சீட் பெல்ட் அலாரத்தை கட் செய்யும் கருவிகளை விக்காதீங்க! அமேசான் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை
மத்திய போக்குவரத்துத் துறை கேட்டுக் கொண்டதற்கு இணங்க மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் இ காமர்ஸ் நிறுவனங்களுக்கு சீட் பெல்ட் அலாரத்தை கட் செய்யும் கருவிகளை விற்கத் தடை விதிக்கச் சொல்லி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

சமீபத்தில் குஜராத்திலிருந்து மும்பையிற்கு காரில் வந்து கொண்டிருந்த டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் பலியானார். அவர் மெர்சிடீஸ் ஜிஎல்சி காரில் பயணித்துக்கொண்டிருந்தார். அவர் தனது நண்பர் ஜஹாங்கீர் உடன் காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்தார்.

அவர் கார் பின் சீட்டில் அமர்ந்திருக்கும்போது சீட் பெல்ட் அணியாதது தான் அவரது மரணத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. அதாவது கார் வேகமாக வந்து மோதியபோது பின் சீட்டில் அமர்ந்திருந்தவர் அதிக வேகத்தில் முன்பக்கம் தூக்கி வீசப்பட்டிருப்பார். அதனால் ஏற்பட்ட அடியால் அவர் உயிரிழந்திருப்பார் என விபத்து குறித்து விசாரித்தவர்கள் கூறுகின்றனர்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கார்களில் பின் சீட்டில் உள்ளவர்கள் சீட் பெல்ட் அணியவில்லை என்றாலும் அலாரம் அடிக்கும்படி கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கான விதியை மாற்றவுள்ளதாகக் கூறியிருந்தார்.

தற்போது கார்களில் முன்பக்கம் உள்ள 2 சீட்களிலும் அமர்ந்திருப்பவர் சீட் பெல்ட் அணியவில்லை என்றால் கார் கிளம்பியதும் அதை எச்சரிக்கும் வகையில் அலாரம் அடிக்கும். இனி அது பின் சீட்டில் அமர்ந்திருப்பவர்கள் சீட் பெல்ட் அணியவில்லை என்றாலும் அலாரம் அடிக்க வேண்டும் என விதிமுறைகளை மாற்றவுள்ளதாகத் தெரிவித்தார்.

அப்பொழுது மார்கெட்டில் தற்போது சீட் பெல்ட் அலாரத்தை தடுக்கும் பல கருவிகள் உள்ளது உதாரணமாக சீட் பெல்ட் கிளிப்கள் உள்ளது. இது சீட் பெல்ட்டை மாட்டவில்லை என்றாலும் மாட்டியதாகக் கணக்குக் காட்டும். இப்படியான கருவிகளுக்குத் தடை விதிக்கப்படும் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் கடந்த மே மாதம் மத்திய போக்குவரத்துத் துறை கடிதம் மூலம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அனைத்து விதமான இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கும் சமீபத்தில் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.

அந்த நோட்டீஸில் வாகனங்களில் உள்ள சீட் பெல்ட் அலாரத்தை நிறுத்தும் அத்தனை விதமான கருவிகளையும் விற்பனை செய்யக்கூடாது என நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மீறி விற்பனை செய்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

இந்தியாவில் தற்போது வரை கார்களில் பயணம் செய்யும் அத்தனை நபர்களும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. மீறுபவர்களுக்கு ரூ1000 அபராதம் விதிக்கப்படும் எனவும் மோட்டார் வாகன சட்டம் சொல்கிறது. ஆனால் பெரும்பாலான மக்கள் முன் சீட்டில் இருப்பவர்கள் மட்டுமே சீட் பெல்ட் அணிய வேண்டும் எனக் கருதுகின்றனர்.

பின் சீட்டில் இருப்பவர்களும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற புரிதல் சரியாக மக்களிடம் இல்லை. இந்நிலையில் மத்திய அரசு பின் சீட்டில் அமர்ந்திருக்கும் நபர்களும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த முயற்சித்து வருகிறது.

இது மட்டுமல்ல கார் தயாரிப்பு நிறுவனங்களிடம் இந்தியாவில் விற்பனைக்கு வரும் கார்களில் 6 ஏர்பேக்கள் மற்றும் பின் சீட்டிலும் 3 பாயிண்ட் சீட் பெல்ட்களை கட்டாயமாக்கப் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








