சந்திரயான் -3 விண்ணில் பாய்ந்ததும் என்ன ஆகும்? ஜூலை 14ல் நடக்கப்போவது இதுதான்!
இந்தியாவின் கனவு திட்டமான சந்திரயான்-3 விண்கலம் வரும் ஜூலை மாதம் 14ஆம் தேதி விண்ணில் ஏவப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 23-24ம்தேதி சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான தகவல்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் மிகப்பெரிய கனவு என்பது நிலவு குறித்த ஆய்வு தான். இதை இஸ்ரோ கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பே சாதித்து விட்டது. இஸ்ரோ சந்திரயான்-1 என்ற திட்டத்தை துவங்கி கடந்த 2008 ஆம் ஆண்டு முதன்முறையாக இந்தியாவிலிருந்து நிலவிற்கு விண்கலத்தை அனுப்பியது.

சந்திரயான்-1 விண்கலம் நிலவின் வட்டப்பாதைக்கு சென்று நிலவு குறித்த பல்வேறு தகவல்களை பூமிக்கு அனுப்பியது. இந்த ஆய்வில் அறிவியலையே புரட்டிப் போடும் நிலவில் தண்ணீர் இருப்பது உள்ளிட்ட நிலவு குறித்த பல தகவல்கள் இஸ்ரோ மூலம் உலகிற்கே தெரியவந்தது. இந்நிலையில் அடுத்த திட்டமாக இஸ்ரோ நிலவில் விண்கலத்தை தரையிறக்கி ஆய்வு செய்ய திட்டமிட்டது.
அதன்படி கடந்த 2019 ஆம் ஆண்டு சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டாலும் அது கடைசி நிமிடத்தில் சாஃப்ட் ஆக லேன்ட் ஆகாமல் சந்திரனுடன் மோதியது. இந்தத் திட்டத்திலும் மற்ற அனைத்தும் சரியாக செயல்படும் இந்த ஒரு பிரச்சனையால் கிட்டத்தட்ட தோல்வியையே இஸ்ரோ சந்தித்தது.

சந்திரயான்-2 மூலம் கிடைத்த பாடத்தை வைத்து சந்திரயான்-3 விண்கலத்தை தயார் செய்யும் பணியில் இஸ்ரோ இறங்கியது. அதன்படி கடந்த முறை போல இல்லாமல் இந்த முறை பல்வேறு டெஸ்டிங்களை செய்து சாஃப்டான லேண்டிங் மற்றும் எந்த பிரச்சினையும் இல்லாமல் சந்திரயான்-3 இந்தியாவின் விண்கலத்தை தரையிறக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
தற்போது சந்திரயான்-3 விண்ணில் ஏவ தயாராகியுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் வைத்து இந்த சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்காக சந்திரயான்-3 முழுமையாக தயார் செய்து கேப்சூலுக்கு அடைத்து ராக்கெட்டில் சேர்க்கும் பணியும் முடிவடைந்தது. ராக்கெட் ஏவுதளத்தில் ஏவுதலுக்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இஸ்ரோ சந்திரயான்-3 ராக்கெட்டை வரும் 14-ம் தேதி மதியம் 2:35 மணிக்கு விண்ணில் ஏவப்போவதாக அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. இந்தியாவின் அதிக எடை கொண்ட விண்கலன்களை தூக்கி செல்லும் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டில் தான் இந்த சந்திரயான்-3 விண்கலத்தை எடுத்து செல்கிறது.
ஜிஎஸ்எல்வி ராக்கெட் தான் எல்எம்வி மார்க் 3 என இஸ்ரோ பெயரை மாற்றியுள்ளது. இந்த ராக்கெட் மொத்தம் மூன்று கட்டங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டம் எஸ்200 சாலிட் ஸ்டேஜ் என அழைக்கப்படுகிறது. இது திட வடிவிலான எரிபொருளை கொண்டு இயங்கும் திறன் கொண்டது. இது தான் ராக்கெட் விண்ணில் ஏவ முதலில் செயல்படக்கூடிய இன்ஜின் ஆகும்.
இந்த ராக்கெட் ஏவப்பட்ட 113 ஆவது நிமிடத்தில் இரண்டாவது ஸ்டேஜ் ஆன எல்110 லிக்யூட் ஸ்டேஜ் செயல்பட துவங்கிவிடும் அதே நேரத்தில் எஸ்200 சாலிட் ஸ்டேஜ் இன்ஜினும் செயல்படும் சரியாக 134-வது நொடியில் எஸ்200 சாலிட் ஸ்டேஜ் முழுவதுமாக தனது எரிபொருளை எரித்து முடித்து காலியாகிவிடும்.
137 வது நொடியில் இந்த ராக்கெட்டில் இருந்து முதல் கட்ட இன்ஜினான எஸ்200 இன்ஜின் பிரிந்து வந்துவிடும். 217வது நொடியில் இது முழுமையாகப் பிரிந்து வந்துவிடும். அப்பொழுது ராக்கெட்டை முழுவதும் எல்100 இன்ஜின் தான் செயல்படுத்திக் கொண்டிருக்கும். சரியாக ராக்கெட் புறப்பட்டு 313-வது நொடியில் எல்100 தனது எரிபொருள் அனைத்தையும் தீர்த்து தனது இயக்கத்தை நிறுத்தி விடும்.
அதே நேரத்தில் கிரையோஜனிக் இன்ஜினான சி25 தனது இயக்கத்தை துவக்கி விடும். 313 வது நொடியில் இருந்து 974-வது நொடி வரை இந்த கிரையோஜினிக் இன்ஜின் செயல்பட்டு இந்த சந்திரயான்-3யை ஜிடிஓ எனப்படும் ஜியோ சிங்க்ரோனியஸ் டிரான்ஸ்பர் ஆர்பிட்டிற்கு எடுத்துச் செல்லும்.
அங்கு இருந்து சந்திரயான்-3 தனது பயணத்தை நிலவை நோக்கி துவங்கும். அங்கிருந்து மெது மெதுவாக நகர்ந்து ஆகஸ்ட் 23-24ம் தேதி சந்திரனில் சந்திரயான்-3 தரையிறங்கும். இதுதான் இஸ்ரோவின் சந்திரயான்-3 விற்கான திட்டமாக இருக்கிறது. இந்த திட்டம் குறித்த விரிவான தகவல்களை இஸ்ரோ அடுத்தடுத்து வெளியிடும்.
இதற்கான கவுண்டவுன் எப்பொழுது துவங்குகிறது, சந்திரனில் சந்திரயான்-3 தரையிறங்கும் நேரம் என்ன, உள்ளிட்ட பல தகவல்கள் பின்னர் இஸ்ரோவால் அறிவிக்கப்படும். மேலும் இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்படும்போது எதுவரை நம்மால் நேரடியாக கண்காணிக்க முடியும் என்ற தகவலும் பின்னர் அறிவிக்கப்படும் .
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சந்திரயான்-3 என்பது இந்தியாவின் கனவு திட்டமாக இருக்கிறது. உலக நாடுகள் எல்லாம் சந்திரனை வியந்து பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்தியா சந்திரனின் தரை இறங்குவது விண்வெளி ஆய்வில் உலக நாடுகள் மத்தியில் இந்தியா எவ்வளவு பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது என்பதற்கு சான்றாக அமையும்.


Click it and Unblock the Notifications









