பைக் மீது மோதிட்டு காரை நிறுத்தாம போனது அந்த கபடி வீராங்கனையா! உண்மை முகத்தை மோப்பம் பிடித்த போலீஸ்!
இந்தியாவில் தினமும் ஏராளமான சாலை விபத்துக்கள் (Road Accidents) நடைபெற்று வருகின்றன. ஆனால் ஒரு சில சமயங்களில், சாலை விபத்துக்களை ஏற்படுத்திய வாகனங்களை இயக்கியவர்கள், நிற்காமல் தப்பி சென்று விடுகின்றனர். இது போன்ற வழக்குகளில், கடந்த காலங்களில் ஏராளமான பிரபலங்கள் சிக்கியுள்ளனர்.
இந்த வரிசையில், விபத்தை ஏற்படுத்தி விட்டு, நிற்காமல் தப்பி சென்ற பிரபல நடிகை ஒருவர், தற்போது காவல் துறை வசம் சிக்கியுள்ளார். அவர் திவ்யா சுரேஷ் (Divya Suresh) ஆவார். இவர் கன்னட மொழி திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். அத்துடன் 2021ம் ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் கன்னடா 8 (Bigg Boss Kannada 8) நிகழ்ச்சியிலும், திவ்யா சுரேஷ் போட்டியாளராக கலந்து கொண்டார்.

இந்த சூழலில், திவ்யா சுரேஷ் ஓட்டி சென்ற கியா சொனெட் (Kia Sonet) கார், கடந்த அக்டோபர் 4ம் தேதி அதிகாலை 1.30 மணி அளவில் விபத்தில் சிக்கியது. பெங்களூர் (Bangalore) நகரில், வளைவு ஒன்றில் திரும்பும்போது, அவரது கார், ஒரு டூவீலரின் மீது மோதியது.
ஆனால் திவ்யா சுரேஷ், காரை நிறுத்தாமல் சென்று விட்டார். ஆரம்பத்தில் இருந்தே, விபத்திற்கு காரணமான கியா சொனெட் காரை ஓட்டியது, நடிகை திவ்யா சுரேஷ்தான் என சந்தேகம் எழுந்தது. அதை பெங்களூர் காவல் துறை அதிகாரிகள் தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர். விசாரணையில், விபத்து நிகழ்ந்தபோது, கியா சொனெட் காரை இயக்கியது அவர்தான் என்பது தெரிய வந்துள்ளது.

விபத்து நடைபெற்றபோது, டூவீலரில் 3 பேர் வந்துள்ளனர். கிரண், அனுஷா மற்றும் அனிதா ஆகியோர் ஆவர். ஆனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பி விட்டனர். தற்போது திவ்யா சுரேஷ் மீது காவல் துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். அத்துடன் அவர் ஓட்டி வந்த கியா சொனெட் கார் அதிரடியாக பறிமுதலும் செய்யப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை பப்ளிக் டிவி வெளியிட்டுள்ளது. இந்த காட்சிகளை பார்த்தால், டூவீலர் ராங் சைடில் வந்தது தெளிவாக புரியும். அதாவது இந்தியாவில் வாகனங்கள் சாலையின் இடது பக்கத்தில்தான் (Left Side) செல்ல வேண்டும். வலது பக்கத்தில்தான் (Right Side) வர வேண்டும்.
ஆனால் இதற்கு நேர்மாறாக டூவீலர், வலது பக்கத்தில் வந்துள்ளது. எனினும் இதற்கு தெரு நாய்கள் ஒரு காரணமாக இருக்கலாம். டூவீலரை நாய்கள் துரத்துவதையும் நம்மால் வீடியோவில் பார்க்க முடிகிறது. இதன் காரணமாக டூவீலரை ஓட்டி வந்தவர், வலது பக்கத்திற்கு சென்றிருக்கலாம். எனவே இந்த விபத்திற்கு தெரு நாய்கள் மிக முக்கியமான ஒரு காரணமாக கருதப்படுகின்றன.
இருப்பினும் திவ்யா சுரேஷ், காரை நிறுத்தாமல் சென்றது தவறுதான். அவர் காரை நிறுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி கிடைப்பதை உறுதி செய்திருக்க வேண்டும். அதை விடுத்து விட்டு, அவர் அங்கிருந்து தப்பி சென்றதை ஏற்று கொள்ள முடியாது. இது குறித்து பெங்களூர் காவல் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதன் முடிவில், தவறு செய்தது யாராக இருந்தாலும் உரிய தண்டனை வழங்கப்படும் என நாம் நம்பலாம். தற்போது வழக்கில் சிக்கியுள்ள பிரபல நடிகை திவ்யா சுரேஷ், தொழில் முறை கபடி வீராங்கனை (Kabaddi Player) என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








