சுங்கச்சாவடியை அதிகரிக்க மத்திய அரசு நூதன திட்டம்.... மாநில அரசின் அடிமடியிலேயே கையை வைத்தது...
மத்திய அரசு, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலைகளை கைபற்றி அங்கும் சுங்கச்சாவடிகளை அமைத்து வசூலிக்கும் நடவடிக்கைகளில் தற்போது இறங்கியுள்ளது. இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் நெடுஞ்சாலைகள் இரண்டு விதமாக இருக்கிறது தேசிய நெடுஞ்சாலைகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலும், மாநில நெடுஞ்சாலைகள் மாநில அரசின் கட்டுப்பாட்டிலும் இருக்கிறது. அதன்படி இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளைக் கட்டமைத்து அதில் மத்திய அரசு சுங்கச்சாவடிகளைக் கட்டமைத்து அதன் மூலம் அந்த வழியாகச் செல்லும் வாகனங்களுக்கு வரி விதிக்கின்றனர். இன்று நீண்ட தூரம் பயணிக்கும் வாகனங்களுக்கு எல்லாம் நெடுஞ்சாலை தான் சிறந்த தேர்வாக இருக்கிறது.

தேசிய நெடுஞ்சாலைகள் கட்டமைக்கப்படும் போது சுங்கச்சாவடி வசூல் கட்டமைப்பிற்கான கட்டணத்தைத் திரும்பப் பெறும் வரை இருக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அதையும் தாண்டி பராமரிப்பு செலவுகளுக்காக வசூல் செய்யப்படுகிறது.

இந்நிலையில் மத்திய அரசும் தொடர்ந்து தனது நெடுஞ்சாலை பணிகளை விரிவுபடுத்திக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் தற்போது புதிய முயற்சியாக மாநில அரசின் நெடுஞ்சாலைகளையும் கைப்பற்றத் திட்டமிட்டு வருகிறது.

அதன்படி தற்போது மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் நெடுஞ்சாலைகளில் அதிக போக்குவரத்து நெருக்கடி நிறைந்த சாலைகளை மத்திய அரசு எடுத்து அந்த சாலைகளில் 4 அல்லது 6 வழிச் சாலைகளாக மாற்றி அதில் சுங்கச்சாவடிகளை நிறுவி கட்டணம் வசூலிக்கும் புதிய திட்டம் ஒன்றை வகுத்துவருவதாக மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இவர் ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டார். அதில் அவர் பேசிய போது :"முதலீட்டுச் சந்தை இந்தியாவின் கட்டமைப்பு வளர்ச்சிக்காக புதிய மாடல்களை உருவாக்க வேண்டும். ppp மாடலில் முதலீடு செய்வது மூலம் இந்தியா உலக அளவில் முதன்மை பெறும். நாம் நமது முதலீடுகளைக் கழிவு மேலாண்மை, பசுமை ஹைட்ரஜன், சோலார் உள்ளிட்டவற்றில் செய்வது மூலம் பல நன்மைகளைப் பெற முடியும். புதுமை, தொழில்முனைவு, அறிவியல், தொழிற்நுட்பம் இது தான் எதிர்கால இந்தியாவின் சொத்துக்களாக அமையும்.

இந்தியாவில் தற்போது பெரும்பாலான பகுதிகளில் நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டு விட்டன. தற்போது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல நெடுஞ்சாலைகள் மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதற்காக மாநில அரசுகளிடமிருந்து இந்த சாலைகளை 25 ஆண்டுகள் மத்திய அரசு எடுத்து அதை 4-6 வழிச் சாலைகளாக மாற்றத் திட்டமிட்டு வருகிறது" எனப் பேசினார்.

இந்த திட்டத்தின் படி மாநில
அரசின் கட்டுப்பாட்டில் உள்ள குறிப்பிட்ட நெடுஞ்சாலைகளை மட்டும் மத்திய அரசு எடுத்து அதை 4-6 வழிச் சாலைகளாகக் கட்டமைத்து அதில் சுங்கச்சாவடிகளை அமைத்து அதன்மூலம் பணம் வசூலித்து நெடுஞ்சாலைகளைக் கட்டமைத்தற்கான பணத்தைத் திரும்பப் பெறும். இதன் பின்னர் நெடுஞ்சாலைகள் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மாநில அரசுகளிடமே ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டால் அதற்கான பணத்தை 12-13 ஆண்டுகளில் மத்திய அரசால் எடுத்துவிட முடியும். மேலும் அதன் பின்னர் பராமரிப்பு பணிகளுக்கான பணம் என மொத்தம் 25 ஆண்டுகளுக்கு சுங்கச்சாவடி மூலம் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே மக்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி கட்டணம் அதிகமாக இருப்பதாகக் கருதி வருகின்றனர். தற்போது மாநில அரசுகளின் நெடுஞ்சாலைகளிலும் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டால் மக்கள் அதிகம் அவதிப்படுவார்கள் எனப் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது மட்டுமல்ல மத்திய அரசு தற்போது செயல்பாட்டிலிருக்கும் சுங்க கட்டண வசூல் முறையை முற்றிலுமாக மாற்றத் திட்டமிட்டு வருகிறது. தற்போது ஃபாஸ்ட்டேக் முறையில் மாற்றப்பட்டதையும் மாற்றி ஜிபிஎஸ் முறை அல்லது, நம்பர் பிளேட் ரீடிங் முறை என்ற ஏதேனும் ஒரு முறையில் சுங்க கட்டணங்களை நேரடியாக வாகன உரிமையாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்து கழித்துக்கொள்ளும் திட்டம் குறித்து ஆய்வு நடந்து வருகிறது.

இன்னும் ஒரு சில மாதங்களில் இதற்கான முடிவுகள் எட்டப்பட்டு, தற்போது உள்ள சுங்கச்சாவடிகள் எல்லாம் அப்புறப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிச் செய்வதன் மூலம் சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.

நாட்டின் வளர்ச்சிக்கு வேகமான, பாதுகாப்பான போக்குவரத்து அவசியம். அதனால் நெடுஞ்சாலைகள் அவசியமான ஒன்றாகிறது. ஆனால் அதற்காக விதிக்கப்படும் கட்டணம் மிக அதிகமாக இருப்பதாக மக்கள் கருதுகின்றனர். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








