சந்திரயான்-3யை விண்ணில் செலுத்த செலவு இவ்வளவு கம்மிதானா? உலக நாடுகள் எல்லாம் ஆச்சரியமா பாக்குறாங்க!
வரும் 14ஆம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்த போகும் சந்திரயான் 3 திட்டத்திற்காக இதுவரை எவ்வளவு செலவு செய்துள்ளது என உங்களுக்கு தெரியுமா? உலகில் மற்ற நாடுகள் எல்லாம் மிகப்பெரிய அளவில் செலவு செய்து செய்த விஷயத்தை இந்தியா மிகக் குறைவான பட்ஜெட்டிலேயே சாதித்துள்ளது. இதுகுறித்த விரிவான விபரங்களை காணலாம் பாருங்கள்.
இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் கனவு திட்டம் தான் சந்திரயான். சந்திரயான் 1 ஏற்கனவே விண்ணில் செலுத்தப்பட்டு நிலவை பூமியிலிருந்து நிலவின் வட்டப்பாதையில் நிறுத்தப்பட்ட விண்கலம் மூலம் தகவலை சேகரித்து ஆய்வு செய்தது. இது மிகப்பெரிய வெற்றியாக இஸ்ரோவிற்கு அமைந்தது.

அடுத்ததாக கடந்த 2019 ஆம் ஆண்டு சந்திரயான் 2 நிலவில் தரையிறங்குவதற்காக விண்ணில் அனுப்பப்பட்டது. ஆனால் சில தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக இது விண்ணில் தரையிறங்குவது நடக்கவில்லை. கடைசி நேரத்தில் நிலவில் மோதியது. இதனால் இந்த சந்திரயான் 2 இஸ்ரோவிற்கு வெற்றிகரமாக அமையவில்லை.
இந்நிலையில் தற்போது இஸ்ரோ சந்திரயான் 3 என்ற விண்கலத்தை தயார் செய்து விண்ணில் அனுப்ப தயாராகி வருகிறது. இந்த விண்கலம் விண்ணில் தரையிறங்கி தனது ஆய்வு பணிகளை மேற்கொள்ளும். இந்த திட்டத்திற்கான விண்கலன் சோதனைகள் எல்லாம் தயாராகி வரும் 14ஆம் தேதி சந்திரயான் 3 விண்ணில் ஏவப்பட தயாராகியுள்ளது.

இதற்கான கவுன்டவுன் விரைவில் துவங்க உள்ள நிலையில் தற்போது சந்திரயான் 3 குறித்த ஒரு முக்கியமான தகவல் நமக்கு கிடைத்துள்ளது. இஸ்ரோ இந்த சந்திரயான் 3 திட்டத்திற்காக மொத்தம் ரூ 615 கோடி செலவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. உலக நாடுகளை ஒப்பிடும்போது நிலவிற்கு விண்கலத்தை அனுப்புவதற்கான செலவை இந்தியா மிகவும் குறைவாக செய்துள்ளது.
உலகிலேயே விண்வெளி ஆய்வில் நிலவை ஆய்வு செய்து நிலவுக்கு விண்கலத்தை அனுப்பிய நாடுகளின் எண்ணிக்கை மொத்தம் 11 தான், அமெரிக்கா சோவியத் யூனியன், சீனா, ஜப்பான், லக்சம்பெர்க், ஐரோப்பா யூனியன், இந்தியா, இத்தாலி, இஸ்ரேல், தென்கொரியா, ஐக்கிய அரபு நாடுகள் ஆகிய நாடுகள் தான் வெற்றிகரமாக நிலவில் ஆய்வுகளை செய்துள்ளது.

இதில் அதிகபட்சமாக அமெரிக்கா தான் 32 முறை வெற்றிகரமாக நிலவில் தனது ஆய்வுகளை செய்துள்ளது. 1964 துவங்கி கடைசியாக 2018 வரை 32 ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. சோவியத் யூனியன் நிலவில் 23 ஆய்வுகளை செய்துள்ளது. அடுத்ததாக சீனா இதுவரை 7 வெற்றிகரமான ஆய்வுகளை செய்துள்ளது.சீனாவில் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய 3வது நாடாக இருக்கிறது.
இந்தியாவின் சந்திரயான் 1 மட்டுமே வெற்றிகரமான ஆய்வாக இருந்தது. சந்திரயான் 2 வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தான் மூன்றாவது முறையாக நிலவிற்கு விண்கலத்தை இந்தியா அனுப்ப தயாராகி வருகிறது. சந்திரயான் 2 மற்றும் சந்திரயான் 3 3 ஆகிய இரண்டையும் பார்க்கும்போது இந்த இரண்டு திட்டங்களும் மிக குறைவான பட்ஜெட்டிலேயே செய்யப்பட்டுள்ளன.
மற்ற நாடுகள் எல்லாம் நிலவில் ஆய்வுகளை செய்ய ஆயிரக்கணக்கான கோடிகளை செலவு செய்து வருகிறது. ஆனால் இந்தியா வெறும் ரூ 615 கோடியிலேயே இந்த திட்டத்தை வெற்றிகரமாக முடிக்க திட்டமிட்டுள்ளது. இவ்வளவு குறைவான பட்ஜெட்டில் இஸ்ரோ செயல்பட்டுள்ளதுக்கு முக்கியமான காரணம் அதன் ஆய்வாளர்கள் திறமை மற்றும் அவர்களின் சிறப்பான திட்ட வடிவமைப்பு தான்.
சமீபத்தில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் அமைப்பு நிலவிற்கு ஒரு விண்கலத்தை அனுப்பியது அது சாஃப்ட்டு லேண்டிங் ஆகாமல் தோல்வியில் முடிந்தது. அந்தத் திட்டத்திற்காக மொத்தம் இந்திய மதிப்பில் ரூ 744 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. அதைவிட இந்தியாவில் உள்ள சந்திரயான் 3 திட்டத்தின் செலவு குறைவுதான்.
சந்திரயான் 3 விண்கலம் எல்விஎம் 3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்தியா விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புவதை கமர்சியல் ஆக்கியுள்ள நிலையில் எல்விஎம் 3 ராக்கெட்டை ஒரு முறை விண்வெளிக்கு அனுப்ப தனியார் நிறுவனங்களுக்கு ரூ 500 கோடி வரை கட்டணமாக இஸ்ரோ வசூலிக்கிறது.
இது ஜிடிஓ எனப்படும் பூமியிலிருந்து 35 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவு வரை செல்வதற்காக மட்டும்தான். ஆனால் தற்போது அதையும் தாண்டி நிலவிற்கு செல்ல வெறும் ரூ 115 கோடி தான் அதிகம் செலவாகி உள்ளது. இந்திய விஞ்ஞானிகளின் இந்த சாதனை மிக மகத்தான சாதனையாக பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இஸ்ரோ விஞ்ஞானிகள் மிகப்பெரிய சாதனைகளை செய்து வருகின்றனர். அதுவும் இந்தியாவில் மிகக் குறைவான பட்ஜெட்டில் இந்த சாதனையை இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்தது நிச்சயம் பாராட்டத்தக்கது தான். சந்திரயான் 3 விண்ணில் வெற்றிகரமாக தரையிறங்குவதற்காக உங்களுடன் சேர்ந்து நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம்.


Click it and Unblock the Notifications
