ஓட்டல் பில்-ஐ கட்ட முடியல... லக்சரி கார்களை விட்டு சென்ற தொழிலதிபர்கள்!! மிகவும் குறைவான விலையில் ஏலத்தில்
இந்தியா மிக பெரிய கார்கள் விற்பனை சந்தை என்றால், அதில் சந்தேகமே இல்லை. புத்தம் புதிய கார்கள் மட்டுமின்றி, பயன்படுத்தப்பட்ட யூஸ்டு கார்களுக்கும் நம் நாட்டில் அதிக தேவை உள்ளது. அதாவது, யூஸ்டு கார்களை வாங்கவும் நம் நாட்டில் ஏகப்பட்டோர் உள்ளனர். குறிப்பாக, யூஸ்டு லக்சரி கார்களுக்கு அதிகளவில் கிராக்கி இருப்பதாக புள்ளி விபரங்கள் வெளிக்காட்டுகின்றன.
அதனால் நீங்கள் ஒரு காரை பயன்படுத்தி வருகிறீர்கள் என்றால், அந்த காரை உங்களால் எந்தவொரு நேரத்திலும் விற்றுவிட முடியும். நம் நாட்டில் உள்ள இந்த வசதி பணம் தேவைப்படும் சில அவசரகால சூழலிலும் உதவுகிறது. இதை ஏன் நான் இப்போது கூறுகிறேன் என்றால், சண்டிகரில் உள்ள ஓட்டல் ஒன்று நீண்ட வருடங்களுக்கு முன்பு பில் செலுத்தாமல் சென்ற இரு கோடீஸ்வரர்களின் கார்களை ஏலத்தில் விற்க இறங்கியுள்ளது.

சண்டிகர் தொழில்துறை மற்றும் சுற்றுலா மேம்பாட்டு துறை (CITCO)-வின் கீழ் செயல்படும் இந்த குறிப்பிட்ட ஷிவாலிக் சொகுசு ஓட்டலில் கடந்த 2018 மே மாதத்தில் பஞ்சாப்பை சேர்ந்த இரு தொழிலதிபர்கள் தங்கி இருந்துள்ளனர். ஓட்டலின் இரு வெவ்வேறு அறைகளில் தங்கி, அங்கேயே உணவருந்தி, துணிகளை லாண்ட்ரிக்கு கொடுத்து சில மாதங்களுக்கு ஜாலியாக நாட்களை கடத்திய அவர்கள் பின்னர் ஒருநாள் ஓட்டலில் இருந்து செல்ல முடிவெடுத்துள்ளனர்.
இதன்படி ஓட்டலில் வழங்கப்பட்ட சேவைகளுக்கான கட்டண பில் அவர்களிடம் வழங்கப்பட்டது. அவர்கள் இருவரில் ஒருவர் ரூ.6 லட்சம் மதிப்பு கொண்ட 3 காசோலைகளை ஓட்டல் நிர்வாகத்திடம் வழங்கியுள்ளார். ஆனால் அவரது காசோலையை சம்பந்தப்பட்ட வங்கி ஏற்று கொள்ளவில்லை. இதனாலும், அதன்பின் அவர்கள் நடந்த கொண்ட விதங்களினாலும் சந்தேகமடைந்த ஓட்டல் நிர்வாகத்தினர் 2018 அக்டோபர் 12ஆம் தேதியன்று போலீஸாரை அழைத்துள்ளனர்.

போலீஸாரை பார்த்த அந்த இரு தொழிலதிபர்களுள் ஒருவர் அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால் ஓட்டலின் கேட் மூடப்பட்டு இருந்ததால் அவரை மடக்கி பிடித்துவிட்டனர். அஷ்வனி குமார் சோப்ரா மற்றும் ராம்நைக் பன்சால் என பெயர் கொண்ட அந்த தொழிலதிபர்களில் ராம்நைக் பன்சால் தனது ஆடி க்யூ3 காரின் சாவியை கொடுத்து தான் பணத்தை கொடுத்த பின் காரை எடுத்து கொள்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
அதேபோல் அஷ்வனி குமார் சோப்ராவும் தனது செவ்ரோலெட் க்ரூஸ் காரின் சாவியை கொடுத்துவிட்டு சென்றுள்ளார். நாட்கள் கடந்தன, மாதங்களும் உருண்டோடின, கார்களை எடுக்க எப்படியிருந்தாலும் அவர்கள் திரும்பி வருவார்கள் அப்போது தங்கி இருந்ததற்கான கட்டணத்தை வசூலித்துவிட வேண்டும் என ஓட்டல் நிர்வாகம் காத்திருந்தது. ஆனால் அவர்கள் கடைசிவரை வரவே இல்லை, அவர்களது கார்கள் ஓட்டல் வளாகத்திற்குள்ளேயே இருந்தன. இந்த விஷயத்தை அந்த தொழிலதிபர்களின் மானம் கருதி ஓட்டல் நிர்வாகம் வெளியே சொல்லாமல் இருந்து வந்தது.

ஆனால் ஒரு கட்டத்திற்குமேல் பொறுமை இழந்த ஓட்டல் நிர்வாகத்தினர் கடந்த 2022 டிசம்பரில் இந்த விஷயத்தை பொது வெளியில் தெரிவித்தனர். இது அந்த சமயத்தில் இணையத்தில் வைரலானது. அவர்கள் இருவரும் ஓட்டலில் தங்கி இருந்ததற்கான கட்டணம் சுமார் ரூ.22 லட்சம் ஆகும். இந்த நிலையில், அந்த தொழிலதிபர்களின் கார்களை ஏலத்தில் விற்று அதன் மூலம் அடைந்த நஷ்டத்தை சரிச்செய்ய ஓட்டல் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
மேலும், இதுகுறித்து எடுக்கப்பட்ட வீடியோக்களும் ஓட்டல் நிர்வாகத்தின் சார்பில் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சண்டிகர் மாநகராட்சியின் கீழ் இயங்கும் ஓட்டல் என்பதால், இந்த பிரச்சனையை சரி செய்ய ஒரு குழு சில மாதங்களுக்கு முன்பே அமைக்கப்பட்டது. அந்த குழு சம்பந்தப்பட்ட தொழிலதிபர்களை நேரில் சந்திக்க எவ்வளவோ முயற்சி செய்தும் பலனில்லை. அவர்களை தொடர்பு கொள்ள முடியாத காரணத்தினால் தான் அவர்களது கார்களை ஏலம் விடும் முடிவிற்கு ஓட்டல் நிர்வாகம் வந்துள்ளது.
இதில், ஆடி க்யூ3 எஸ்யூவி காருக்கான ஆரம்ப ஏல விலையாக ரூ.10 லட்சமும், இந்திய சந்தையில் தற்சமயம் விற்பனையில் இல்லாத செடான் காரான செவ்ரோலெட் க்ரூஸிற்கு ஆரம்ப ஏல விலையாக ரூ.1.5 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. செவ்ரோலெட் க்ரூஸ் செடான் கார் கடைசியாக இந்தியாவில் விற்பனையில் இருந்த சமயத்தில் அதன் விலை ரூ.15 லட்சம் ஆகும். இந்த ஏலம் வருகிற பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெறவுள்ளது.


Click it and Unblock the Notifications