1,400 சொகுசு கார்களுடன் கவிழ்ந்த கப்பல்: மீட்புப் பணிகள் தீவிரம்!
இங்கிலாந்தில், 1,400 சொகுசு கார்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட கப்பல் சமநிலை சரியில்லாததால், கவிழ்ந்தது. அந்த கப்பலில் இருந்த 25 பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
கப்பலில் ஏற்றப்பட்ட பாரம் சமநிலை இல்லாததால் கப்பல் சாய்ந்திருக்கலாம் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த கப்பலை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

சாய்ந்த கப்பல்
சவுதம்ப்டன் துறைமுகத்திலிருந்து 1,400 சொகுசு கார்களை ஏற்றிக் கொண்டு அந்த கப்பல் புறப்பட்டது. சிறிது நேரத்திலிருந்து கப்பல் ஒருபக்கமாக சாயத் துவங்கியது. இதையடுத்து, அருகிலிருந்து தீவுப்பகுதியின் கரையோரத்தில் கப்பலை மாலுமிகள் செலுத்தியதால், கப்பல் மணல் திட்டில் தரைதட்டி நின்றது. இதனால், கப்பல் மூழ்கும் ஆபத்திலிருந்து தப்பியது. ஆனாலும், அபாயகரமான கோணத்தில் அந்த கப்பல் நிற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1400 கார்கள்
கப்பலின் அடித்தளத்தில் 1,400 விலையுயர்ந்த கார்கள் வைக்கப்பட்டுள்ளன. 1,200 ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் கார்கள், 65 மினி கார்கள், ஒரு ரோல்ஸ்ராய்ஸ் ரெயீத் கார் மற்றும் 105 ஜேசிபி கட்டுமான எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

கார்களின் மதிப்பு
கப்பலில் இருக்கும் கார்கள் மற்றும் இதர சரக்குகளின் மதிப்பு 100 மில்லியன் டாலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்புப் பணிகள்
52 டிகிரி கோணத்தில் சாய்ந்து தரைதட்டி நிற்கும் அந்த கப்பலில் இருந்து 25 பணியாளர்கள் மீட்கப்பட்டுவிட்டனர். கப்பலில் ஒரு பகுதி கார்கள் சேதமடைந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சேதமடையாத கார்களை பத்திரமாக மீட்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. அடுத்த ஒரு சில வாரங்களில் அந்த கார்கள் மீட்கப்படும் என தெரிகிறது.

கப்பலையும் மீட்க தீவிரம்
50,000 டன் எடைகொண்ட அந்த கப்பல் தரைதட்டிய போதும், அதிக சேதம் இல்லாவிட்டால், மீண்டும் அந்த கப்பலை மீட்டு இயக்குவதற்கான வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பெரிய அளவில் சேதமடைந்திருக்காது என்பதும் அவர்களது கணிப்பாக உள்ளது.

மனித தவறா?
கப்பலில் சுமை ஏற்றும்போது சமமாக ஏற்றப்படாததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும், இதற்கு மனித தவறே காரணமாக இருக்க முடியும் என்றும் பாதுகாப்பு வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கப்பல் போக்குவரத்து
கப்பல் விபத்தால், அந்த பகுதியில் கப்பல் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை என சவுதம்ப்டன் துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








