக்கையில் டெல்லி மாநில அரசு இறங்கியுள்ளது? இதனால் பாதிக்கப்படுபவர்கள் யார் யார்? என்பது குறித்த கேள்விகளுக்கு பதில்களை இனி பார்க்கலாம்.
கோடை காலம் வந்துவிட்டாலே கூடவே நீர் தட்டுப்பாடும் வந்துவிடும். ஏனெனில், வெப்பநிலை அதிகரிப்பால் நீர் நிலைகளில் நீரின் அளவு வேகமாக குறைய துவங்கும். இதனை முன்னெச்சரிக்கையாக சமாளிக்கும் பொருட்டு, குறிப்பிட்ட அளவு நீர் சேமிக்கப்படும் என்றாலும், அது கோடை பருவத்திற்கு மட்டுமே சரியாக போதுமானதாக இருக்கும்.

இருப்பினும், நாட்டின் சில பகுதிகள் கோடை பருவம் முடியும் தருவாயில் நீர் தட்டுப்பாட்டை சில சமயங்களில் சந்திக்கின்றன. அத்தகைய சூழ்நிலையில், பருவ மழைக்காக காத்திருப்பதை தவிர்த்து வேறு எதுவும் செய்ய முடியாது. அப்படியொரு இக்கட்டான சூழ்நிலையில்தான் தற்சமயம் டெல்லி அரசாங்கம் உள்ளது. தேசிய தலைநகர் டெல்லியில் நீர் பற்றாக்குறை நாளுக்கு நாள் பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது.
நீர் பற்றாக்குறையை சமாளிக்கும் விதமாக சில பல நடவடிக்கைகளை டெல்லி மாநில அரசு தற்போது கையில் எடுத்துள்ளது. அதில் ஒன்று, நீரை கொண்டு கார்களை கழுவுவதற்கான தடை ஆகும். கார்களை கழுவி சுத்தம் செய்வதற்கு மக்கள் அதிகளவில் நீரை பயன்படுத்துவதால், தற்போதைய சூழலில் அந்த நீரை கூட வீணடிக்க கூடாது என டெல்லி அரசு இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த தடையை மீறுவோர்க்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் டெல்லி அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 200 குழுக்களை பணியில் அமர்த்தியுள்ளதாகவும், இவர்கள் டெல்லி முழுவதும் நீர் வீணடிக்கப்படுவதை ஆராய்ந்து அபாரதங்களை விதிப்பர் எனவும் டெல்லி நீர்வள துறை அமைச்சர் அடிஷி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் பேசிய டெல்லி அமைச்சர் அடிஷி, நீர் வளத்தை பாதுகாப்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று, இருப்பினும் டெல்லியில் நிறைய பகுதிகளில் நீர் வீணடிக்கப்படுவதாக கவலை தெரிவித்துள்ளார். டெல்லி மாநில அரசின் இந்த அறிவிப்பால், டெல்லியில் கார் வாஷ் நிறுவனங்கள் தற்காலிகமாக செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது.

தனி நபர் கார் வாஷ் செய்வதை காட்டிலும், ஒவ்வொரு காரை கழுவும் போதும் கார் வாஷ் நிறுவனங்களால் அதிக நீர் பயன்படுத்தப்படுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் கார் வாஷ் வணிகம் சமீப காலத்தில் பெரிய அளவில் வளர்ந்துள்ளது. 2020ஆம் நிலவரப்படி, இந்தியாவில் ஒரு வருடத்தில் கார் வாஷ் துறையின் மொத்த சராசரி மதிப்பு ரூ.7,000 கோடி ஆகும்.
இதில், குறைந்தது ரூ.2,000 கோடியாவது தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் மூலம் கிடைப்பதாக இருக்கலாம். டெல்லியில் காரை கழுவி சுத்தம் செய்து கொடுப்பதற்கு சராசரியாக ரூ.800இல் இருந்து ரூ.1,000 வரையில் வசூலிக்கப்படுகிறது. சொகுசு கார்கள் என்றால் இன்னும் அதிகமாக வசூலிக்கப்படும். சில கார் வாஷ் நிறுவனங்கள் வீட்டிற்கே வந்தும் காரை சுத்தம் செய்துக் கொடுக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு, டெல்லியில் கார் வாஷ் வணிகங்கள் பல்வேறு முறைகளில் மேற்கொள்ளப்பட்டாலும், அவை அனைத்திற்கும் தற்போது தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை எப்போது தளர்த்தப்படும் என்பது குறித்த விபரங்கள் தற்போதைக்கு இல்லை. டெல்லிக்கு முன்பே, நீர் தட்டுப்பாடு காரணமாக பெங்களூர் மற்றும் ஹரியானாவின் குருகிராம் நகரங்களில் கார் வாஷ்க்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








