தமிழ்நாட்டு முதல்வரில் இருந்து மத்திய அமைச்சர் வரை எல்லாரும் சொல்லி வெச்ச மாதிரி விளம்பரம் பண்றாங்களே!!
மஹிந்திரா (Mahindra) நிறுவனமும் எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விஷயத்தில் தீவிரம் காட்டி வருகிறது. அதன் வெளிப்பாடாக, கடந்த 2024ஆம் ஆண்டின் இறுதியில் பிஇ 6 (BE 6) மற்றும் எக்ஸ்.இ.வி 9இ (XEV 9e) என்கிற இரு எலக்ட்ரிக் கார்களை மஹிந்திரா அறிமுகம் செய்தது. இந்த இரு மஹிந்திரா எலக்ட்ரிக் கார்களும் அவற்றின் கவர்ச்சிக்கரமான தோற்றத்தினால் மக்களை கவர்ந்து வருகின்றன. சாதாரண மக்களை மட்டும் தான் என்று பார்த்தால், மத்திய அமைச்சர் ஒருவரும் மஹிந்திராவின் இந்த புதிய எலக்ட்ரிக் காரில் பயணம் செய்து பார்த்து ஆச்சிரியப்பட்டுள்ளார்.
இந்தியாவில் கடந்த சில வருடங்களில் எலக்ட்ரிக் கார்களின் பயன்பாடு வெகுவாக அதிகரித்து இருப்பதற்கு காரணம், மத்திய அரசு தொடர்ந்து அளித்த ஊக்கம் ஆகும். எலக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கும் நிறுவனங்களுக்கு மானியம் அளித்து புது புது எலக்ட்ரிக் நிறுவனங்களை இந்தியாவை நோக்கி இழுத்தது மட்டுமின்றி, புதிய எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்களையும் உருவாக்கி உள்ளது.

மேலும், இதனாலேயே மத்திய அமைச்சர்களும் கிடைக்கும் நேரத்தில் எல்லாம் எலக்ட்ரிக் வாகனங்களை பிரபலப்படுத்த மறந்தது இல்லை. இந்த விஷயத்தில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தான் பெரும்பாலும் தீவிரமாக இருப்பதை அதிகமாக பார்த்திருக்கிறோம். ஏனெனில், அவர்தான் மத்திய நெடுஞ்சாலை & போக்குவரத்து துறை அமைச்சர் ஆவார். ஆனால், தற்போது புதிய மஹிந்திரா எலக்ட்ரிக் காரில் பயணம் செய்து பார்த்திருப்பது, மத்திய அமைச்சர் எச்டி குமாரசாமி (H.D. Kumaraswamy) ஆவார்.
முன்னாள் இந்திய பிரதமர் எச்.டி தேவ கவுடாவின் மகனான எச்டி குமாரசாமி அவர்கள் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஆவார். அதனை தொடர்ந்து, கடந்த 2024ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட புதிய மாநிலங்களவையில் மத்திய கனரக தொழில்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதனால், இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிப்பதில் இவரது பங்கும் இருக்கிறது.

அதனை வெளிக்காட்டும் வகையில், மஹிந்திராவின் புதிய எலக்ட்ரிக் கார்களில் மத்திய அமைச்சர் எச்டி குமாரசாமி பயணம் செய்து பார்த்துள்ளார். இதுகுறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், மஹிந்திரா எக்ஸ்.இ.வி 9இ எலக்ட்ரிக் காரை அமைச்சர் குமாரசாமி பார்வையிடுவதை காண முடிகிறது. அவரை சுற்றிலும் உயர்நிலை அரசாங்க அதிகாரிகள் மற்றும் மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரிகள் இருக்கின்றனர்.
மஹிந்திரா பிஇ 6 மற்றும் எக்ஸ்.இ.வி 9இ கார்களை சுற்றி முற்றி பார்த்த பின், அவற்றில் முன் இருக்கையில் அமர்ந்து மத்திய அமைச்சர் எச்டி குமாரசாமி பயணம் செய்து பார்த்துள்ளார். காரை ஓட்டி பார்த்த பின், இதற்கு மஹிந்திரா நிறுவனம் நீண்ட காலமாக உழைத்ததாக கூறிய குமாரசாமி, மஹிந்திரா தற்போது 'ஆத்மா நிர்பார் பாரத்' என்கிற மத்திய அரசின் கோட்பாடை விளம்பரப்படுத்தி வருவதாகவும், மஹிந்திராவின் இந்த எலக்ட்ரிக் கார்கள் உலகில் எந்தவொரு கார் நிறுவனத்தின் வாகனங்களுடனும் போட்டியிடும் என தெரிவித்தார்.

மஹிந்திரா பிஇ 6 மற்றும் எக்ஸ்.இ.வி 9இ எலக்ட்ரிக் கார்களின் விலைகள் இன்னும் முழுவதுமாக அறிவிக்கப்படவில்லை. தற்போதைக்கு கார்களின் குறிப்பிட்ட சில வேரியண்ட்களின் விலைகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, பிஇ 6 எலக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை ரூ.18.90 லட்சமாகவும், எக்ஸ்.இ.வி 9இ எலக்ட்ரிக் காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.21.90 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மத்திய அமைச்சர் எச்டி குமாரசாமிக்கு முன்னதாகவே, நம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் மஹிந்திராவின் இந்த எலக்ட்ரிக் கார்களை பார்வையிட்டுவிட்டார். ஏனெனில், சென்னைக்கு அருகே உள்ள மஹிந்திராவின் தொழிற்சாலையில் தான் இந்த எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவ்வாறு தொடர்ச்சியாக அரசியல்வாதிகள் மஹிந்திராவின் இந்த புதிய எலக்ட்ரிக் கார்களை விளம்பரப்படுத்தி வருவது பார்ப்பதற்கு நன்றாக உள்ளது.


Click it and Unblock the Notifications









