பாகிஸ்தானோ-சீனாவோ இந்தியா கிட்ட வால் ஆட்ட முடியாது.. மாஸ்டர் பிளானை போட்டு அதற்கான தொகையையும் ஒதுக்கிட்டாங்க!
விரைவில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க பயணத்தை மேற்கொள்ள இருக்கின்றார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இந்தியா-அமெரிக்கா இடையே ஜெட் விமானங்களுக்கான எஞ்ஜினை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தம் போடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாகவும், நாட்டின் பலத்தை அதிகரிக்க செய்யும் விதமாகவும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.
இதன் அடிப்படையிலேயே இந்தியா, அமெரிக்காவின் GE-HAL உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க இன்னும் பல திட்டங்களை மத்திய அரசு நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், உத்தரபிரதேசம் மாநிலத்தில் வைத்து நாட்டின் பாதுகாப்பு பணிகளுக்கு தேவையான பலதரப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களைத் தயாரிக்க அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உபி மாநிலத்தில் ராணுவ தளவாட பொருட்களைத் தயாரிக்கும் மிகப் பெரிய மையம் அமைந்திருக்கின்றது. இங்கு வைத்து தற்போது பாதுகாப்பு உபகரணங்களுக்கான உதிரி பாகங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றுடன் இனி பிரம்மோஸ் ஏவுகணைகள், ஆளில்லாமல் இயங்கும் உலவு விமானங்கள் மற்றும் விமானங்களைத் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் உள்ளன.
இதனை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதிப்படுத்தி இருக்கின்றார். கடந்த சனிக்கிழமை அன்று லக்னோவில் ராணுவ படை வீரர்களால் உருவாக்கப்பட்ட 'ஸ்ட்ரைவ் சிந்தனை' குழு 'ஆத்மநிர்பர் பாரத்' எனும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்றபோதே உபியில் விரைவில் பலதரப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களைத் தயாரிப்பது பற்றிய தகவலை ராஜ்நாத் சிங் உறுதிப்படுத்தினார்.

இதற்காக ரூ. 2,500 கோடி தொகையை அரசு ஒதுக்கி இருக்கின்றது. இதன் வாயிலாகவே உபி டிஃபென்ஸ் இன்டஸ்ட்ரீஸ் இன்டஸ்ட்ரியல் காரிடாரில் வைத்து ராணுவத்திற்கான ஆயுதங்கள் தயாரிக்கப்பட இருக்கின்றன. இப்போது, வரை இங்கு பாதுகாப்பு வாகனங்களுக்கான நட்டுகள், போல்டுகள் மற்றும் உதிரி பாகங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இவற்றுடன் ட்ரோன்கள், எலெக்ட்ரானிக் போர் விமானம் மற்றும் பிரம்மோஸ் ஏவுகணைகள் தயாரிக்கப்பட இருப்பது இந்தியாவிற்கு கூடுதல் வலுசேர்க்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவிற்கு ஒரு பக்கம் சீனா வாயிலாகவும், மற்றொரு பக்கம் பாகிஸ்தான் வாயிலாகவும் அச்சுறுத்தலான சூழல் நிலவி வருகின்றது.

இந்த நாடுகளிடம் இருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டிய கட்டாயமாகி உள்ளது. இந்த நிலையிலேயே தன்னுடைய பலத்தை நிரூபிக்கும் விதமாக இந்தியா ராணுவத்தை மிகவும் பலம் கொண்டதாக மாற்றும் முயற்சியில் அரசு களமிறங்கி இருக்கின்றது. மேலும், இப்போதைய நிலவரப்படி ஆயுதங்களுக்காகவும், உபகரணங்களுக்காகவும் இந்தியா பெரும்பாலும் வெளிநாடுகளையேச் சார்ந்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.
இதனைக் குறைக்கும் என்னமே பிரதமர் மோடி இருப்பதாகவும், இதன் விளைவாகவே இந்தியாவிலேயே முக்கிய ஆயுதங்களை தயாரிக்கும் முயற்சிகளில் அரசு ஈடுபட்டு வருவதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இது அவசர நிலை ஏற்படும்போது இந்தியா தன்னுடைய தனித் திறனைக் காண்பிக்க மிகுந்த உதவியாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய ராணுவம் ஏற்கனவே தன்னுடைய எதிரி நாடுகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக பலதரப்பட்ட அதி நவீன ஆயுதங்களைக் கொண்டிருக்கின்றது. இதுதவிர, புதிய ஆயுதங்களைச் சேர்க்கும் முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே பெரும் தொகையில் உள் நாட்டிலேயே ஆயுதங்களைத் தயாரிக்கும் பணியில் களமிறங்கி இருக்கின்றது. இதனால், எதிரிநாடுகளுக்கு இப்போதே வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்திருக்கும் என யூகிக்க முடிகின்றது.


Click it and Unblock the Notifications









