2.5 மணிநேரம் படம் முடியுறதுக்குள்ள பெங்களூர் போய்டலாம்! சென்னைக்கு சேர வேண்டிய புகழ் தாமதமாகிட்டே போகுது!
சென்னை- பெங்களூர் (Chennai- Bengaluru) நெடுஞ்சாலை ஆனது இந்தியாவின் மிக முக்கியமான நெடுஞ்சாலைகளுள் ஒன்றாக விளங்குகிறது. குறிப்பாக, தென்னிந்தியாவின் இரு பெரும் மாநகரங்களை இணைக்கக்கூடிய முக்கியமான போக்குவரத்து வழித்தடமாக சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலை விளங்குகிறது. சென்னை துறைமுகத்திற்கு வரும் பொருட்களை சாலை வழியாக இந்தியாவின் மென்பொருள் தலைநகரமாக பார்க்கப்படும் பெங்களூருக்கு கொண்டு செல்வதற்கு இந்த நெடுஞ்சாலை முக்கியமானதாக விளங்குகிறது. ஆனால், இந்த நெடுஞ்சாலையின் நிறைய பகுதிகள் சேதமடைந்து கிடப்பதை அவ்வழியாக சமீபத்தில் சென்றவர்களுக்கு தெரிந்திருக்கும்.
இதனாலும், பயணத்தை இன்னும் விரைவுப்படுத்தும் முயற்சியாகவும் சென்னை மற்றும் பெங்களூருக்கு இடையே விரைவுச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து பெங்களூருக்கு சாலை வழியாக வெறும் 3 மணிநேரத்தில் செல்ல வழிவகுக்கக்கூடிய இந்த விரைவுச்சாலையை அமைக்கும் பணிகள் கிட்டத்தட்ட வருடக்கணக்கில் நடைபெற்று வருகின்றன. ஆனால் இன்னும் முடிந்தப்பாடில்லை.

மொத்தம் 262கிமீ தொலைவிற்கு அமைக்கப்பட்டு வரும் சென்னை-பெங்களூர் விரைவுச்சாலை ஆனது தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகா என 3 மாநிலங்கள் வழியாக செல்லும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. கர்நாடகாவின் மைசூர் மற்றும் பெங்களூர் இடையேயான விரைவுச்சாலை ஆனது கடந்த 2024ஆம் ஆண்டின் துவக்கத்தில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. பிரதமர் மோடி நேரில் அந்த விரைவுச்சாலையை திறந்து வைத்தார்.
இதனாலேயே, சென்னை-பெங்களூர் விரைவுச்சாலை ஆனது பெங்களூரில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது. இந்த சாலை அமைக்கும் பணிகள் பரபரப்பாக நடைபெற்றுவந்த நிலையில், கர்நாடகா மாநிலத்தில் 71கிமீ தொலைவிற்கு இந்த விரைவுச்சாலையின் ஒரு பகுதி கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அதனை தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதத்தில் மீதி 68கிமீ தொலைவிற்கான சாலையும் திறக்கப்பட்டது.

இதன் மூலம், மைசூரில் இருந்து கர்நாடகா மாநிலம் நிறைவடையும் வரையில் விரைவுச்சாலை ஆனது ஏற்கனவே பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. இன்னும், ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் இந்த விரைவுச்சாலையை அமைக்கும் பணிகள் மட்டுமே மிச்சம் உள்ளன. இந்த பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று, சென்னை- பெங்களூர் விரைவுச்சாலை முழுவதுமாக அடுத்த 2026ஆம் ஆண்டின் மத்தியில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி (Nitin Gadkari) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் மாநிலங்கள் அவையின் உறுப்பினர் லாஹர் சிங் சிரோயா (Lahar Singh Siroya) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது இதை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்த வகையில் பார்த்தால், நாம் எதிர்பார்த்ததை காட்டிலும் கிட்டத்தட்ட 1 வருடம் தாமதமாக இந்த விரைவுச்சாலை ஆனது பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுகிறது.

ஏனெனில், கடந்த சில வருடங்களாகவே நடைபெற்றுவரும் சென்னை- பெங்களூர் விரைவுச்சாலை பணிகள் இந்த 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவு பெற்றுவிடும் எனவும், ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தின்போது திறக்கப்படும் என்றெல்லாம் கடந்த ஆண்டில் தெரிவிக்கப்பட்டு வந்தது. பெங்களூரில் இருந்து சென்னையின் ஸ்ரீபெரும்புதூரில் முடியும் வகையில் அமைக்கப்பட்டு வரும் இந்த விரைவுச்சாலை ஆனது பெயருக்கேற்ப விரைவான போக்குவரத்துக்கு வழிவகுக்கக்கூடியது.
ஏற்கனவே இந்தியாவின் முக்கியமான மாநகரங்களை இணைக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட விரைவுச்சாலைகளில் அதிகப்பட்சமாக 120கிமீ வேகத்தில் செல்லலாம். இந்த வகையில் பார்த்தால், சென்னையில் இருந்து பெங்களூரை இந்த விரைவுச்சாலையின் வாயிலாக 2.5- 3 மணிநேரத்தில் சென்றடைந்துவிடலாம். சென்னை- பெங்களூர் விரைவுச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு சுமார் ரூ.17 ஆயிரத்து 900 கோடி நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: முன்னதாக 2025 ஆகஸ்ட்டில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்ட இந்த விரைவுச்சாலை ஆனது தற்போது 2026 ஜூன் மாதத்தில்தான் திறக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல்களையும் எந்த அளவிற்கு நம்புவது என தெரியவில்லை. ஏனெனில், இந்த விரைவுச்சாலை அமைக்கும் பணிகளில் மீண்டும் இடையூறுகள் ஏற்படாது என நம்மால் உறுதியாக சொல்ல முடியாது அல்லவா...
Source: Moneycontrol


Click it and Unblock the Notifications









