டயர்களில் ஏன் மஞ்சள் கோடுகள் இருக்கின்றன தெரியுமா? இந்த விஷயம் தெரிந்தால் உங்களை யாரும் ஏமாத்த முடியாது!
சியட் நிறுவனம் புதிய டயர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உங்கள் கார் மற்றும் சாலை ஆகியவற்றுக்கு இடையே இருக்கும் ஒரே ஒரு நேரடி தொடர்பு டயர்கள்தான். காரின் பாகங்களில் டயர்கள் மிகவும் முக்கியமானவை. காரின் மைலேஜ் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கும், டயர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. டயர்கள் நல்ல கண்டிஷனில் இருந்தால், கார் சிறப்பான மைலேஜை வழங்கும்.

அதேபோல் செயல்திறனும் மிகவும் சிறப்பாக இருக்கும். மாறாக டயர்கள் மோசமான கண்டிஷனில் இருந்தால், இவை இரண்டும் அப்படியே தலைகீழாக நடக்கும். அதாவது காரின் மைலேஜ் குறையும். அத்துடன் செயல்திறனும் மோசமாக இருக்கும். எனவே குறிப்பிட்ட கால இடைவெளிகளில் காரின் டயர்களை கண்டிப்பாக மாற்றி விட வேண்டும்.

ஆனால் டயர்களை எப்போது மாற்ற வேண்டும்? என்பது பலருக்கும் தெரிவதில்லை. டயர்களில் ஏற்பட்டுள்ள தேய்மானத்தை வைத்து இதனை கண்டறியலாம். ஆனால் நம்மில் பலருக்கும், இந்த விஷயம் அவ்வளவு துல்லியமாக தெரிவதில்லை. எனவே சில சமயங்களில் மெக்கானிக்குகளின் உதவியை நாட வேண்டியிருக்கிறது.

நாம் நாடுவது நம்பிக்கையான மெக்கானிக் என்றால் பிரச்னையில்லை. அவர் உள்ளதை உள்ளபடி சொல்லி விடுவார். ஆனால் அவ்வளவாக அறிமுகம் இல்லாத மெக்கானிக்குகளிடம் செல்லும்போது, டயர்களை மாற்றும் விஷயத்தில், சில சமயங்களில் கார் உரிமையாளர்கள் ஏமாற்றப்படும் நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. ஆனால் இந்த பிரச்னைக்கு சியட் (Ceat) நிறுவனம் தற்போது முடிவு கட்டியுள்ளது.

'கலர் த்ரெட் வியர் இன்டிகேட்டர் டயர்கள்' (Colour Tread Wear Indicator Tyres) சியட் நிறுவனத்தால் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. டயர்களை எப்போது மாற்ற வேண்டும்? என்பதை, கார் உரிமையாளர்களுக்கு இது எளிதாக உணர்த்தி விடும். மாற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது என்ற அறிகுறியை, இந்த டயர்களே கார் உரிமையாளர்களுக்கு காட்டி விடும்.

இதற்காக டயரின் த்ரெட் போர்ஷனில் (Tread Portion), மஞ்சள் நிற பட்டை பதிக்கப்பட்டிருக்கும். புதிய டயர்களில் அவை தெரியாது. அதே நேரத்தில் டயர் தேய்ந்து போகும்போது, இந்த மஞ்சள் நிற பட்டை கண்களுக்கு தெரிய தொடங்கும். இதன் மூலம் டயர்களை மாற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதை புரிந்து கொள்ளலாம்.

மாற்ற வேண்டிய நேரத்தை டயர்களே குறிப்பால் உணர்த்தி விடுவதால், கார் உரிமையாளர்களின் பணி சுலபமாகிறது. அவர்கள் சரியான நேரத்தில் டயர்களை மாற்றி விட முடியும். அத்துடன் மற்றவர்கள் மூலம் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புகளும் குறையும். எனவே இந்த புதிய டயர்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய டயரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள சியட் நிறுவனம், இந்தியாவை சேர்ந்தது ஆகும். ஆர்பிஜி குழுமத்தால் (RPG Group) சியட் நிறுவனம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. ஆர்பிஜி குழுமத்தின் ஒரு அங்கமாக செயல்பட்டு வரும் சியட் நிறுவனம் பல்வேறு வகையான வாகனங்களுக்கான டயர்களை உற்பத்தி செய்து வருகிறது.

இதன்படி பயணிகள் கார்கள், இரு சக்கர வாகனங்கள், பஸ்கள், லாரிகள், இலகு ரக வர்த்தக வாகனங்கள், டிராக்டர்கள், ஆட்டோ ரிக்ஸாக்கள் போன்ற பல்வேறு வகையான வாகனங்களுக்கான டயர்களை சியட் நிறுவனம் உற்பத்தி செய்து கொண்டுள்ளது. மேலும் எர்த் மூவர்கள் மற்றும் ஃபோர்க்லிஃப்ட்கள் ஆகியவற்றுக்கான டயர்களும் கூட சியட் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் சியட் நிறுவனம் தற்போது தனது வாகன டயர்களை விற்பனை செய்து வருகிறது. அத்துடன் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலருக்கும் சியட் நிறுவனம் பேட் ஸ்பான்சராகவும் (Bat Sponsor) இருந்து கொண்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். அவர்களின் பேட்களில் நீங்கள் சியட் நிறுவனத்தின் விளம்பர ஸ்டிக்கர்களை காண முடியும்.


Click it and Unblock the Notifications








