எலக்ட்ரிக் கார் ஓனர்களுக்கு இந்த பிரச்சனை மட்டும் வந்துடவே கூடாது!! திருச்சியில் தூக்கத்தை தொலைத்த கேரளத்தவர்!
திருச்சியில், டாடா டிகோர் எலக்ட்ரிக் காரை வைத்திருக்கும் வாடிக்கையாளர் ஒருவருக்கு சமீபத்தில் அவரது கார் பெரும் தலைவலியை கொடுத்துள்ளது. அப்படி என்ன சம்பவம் நடந்தது? இறுதியில் நடந்தது என்ன என்பது குறித்த விரிவான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் என்று பார்த்தால், அதில் டாடா மோட்டார்ஸின் பெயரை நிச்சயம் கூறியாக வேண்டும். குறிப்பாக, எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையில் டாடா நிறுவனம் தன்னை மேலும் மேலும் வலுப்படுத்தி கொண்டே போகிறது. நெக்ஸான் இவி & டிகோர் இவி என 2 எலக்ட்ரிக் கார்கள் ஏற்கனவே விற்பனையில் இருக்க, 3வது எலக்ட்ரிக் காராக டியாகோ இவி-ஐ விரைவில் களமிறக்க டாடா தயாராகி வருகிறது.

எலக்ட்ரிக் வாகனங்கள் இந்தியா உள்பட உலகில் பெரும்பாலான நாடுகளில் இன்னமும் ஆரம்ப கட்ட நிலையிலேயே உள்ளன. இதனாலேயே தற்போதைய நிலையில், எலக்ட்ரிக் கார்களில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க முடிவதில்லை. இந்த வகையில் டாடா மோட்டார்ஸின் எலக்ட்ரிக் கார்களிலும் பழுதுகள் ஏற்பட தான் செய்கின்றனர், ஆனால் மிகவும் அரிதாகவே.

சில மாதங்களுக்கு முன் மும்பையில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நெக்ஸான் இவி தீப்பிடித்து எரிந்த சம்பவம் உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம். அதன்பின் இந்த அளவிற்கு தீப்பிடிப்பு சம்பவங்கள் எதுவும் டாடா எலக்ட்ரிக் கார்களில் பதிவாகவில்லை. ஆனால், தற்போது திருச்சியில் டிகோர் இவி உரிமையாளர் ஒருவருக்கு காரை சார்ஜ் செய்யும்போது கசப்பான அனுபவம் ஏற்பட்டுள்ளது.

ஷிண்டோ ஆண்டனி என்பவர் தனது டிகோர் எலக்ட்ரிக் காரில் குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டு திருச்சி வழியாக மீண்டும் வீட்டை நோக்கி பயணித்துள்ளார். அப்போது வழியில் ஒரு உணவகத்தில் உணவுகளை வாங்க காரை நிறுத்திய போது, சரி அப்படியே காருக்கு சார்ஜையும் ஏற்றி கொள்வோம் என ஃபாஸ்ட் சார்ஜரை காருடன் ப்ளக்-இன் செய்துள்ளார்.

அந்த உணவகத்தில் இருந்து இவர் தங்கியிருந்த இருப்பிடம் வெறும் 5-6 கிமீ தொலைவில் மட்டுமே இருந்துள்ளது. இருப்பினும் அதற்குள்ளாக உணவகத்தில் உணவுகளை வாங்கி கொண்டு, காருக்கும் சார்ஜ் ஏற்றி கொள்ளலாம் என இவர் திட்டமிட்டுள்ளார். ஆனால் இவரது திட்டத்திற்கு மாறாக அதன்பின் நடந்ததோ வேறு. உணவுகளை வாங்கிய பின்னர் காரை நோக்கி வந்தவர் சார்ஜரை ஆஃப் செய்துள்ளார்.

அதன்பின் சார்ஜர் ப்ளக்-ஐ காரில் இருந்து நீக்க முயன்றுள்ளார். ஆனால் சார்ஜர் ப்ளக் காருடன் நன்கு மாட்டி கொண்டுள்ளது. இதனால் அதனை காரில் இருந்து பிரிக்க முடியவில்லை. இதனால் என்ன செய்வதென்று புரியாமல் குழம்பி போன இந்த உரிமையாளர் அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். அவர்களும் தங்களால் முடிந்தவரையில் சார்ஜர் ப்ளக்-ஐ காரில் இருந்து பக்குவமாக இழுக்க முயன்றுள்ளனர். இருந்தும் எந்த பயனும் இல்லை.

இவ்வாறான பிரச்சனை மற்ற எலக்ட்ரிக் வாகனங்களிலும் சில சமயங்களில் ஏற்படுகின்றன. இதற்காகவே எலக்ட்ரிக் வாகனங்களில் சார்ஜரை விடுவிக்க ஒரு ஸ்விட்ச்சை தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கிவிடுகின்றன. டாடா டிகோர் இவி-இல் இந்த ஸ்விட்ச் ஆனது பின் சக்கரத்திற்கு மேலே காரின் பேனலுக்கு உட்புறமாக வழங்கப்படுகிறது. இவ்வாறு மறைவாக இந்த ஸ்விட்ச் கொடுக்கப்படுவதற்கு காரணம், அதன் தேவை அவ்வப்போது இருக்காது என்பதினாலேயே.

ஆனால் சக்கரத்திற்கு மேலாக கொடுக்கப்படுவதால் சகதிகள் ஸ்விட்ச்சை மறைத்து கொள்ளக்கூடும். நாம் இந்த செய்தியில் பார்க்கும் டிகோர் இவி உரிமையாளரும் இதே பிரச்சனையில் தான் மாட்டி கொண்டுள்ளார். சம்பவம் நடைபெற்ற உணவகத்திற்கு வருவதற்கு முன்பாக இவர் சகதிகள் மிகுந்த சாலையை பயணம் செய்து வந்துள்ளார். இதனால் இவரது காரில் அந்த ஸ்விட்ச்சை சகதி மண்கள் மூடி கொண்டுள்ளன.

காரின் உரிமையாளர் அவற்றை அகற்ற கைகளால் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தும் பலனில்லாததால், காரின் அடிப்பகுதியில் இருந்து வேறு வழியில்லாமல் ஸ்விட்ச்சை நோக்கி நீரை பீய்த்து அடித்துள்ளார். இருப்பினும் ஸ்விட்ச் மிகவும் சிறியதாகவும், மண் துகள்களுடன் ஏடாக்கூடமாக சிக்கி கொண்டதாலும் அதனை ஆக்டிவேட் செய்ய முடியவில்லை.

இரவு நேரம் என்பதால் மெக்கானிக்குகளையும் இவரால் அழைக்க முடியாமல் போகியுள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், இந்த ஸ்விட்ச்சின் தேவை எப்போதும் இருக்காது. சார்ஜர் ப்ளக் காரின் துளையில் மாட்டி கொண்டு, வெளிவரவில்லை என்றால் மட்டுமே தேவைப்படும். தேவைப்பட்ட நேரத்தில் அந்த ஸ்விட்ச்சை பயன்படுத்த முடியாததால், வேறு வழியின்றி காரை உணவகத்திற்கு உள்ளேயே விட்டுவிட்டு வீட்டிற்கு செல்லலாம் என இந்த நபர் தயாராகிவிட்டார்.

வீடு 5-6கிமீ-களுக்குள் இருப்பதாலேயே இவர் இந்த முடிவிற்கு வந்துள்ளார். வீட்டிற்கு நீண்ட தொலைவு செல்ல வேண்டியிருந்தால் இவரது கதி அன்றைய இரவு பெரும் திண்டாட்டமாகி இருக்கும். ஆனால் இந்த நபர் காரை அங்கேயே விட்டுவிட்டு செல்லவில்லை, சில மணிநேர முயற்சிகளுக்கு பின் சார்ஜர் ப்ளக் காரில் இருந்து வெளிவந்துள்ளது. இதனால் காரை எடுத்து கொண்டே வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த இரவை இந்த குடும்பத்தினர் இன்னும் சில நாட்களுக்கு மறக்கமாட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம்.


Click it and Unblock the Notifications








