ஊழியர்களுக்கு BMW கார்களை பரிசளித்த தமிழக நிறுவனம்... விலையை கேட்டதும் 'ரெஸ்யூம்' ரெடி பண்ணும் இளைஞர்கள்!
தமிழகத்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு மிகவும் விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ கார்களை பரிசாக வழங்கி அசத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒரு சில நிறுவனங்களில் ஊழியர்கள் சம்பள விலை உயர்வு கேட்டு போராடி வருகின்றனர். மறுபக்கம் வேறு சில நிறுவனங்களோ சம்பள உயர்வுடன், விலை உயர்ந்த பரிசுகளையும் வழங்கி தங்கள் ஊழியர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட செய்து வருகின்றன. இதில், சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் கிஸ்ஃப்ளோ (Kissflow) இரண்டாவது ரகத்தை சேர்ந்தது.

இது மிகவும் பிரபலமான சாஃப்ட்வேர் நிறுவனங்களில் ஒன்றாகும். கிஸ்ஃப்ளோ சாஃப்ட்வேர் நிறுவனம் கடந்த 2012ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு தற்போது 10 ஆண்டுகள் கடந்து விட்டன. இதை முன்னிட்டு கிஸ்ஃப்ளோ நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொண்ட 5 ஊழியர்களுக்கு பிஎம்டபிள்யூ கார்கள் (BMW Cars) பரிசாக வழங்கப்பட்டுள்ளன.

விவேக், ஆதி, தினேஷ், பிரசன்னா மற்றும் கௌசிக்ராம் ஆகிய 5 ஊழியர்களுக்குதான் தற்போது பிஎம்டபிள்யூ கார்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளன. கிஸ்ஃப்ளோ நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான சுரேஷ் சம்பந்தம் (Suresh Sambandam), 5 ஊழியர்களுக்கும் விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ கார்களை பரிசாக வழங்கி, அவர்களையும், அவர்கள் குடும்பத்தினரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளார்.

பிஎம்டபிள்யூ கார்களை பரிசாக பெற்ற ஊழியர்கள் அனைவரும், அனைத்து ஏற்ற, இறக்கங்களிலும் சுரேஷ் சம்பந்தத்துடன் சேர்ந்தே பயணம் செய்தவர்கள் ஆவர். அவர்கள் 5 பேருடைய திறமை மற்றும் உழைப்பை கௌரவிக்கும் வகையிலும், மென்மேலும் சாதனைகள் படைக்க அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், பிஎம்டபிள்யூ கார்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளன.

மேற்கண்ட 5 ஊழியர்களுக்கும், 'பார்ட்டி' என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் பேரில் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். அப்போது அவர்களுக்கு சர்ப்ரைஸாக பிஎம்டபிள்யூ கார்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளன. உழைப்பும், திறமையும் இருந்தால், அதற்கான அங்கீகாரம் நிச்சயமாக கிடைக்கும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு உதாரணம் மட்டுமே.

கிஸ்ஃப்ளோ நிறுவனத்தின் ஊழியர்களுக்கு பரிசாக கிடைத்திருப்பது பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் (BMW 5 Series) கார்கள் ஆகும். இந்த காரில், 1 பெட்ரோல் மற்றும் 2 டீசல் என மொத்தம் 3 இன்ஜின் தேர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்படி 2.0 லிட்டர் பெட்ரோல், 2.0 லிட்டர் டீசல் மற்றும் 3.0 லிட்டர் டீசல் என்று மொத்தம் 3 இன்ஜின் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

இதில் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 5,200 ஆர்பிஎம்மில் 248.08 பிஹெச்பி பவரையும், 1450-4800 ஆர்பிஎம்மில் 350 என்எம் டார்க் திறனையும் வழங்க கூடியது. அதே நேரத்தில் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் 4,000 ஆர்பிஎம்மில் 187.74 பிஹெச்பி பவரையும், 1,750-2,500 ஆர்பிஎம்மில் 400 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

மறுபக்கம் 3.0 லிட்டர் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 4,000 ஆர்பிஎம்மில் 261.49 பிஹெச்பி பவரையும், 2,000-2,500 ஆர்பிஎம்மில் 620 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்க கூடியது. இந்தியாவில் தற்போதைய நிலையில் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட் 63.90 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே சமயம் இந்த காரின் டாப் வேரியண்ட், 74 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனையாகி கொண்டுள்ளது. இவை அனைத்தும் புது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆன் ரோடு விலை இன்னும் ஒரு சில லட்சங்கள் கூடுதலாக வரும். இவ்வளவு விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ காரைதான், கிஸ்ஃப்ளோ ஊழியர்கள் தற்போது பரிசாக பெற்றுள்ளனர்.

இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ நிறுவன கார்களின் விலை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். பிஎம்டபிள்யூ மட்டுமல்லாது, அதன் போட்டி நிறுவனங்களான மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ஆடி போன்ற சொகுசு கார் நிறுவனங்களும் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்களுடைய கார்களின் விலைகளை அதிரடியாக உயர்த்தியுள்ளன.

உற்பத்தி செலவுகள் உயர்ந்து வருவதன் காரணமாக சொகுசு கார் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளின் விலைகளை அதிகரித்துள்ளன. இதற்கிடையே சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ கார்களை பரிசாக வழங்கியுள்ள கிஸ்ஃப்ளோ நிறுவனத்திற்கும், அதன் நிறுவனம் மற்றும் தலைமை செயல் அதிகாரியான சுரேஷ் சம்பந்தத்திற்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications








