இனி ரோட்டு ஓரத்துல வண்டிய நிறுத்த யாருக்கும் தைரியம் வராது! அரசின் திடீர் உத்தரவால் கலக்கத்தில் உரிமையாளர்கள்!
இந்தியாவில் நகரமயமாதல் முன்னெப்போதையும் விட தற்போது மிகவும் வேகமாக உள்ளது. சென்னை (Chennai), பெங்களூர் (Bangalore), மும்பை (Mumbai) போன்ற பெரு நகரங்கள் மிக வேகமாக விரிவடைந்து வருகின்றன. வேலைவாய்ப்பிற்காக பொதுமக்கள் பலரும், பெரு நகரங்களை நோக்கி படையெடுத்து கொண்டிருப்பதுதான் இதற்கு மிக முக்கியமான காரணம்.
இதனால் பெரு நகரங்களில் வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்து, அதன் விளைவாக போக்குவரத்து நெரிசல் பிரச்னையும் தலை விரித்தாட தொடங்கியுள்ளது. நிலைமை இவ்வாறு இருக்க, ஒரு சிலர் வாகனங்களை தங்கள் இஷ்டத்திற்கு ஆங்காங்கே நிறுத்தி சென்று விடுகின்றனர். வாகனங்களை மீண்டும் எடுப்பதற்கு நீண்ட காலம் எடுத்து கொள்கின்றனர்.

இந்தியாவில் ஏற்கனவே சாலைகள் மிகவும் குறுகலானவையாக உள்ளன. இது போதாதென்று வாகனங்களை வேறு நிறுத்தி கொள்வதால், அவை சாலையை அடைத்து கொள்கின்றன. கணிசமான பரப்பை இவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்கள் ஆக்கிரமித்து கொள்வதும், இந்தியாவில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு ஒரு காரணமாக உள்ளது.
எனவே இனி ஒரே இடத்தில் 8 அல்லது அதற்கும் மேற்பட்ட நாட்கள் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள், அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமியாக கருதப்படும் கோவாவில்தான் (Goa) இந்த புதிய உத்தரவு தற்போது அதிரடியாக பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டத்தின்படி, 8 அல்லது அதற்கும் மேற்பட்ட நாட்கள் சாலையில் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படும். இதற்கு பிறகும் கூட வாகனங்கள் அங்கிருந்து எடுக்கப்படவில்லை என்றால், அவை அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படும்.
நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகு, அதன் உரிமையாளர் வாகனத்திற்கு உரிமை கோர முடியாது. கோவா மாநில தலைநகர் பனாஜியில் (Panaji), ஏற்கனவே 250 வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர். இவை உரிமை கோரப்படாமல் நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தவை ஆகும்.
இந்திய சாலைகளின் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு மற்றொரு முக்கியமான காரணம் என்னவென்றால், மெக்கானிக் ஷாப்கள்தான். அவற்றின் ஊழியர்கள், வாகனங்களை சாலையோரங்களிலேயே நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். இது சில சமயங்களில் மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட காரணமாக அமைந்து விடுகிறது.
எனவே இப்படிப்பட்ட மெக்கானிக் ஷாப்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவா மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த அதிரடியான புதிய உத்தரவின் மூலம், சாலைகளில் போக்குவரத்து இயக்கம் பாதிப்புகள் இல்லாமல் சீராக இருக்கும் என நம்புவதாகவும் கோவா மாநில அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இது போன்ற நடவடிக்கைகள் அவசியமான ஒன்றுதான். கடுமையான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே, வாகன உரிமையாளர்கள் சாலைகளில் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வது குறையும். இதன் மூலம் போக்குவரத்து இயக்கம் சீராக இருக்கும் என நாங்களும் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








