சூப்பர்... சுயமாக மோட்டார்சைக்கிளை உருவாக்கிய 10ம் வகுப்பு மாணவர்... எப்படினு தெரிஞ்சா அசந்திருவீங்க
10ம் வகுப்பு மாணவர் ஒருவர் சுயமாக மோட்டார்சைக்கிளை உருவாக்கி அசத்தியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டது முதல், மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இதில், ஒரு சிலர் ஊரடங்கை சரியாக பயன்படுத்தி கொண்டு, புதுப்புது கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகின்றனர். அவை பெரும்பாலும் வாகனங்கள் சார்ந்த கண்டுபிடிப்புகளாகவே உள்ளன.

இதற்கு சண்டிகரை சேர்ந்த கௌரவ் ஒரு உதாரணம். பத்தாம் வகுப்பு மட்டுமே படித்து வரும் மாணவரான கௌரவ், சுயமாக ஒரு மோட்டார்சைக்கிளையே உருவாக்கியுள்ளார். இனி பயன்படாது என ஒதுக்கப்பட்ட மற்ற பைக்குகளின் பாகங்கள் மூலமாக கௌரவ், இந்த மோட்டார்சைக்கிளை உருவாக்கி அசத்தியிருக்கிறார்.

பொதுவாக பயன்படாத பாகங்களை ஒருங்கிணைத்து, புதிய வாகனங்களை உருவாக்குவதில் இந்தியர்கள் தலைசிறந்தவர்கள் என்பது நம் அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒரு விஷயம்தான். அதனை கௌரவும் நிரூபித்து காட்டியுள்ளார். மாணவன் கௌரவ் உருவாக்கியுள்ள மோட்டார்சைக்கிள், பெட்ரோல் மூலம் இயங்க கூடியது.

ஒரு லிட்டர் பெட்ரோலில், சுமார் 80 கிலோ மீட்டர் வரை ஓடும் திறனை இந்த மோட்டார்சைக்கிள் பெற்றுள்ளது. மற்ற பைக்குகளின் பயன்படாத பாகங்களை கொண்டு கௌரவ் மோட்டார்சைக்கிளை உருவாக்கியிருப்பது இது முதல் முறை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பயன்படாத பாகங்களை கொண்டு மின்சார மோட்டார்சைக்கிள் ஒன்றை கௌரவ் உருவாக்கினார்.

ஆனால் அந்த மின்சார பைக் வேகமாக இயங்கவில்லை. எனவே பெட்ரோலில் இயங்க கூடிய வகையிலான மோட்டார்சைக்கிளை கௌரவ் தற்போது உருவாக்கியுள்ளார். பல்வேறு பைக்குகளின் பயன்படாத பாகங்களை எல்லாம் ஒருங்கிணைத்து சுயமாகவே இந்த மோட்டார்சைக்கிளை கௌரவ் உருவாக்கியிருப்பதால், அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

அவர் வசிக்கும் பகுதியை சேர்ந்த மக்களிடம் இருந்தும், சமூக வலை தளங்களிலும் கௌரவ் பாராட்டுக்களை பெற்று வருகிறார். வழக்கமான மோட்டார்சைக்கிளில் இருப்பது போன்றே ரியர் வியூ மிரர் மற்றும் லைட்கள் ஆகியவையும் கௌரவ் உருவாக்கியுள்ள இந்த மோட்டார்சைக்கிளிலும் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் இப்படிப்பட்ட மோட்டார்சைக்கிள்களை தாங்களாகவே உருவாக்குவது என்பது இது முதல் முறை கிடையாது. இதற்கு முன்பாகவும் பல்வேறு மாணவர்கள் இதே போன்று மற்ற பைக்குகளின் பாகங்களில் இருந்து மோட்டார்சைக்கிள்களை உருவாக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

குறிப்பாக மாணவர்களும், வாகனங்களின் மீது ஆர்வமும், அவற்றை கையாள்வதில் திறமையும் கொண்ட நபர்களும் பெட்ரோல், டீசலில் இயங்க கூடிய வாகனங்களை மின்சாரத்தில் இயங்க கூடிய வகையில் மாற்றியமைத்து வருகின்றனர். இந்தியாவிற்கு தற்போது மின்சார வாகனங்கள்தான் முக்கியமான தேவையாக உள்ளன.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. அத்துடன் பெட்ரோல், டீசல் வாகனங்களால் காற்று மாசுபாடும் ஏற்படுகிறது. எனவே அரசாங்கமே மின்சார வாகனங்களை ஊக்குவித்து வருகிறது. அப்படிப்பட்ட சூழலில், பெட்ரோல், டீசல் வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றுபவர்கள் தங்கள் திறமையின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








