இந்தியாவிலேயே முதல் முறை! சென்னை-கோவை வந்தே பாரத் ரயிலில் இப்படி ஒரு விஷயம் இருக்கா! இதை யாருமே கவனிக்கல!
இந்தியாவின் முக்கியமான நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (Vande Bharat Express) ரயில்களை இயக்குவதில் இந்திய ரயில்வே அதிக ஆர்வம் காட்டி வருகிறது. வழக்கமான இந்திய ரயில்களுடன் ஒப்பிடும்போது, முற்றிலும் வேறுபட்டதாக இருப்பதால், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணம் செய்ய பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆனால் தென் இந்தியாவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படாமல் இருந்தது ஒரு குறையாக பார்க்கப்பட்டு வந்தது. அந்த குறையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய ரயில்வே நிவர்த்தி செய்தது. தென் இந்தியாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (South India's First Vande Bharat Express) ரயில் தற்போது சென்னை-மைசூர் (Chennai-Mysuru) இடையே இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் பெங்களூர் வழியாக பயணிக்கிறது.

இதை தொடர்ந்து தென் இந்தியாவின் 2வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பயன்பாட்டிற்கு கொண்டு வர இந்திய ரயில்வே தற்போது வேகமாக தயாராகி வருகிறது. பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த ரயில், சென்னை-கோவை (Chennai-Coimbatore) ஆகிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படவுள்ளது.
முழுக்க முழுக்க தமிழகத்திற்கு உள்ளேயே இயக்கப்படும் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் என்ற பெருமையை இது பெறவுள்ளது. சென்னை-கோவை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு மற்றொரு பெருமையும் கிடைக்கவுள்ளது. இந்த ரயிலில் 8 பெட்டிகள் மட்டுமே இணைக்கப்பட்டிருக்கும்.

இதன் மூலம் 8 பெட்டிகளுடன் இயக்கப்படும் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் என்ற பெருமையை, இது தனதாக்கவுள்ளது. பொதுவாக இந்தியாவில் இயக்கப்படும் மற்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் 16 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் உற்பத்தி செலவு (Production Cost) சுமார் 130 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. ஆனால் 8 பெட்டிகளை மட்டுமே கொண்ட மினி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான உற்பத்தி செலவு வெறும் 70 கோடி ரூபாய் மட்டுமே என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் நாட்களில் இந்தியாவின் மற்ற நகரங்களுக்கு இடையேயும் மினி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களை மட்டுமல்லாது, அவற்றுக்கு அடுத்த நிலையில் உள்ள கோவை, மதுரை போன்ற நகரங்களையும் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே சென்னை-கோவை இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் சோதனை ஓட்டம் (Trial Run) தற்போது வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. நேற்று (மார்ச் 30ம் தேதி) காலை சரியாக 5.40 மணிக்கு சென்னையில் இருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் சோதனை ஓட்டம் தொடங்கியது.
அங்கிருந்து ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் வழியாக காலை சரியாக 11.18 மணிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் கோவை வந்தடைந்தது. அதாவது சரியாக 5 மணி நேரம் மற்றும் 38 நிமிடங்களில் இந்த ரயில் சென்னையில் இருந்து கோவைக்கு வந்து சேர்ந்து விட்டது.
இங்கே குறிப்பிட வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், காலை 11.40 மணிக்குதான் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் கோவை வருவதாக இருந்தது. ஆனால் அதற்கு 22 நிமிடங்கள் முன்னதாக, 11.18 மணிக்கே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் கோவையை வந்தடைந்து விட்டது.
சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிவடைந்துள்ள நிலையில், சென்னை-கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் ஏப்ரல் 8ம் (April 8) தேதியில் இருந்து பயணிகளின் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi), இந்த ரயிலின் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைக்கவுள்ளார்.
இந்த தகவல் ரயில் பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சென்னை-கோவை இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் அதிகாரப்பூர்வமான வருகை மற்றும் புறப்பாடு தொடர்பான கால அட்டவணை இன்னும் வெளியாகவில்லை. கூடிய விரைவில் ரயில்வே அதனை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?
சென்னை-கோவையை போன்று, கோவை-பெங்களூர் (Coimbatore-Bangalore) இடையே மினி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர். ஏற்கனவே டபுள் டக்கர் ரயிலான (Double-Decker Train) உதய் எக்ஸ்பிரஸ் (Uday Express) போன்ற பல்வேறு ரயில்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டாலும், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் என்ற கோரிக்கையையும் ரயில்வே நிறைவேற்றினால், பயணிகள் மகிழ்ச்சி அடைவார்கள்.


Click it and Unblock the Notifications








