பெட்ரோல் பங்க் மாதிரி ஒவ்வொரு ஏரியாவிலும் இருக்க போகுது! நிதி ஒதுக்கியாச்சு.. இவி புக்கிங்கை போட வேண்டியதுதான்
எலக்ட்ரிக் வாகனங்களை (Electric Vehicles) ஊக்குவிப்பதில் நமது இந்திய அரசாங்கமும் ஒன்று ஆகும். சுற்றுச்சூழலை பாதுகாப்பதோடு, வெளிநாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க முடியும் என்பதற்காகவே எலக்ட்ரிக் வாகனங்கள் விஷயத்தில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ஃபேம்-2 (FAME-2) திட்டத்தின்கீழ் 2019இல் இருந்து மானியம் வழங்கிவரும் மத்திய அரசு, சமீபத்தில் புதியதாக பிரதமர் இ-டிரைவ் (PM E-Drive) திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த நிலையில், இந்த திட்டத்தின் கீழ் அதிரடியான ஒரு அறிவிப்பு வெளிவர உள்ளது. அதனை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
புதிய பிரதமர் இ-டிரைவ் திட்டத்தை செயல்படுத்தி வருவது, மத்திய அமைச்சரவையில் உள்ள கனரக தொழில்துறை அமைச்சகம் ஆகும். தற்சமயம் இந்த துறைக்கான மத்திய அமைச்சராக இருப்பவர், முன்னாள் கர்நாடக முதல்வர் எச்டி குமாரசாமி ஆவார். இவரது தலைமையில் சமீபத்தில் கனரக தொழில்துறை அமைச்சகத்தின் முக்கிய அதிகாரிகள் உடன் ஆலோசனை நடைபெற்றது.

கனரக தொழில்துறை அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரிகள் மட்டுமின்றி, மத்திய பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு துறையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் மத்திய சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரிகள் என அமைச்சகங்களுக்கு இடையேயான ஆலோசனை கூட்டமாக இது இருந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தின் முக்கிய நோக்கமே இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் உள்கட்டமைப்புகளை கொண்டுவருவதை எவ்வாறு விரைவுப்படுத்துவது என்பதாகும்.
இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில், எலக்ட்ரிக் 4-சக்கர வாகனங்களுக்காக 22 ஆயிரத்து 100 ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) நிலையங்களும், எலக்ட்ரிக் பேருந்துகளுக்காக (Electric Bus) 1,800 ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்களும் நிறுவப்பட உள்ளன. இவை பெரும்பாலும், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஓட்டி அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

50 தேசிய நெடுஞ்சாலை வழித்தடங்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுவிட்டன. இவை இல்லாமல், எலக்ட்ரிக் 2-வீலர்கள் மற்றும் எலக்ட்ரிக் 3-வீலர்களுக்காக 48 ஆயிரத்து 400 ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்பட உள்ளன. இவை நகரங்களுக்குள் மற்றும் கிராமங்களுக்கு இடையே நிறுவப்படலாம். முக்கியமாக, எலகட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துவரும் மெட்ரோ நகரங்களில் இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்பட உள்ளன.
ஒட்டுமொத்தமாக 72,000 புதிய ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்கள் நாடு முழுவதும் அமைக்கப்பட உள்ளன. இவை அனைத்திற்காகவும் மொத்தம் ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் 2-வீலர்கள் மற்றும் எலக்ட்ரிக் 3-வீலர்களில் சிறிய அளவிலான பேட்டரி தான் பொருத்தப்படுகிறது. அதனை சார்ஜ் செய்ய குறைந்த திறன் கொண்ட சார்ஜரே போதுமானது.

ஆனால், எலக்ட்ரிக் கார்கள், எலக்ட்ரிக் வேன்கள் போன்றவை அதிக தூரத்திற்கு இயங்குவதற்காக பெரிய அளவிலான பேட்டரியை பெறுகின்றன. ஆதலால், அவற்றை சார்ஜ் செய்வதற்கும் பவர்ஃபுல்லான சார்ஜர் தேவைப்படுகிறது. எலக்ட்ரிக் பேருந்துகள் இன்னும் பெரிய அளவிலான பேட்டரி பேக்கை பெறுகின்றன. அவற்றை விரைவாக சார்ஜ் செய்வதற்கு மிகவும் திறன்மிக்க ஃபாஸ்ட் சார்ஜர்கள் தேவைப்படும்.
ஆதலால்தான், ஒவ்வொரு விதமான எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ஏற்றவாறு ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்கள் மத்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட உள்ளன. வாகனங்கள் உடன் மக்கள் அதிகம் கூடும் சுங்கச்சாவடிகள், இரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் பெட்ரோல்/ டீசல் நிலையங்களுக்கு அருகே இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்களை நிறுவ மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலக்ட்ரிக் 2-வீலர்கள் & 3-வீலர்களுக்கு 48,400 பரவாயில்லை. ஆனால், எலக்ட்ரிக் 4-வீலர்களுக்கு 22,100 ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்கள் என்பது கொஞ்சம் குறைவாக தோன்றுகிறது. ஆனால், இந்த எண்ணிக்கைகளை பலக்கட்ட ஆய்வுகளுக்கு பின்பே மத்திய கனரக தொழில்துறை அதிகாரிகள் தீர்மானித்து இருப்பர் என நம்புகிறோம். வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் நம்புவோம்.


Click it and Unblock the Notifications









