சென்னை விமான நிலையத்தில் இப்படி ஒரு பிரச்சனையா? அடிக்குற வெயிலுக்கு விமானங்கள் தரையிறங்குவதே சிக்கலாகிடுச்சு!
கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானங்கள் இந்த வெப்பம் காரணமாக பல்வேறு விதமான தொழில்நுட்ப சிக்கல்களை சந்தித்து வருகின்றன. டேக் ஆஃப் ஆகும் விமானங்களும் இப்படியான தொழில்நுட்ப சிக்கல்களை சந்தித்து வருகின்றன. கோடை வெயிலுக்கும் விமானங்கள் தொழில்நுட்ப பிரச்சனைகளை சந்திப்பதற்கும் என்ன சம்பந்தம் இருக்க போகிறது என்ற விரிவான விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.
இந்தியா முழுவதும் தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவிலான வெப்பம் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகப்பெரிய சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இந்நிலையில் சென்னை விமான நிலையத்திலும் இந்த கோடை வெப்பம் காரணமாக பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது. சமீப காலமாக விமானிகள் இந்த சிக்கல்களை சந்தித்து வருகிறார்கள்.

சென்னை விமான நிலையத்தில் சமீப நாட்களாக தரையிறங்கும் விமானத்திலும் டேக் ஆஃப் செய்யும் விமானத்திலும் அதிகமான டர்புலன்ஸ் காணப்படுகிறது. இதனால் விமானிகள் தரையிறக்கவும், டேக் ஆஃப் செய்யவும் மிக கவனமாக இருக்க வேண்டியது இருக்கிறது. இது ஆபத்தான நிலையில் இல்லை என்றாலும், இந்த மாற்றத்திற்கான காரம் குறித்து ஆய்வு செய்தபோது கடும் வெப்பம் தான் இதுக்கு காரணமாக இருக்கிறது.
சென்னையில் நிலவிவரும் கடும் வெயில் காரணமாக காற்றின் அழுத்தம் மிகக் குறைவாக இருக்கிறது. மேலும் சென்னை பகுதியில் ஆங்காங்கே இருக்கும் சிறு குன்றுகள் காரணமாக கடலில் இருந்து வீசும் காற்றுகள் குன்றுகள் மீது பட்டு மீண்டும் வேறு திசையில் வீசுகின்றன. பொதுவாக காற்று அழுத்தம் அதிகமாக இருக்கும் போது இப்படியான காற்று வீசுதல் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது.

ஆனால் தற்போது காற்றின் அழுத்தம் குறைவாக இருப்பதால் வீசப்படும் காற்று விமானங்களை பாதிப்படைய செய்து வருகிறது. குறிப்பாக விமானம் டேக்ஆஃப் ஆகும்போதும் சரி லேண்ட் ஆகும் போதும் சரி, விமானிகள் அதிகமான டர்புலன்சை சந்தித்து வருகிறார்கள். இதனால் தற்போது சென்னை விமான நிலையங்களில் தரையிறங்கும் விமானங்கள் கவனமாக தரையிறங்கும் படி ஒவ்வொரு முறையும் ஏர் டிராபிக் கண்ட்ரோல் மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
சென்னை விமான நிலையத்திலிருந்து டேக் ஆஃப் ஆகும் விமானங்கள் சுமார் 10,000 அடி உயரத்தை எட்டும் வரை இந்த டர்புலென்ஸ் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இதனால் பத்தாயிரம் அடி உயரம் வரை காற்றின் திசை மாற்றம் மற்றும் ஒழுங்கமைப்பு இல்லாத காற்று இருப்பதால் இந்த டர்புலென்ஸ் ஏற்படுவதாக விமானிகள் கருதுகிறார்கள்.
இதனால் டேக் ஆஃப் ஆகும் போதும் சரி லேண்ட் ஆகும் போதும் சரி, விமானிகள் பயணிகளுக்கு சீட் பெல்ட் அறிவுரையை வழங்குகிறார்கள். கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள். டர்புலென்சை சந்திக்க போவதால் அனைவரும் கட்டாயம் சீட்டில் அமரும்படி கேட்டுக் கொண்டு வருகிறார்கள். இது கடந்த சில நாட்களாகவே சென்னை விமான நிலையத்தில் நடந்து வருகிறது.
இது மட்டுமல்லாமல் விமானிகள் பெரும்பாலும் சென்னை விமான நிலையத்தில் பிரதான ரன்வேயை பயன்படுத்தவே விரும்புகிறார்கள். இது நீளமான ரன்வேயாக இருப்பதால் பாதுகாப்பான லேண்டிங் கிடைக்கும். இதற்காக பிரதான ரன்வே தான் தேவை என விமானிகள் கருதி வருகிறார்கள்இதை புரிந்து கொண்ட ஏர் டிராபிக் கண்ட்ரோலும் பெரும்பாலான நேரங்களில் பிரதான ரன்வேயை விமானங்களுக்கு ஒதுக்க திட்டமிட்டு வருகிறது.
இதுபோக திருச்சி,மதுரை போன்ற சிறிய விமான நிலையங்களுக்கு செல்லும் விமானங்கள் எடை குறைவாக இருக்கும் படி திட்டமிட்டு வருகிறார்கள். முக்கியமாக சரக்கு விமானங்களில் அதிக எடையை ஏற்றாமல் குறைந்த எடையை ஏற்று வருகிறார்கள். இதனால் டர்புலன்ஸ் ஏற்படும்போது அதிக எடை இருந்தால் நீண்ட தூரம் விமானம் ரன்வேயில் ஓட வேண்டிய தேவை இருக்கும். சிறிய ரக விமானங்களில் இது சாத்தியமில்லை என்பதால் எடையை குறைத்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாக விமானங்களில் டர்புலன்ஸ் என்பது எதிர்பாராத நேரத்தில் நடக்கக்கூடிய விஷயம் தான். இதற்கெல்லாம் விமானிகள் தயாராக இருப்பார்கள். அவர்கள் பயிற்சி அளிக்கப்படும் போது இதற்கெல்லாம் தயார் செய்யப்பட்டு இருப்பார்கள். இதனால் பயணிகள் பயப்படும் அளவிற்கு இதில் பிரச்சனை இல்லை. ஆனால் காலநிலை மாற்றத்தால் இவ்வாறான பிரச்சனைகள் வருகிறது என்பதை மட்டுமே விமான போக்குவரத்து சேவை குழு கண்டறிந்துள்ளது


Click it and Unblock the Notifications








