டோல்கேட்டை எல்லாம் அகற்ற போறாங்களாம்.... ஆனால் பணம் மட்டும் கட்டியே ஆகனும் எப்படித் தெரியுமா?
இந்தியாவில் சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட்டேக் மூலம் டோல்கேட் கட்டண வசூல் முறையை மாற்றி புதிய முறையில் டோல்கேட்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது உள்ள டோல்கேட்கள் அகற்றப்படவுள்ளன. புதிய முறை என்றால் என்ன விரிவாகக் காணலாம்.

இந்தியா கடந்த 20 ஆண்டுகளில் சாலை போக்குவரத்தில் மிகப்பெரிய அளவு வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. குறிப்பாகப் பெரிய நகரங்கள் எல்லாம் நெடுஞ்சாலைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. அதனால் ஒரு நகரிலிருந்து மற்றொரு நகருக்குப் போக்குவரத்து என்பது எளிமையாகிவிட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பு 10 மணி நேரமாக இருந்த பயணம் தற்போது 6 மணி நேரம் என்கிற அளவில் சுருங்கியுள்ளது.

நெடுஞ்சாலைகள் அகலமாகவும் தரமாகவும் இருப்பதால் வாகனங்கள் வேகமாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல முடியும். மேலும் நெடுஞ்சாலைகள் வேகமாகச் சென்றாலும் பாதுகாப்பாகவும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த நெடுஞ்சாலைகள் எல்லாம் கோடிக்கணக்கான ரூபாய் முதலீட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இந்த நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்குச் சுங்க வரிகள் வசூலிக்கப்பட்டது. அதனால் நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரு சுங்கச் சாவடி என இந்தியா முழுவதும் ஏராளமான சுங்கச் சாவடிகள் உள்ளன.

நீண்ட நாட்களாக இந்த சுங்கச் சாவடியில் பணம் கட்டி அன் மூலம் பயணிக்கும் நடைமுறை தான் அமலிலிருந்தது. பின்னர் பணம் கட்டும் முறை மாற்றப்பட்டு வாகனங்களுக்கு ஃபாஸ்ட் டேக் முறை கொண்டு வரப்பட்டது. சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் இதை நடைமுறை மூலம் வாகனங்கள் சுங்கச் சாவடிகளை எளிதில் கடக்க முடியும் என இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.

ஆனால் இந்த ஃபாஸ்ட் டேக் முறை வந்த பின்பும் இந்தியாவில் பல சுங்கச்சாவடிகளில் இன்றும் நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்பதைக் காண முடியும். இந்நிலையில் இந்திய அரசின் தகவலின்படி இந்தியாவில் தற்போது உள்ள ஃபாஸ்ட் டேக் முறையில் பணம் செலுத்தி ஒரு வாகனம் சுங்கச் சாவடியைக் கடக்க 47 விநாடிகள் வரை ஆவதாகத் தெரிவித்துள்ளது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையிலும் சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.

இதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்த போது சிலர் ஃபாஸ்ட் டேக்களை முறையா ரீசார்ஜ் செய்யாமல் பணம் முழுவதும் காலியான நிலையில் பயணம் செய்கிறார்கள் அது தான் காரணம் எனச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண மத்திய போக்குவரத்துத் துறை நீண்ட காலமாக ஆலோசனை நடத்தி வருகிறது.

இதன்படி இதற்காக நடந்த ஆலோசனையில் ஜிபிஎஸ் முறையில் டோல்கேட் கட்டணம் செலுத்தும் முறை மற்றும் நம்பர் பிளேட் ரீடிங் முறையில் டோல்கேட் கட்டணம் செலுத்தும் முறை என இரண்டு தானியங்கியாகச் செயல்படும் முறைகள் ஆய்விற்காக எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் எந்த முறையைத் தேர்வு செய்து செயல்பாட்டிற்குக் கொண்டு வருவது என்ற கலந்தாய்வு நடந்தது.

அதன்படி தற்போது நம்பர் பிளேட் ரீடிங் முறையில் இனி சுங்கச்சாவடி கட்டணத்தை வசூலிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி தற்போது இந்தியாவில் உள்ள சுங்கச்சாவடிகள் எல்லாம் அகற்றப்படும். அங்கு நம்பர் பிளேட் ரீடிங் கருவிகள் பொருத்தப்படும்.

அந்த கருவி அந்த பகுதி வழியாகக் கடந்து செல்லும் வாகனத்தின் நம்பர் பிளேட்களில் உள்ள நம்பரை எடுத்துவிடும். அந்த நம்பர் எந்த வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதோ அந்த வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாகப் பணம் கழிக்கப்படும். இதன் மூலம் வாகனங்கள் சுங்கச்சாவடியில் நிறுத்தப்படாது. இதனால் நீண்ட தூரம் ஏற்படும் டிராஃபிக் குறையும்.

கடந்த 2019ம் ஆண்டு முதல் வாகன தயாரிப்பு நிறுவனங்களே நம்பர் பிளேட்டை அச்சிட்டு வழங்குகின்றன. அந்த நம்பர் பிளேட்களை இந்த நம்பர் பிளேட் ரீடர் எளிதாக கேப்சர் செய்து விடும். அதற்கு முன்பு வாங்கப்பட்ட வாகனங்களுக்கான நம்பர் பிளேட்கள் எளிதாகப் புரியும்படி மாற்ற அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த சுங்கச்சாவடிகளை அகற்றி நம்பர் பிளேட் ரீடர் மூலம் சுங்க கட்டணத்தை வசூலிக்கும் முறை இன்னும் 6 மாதத்திற்குள் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 97 சதவீதமான வாகன ஓட்டிகள் ஃபாஸ்ட் டேக் மூலமே கட்டணத்தைச் செலுத்தி வருகின்றனர். 3 சதவீதத்தினர் மட்டுமே பணமாக சுங்கச்சாவடி கட்டணத்தைப் பணமாகக் கட்டுகின்றனர். பணமாகக் கட்டும் பட்சத்தில் இரண்டு மடங்கு பணம் கட்ட வேண்டும். ஆனால் இது எல்லாம் இன்னும் 6 மாதத்தில் மாறும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








