சென்னையில் 9 இடத்துல வருது... அரசாங்கத்திடம் இருந்து அனுமதி கிடைச்சாச்சு!! எலக்ட்ரிக் காரை தைரியமா வாங்கலாம்
எலக்ட்ரிக் வாகனங்களுக்கு (Electric Vehicles) இந்தியா முழுவதுமே மெல்ல மெல்ல தேவை அதிகரித்து வருகிறது. சாலையில் பார்க்கும் இடம் எல்லாம் குறைந்தது ஒரு எலக்ட்ரிக் வாகனத்தை ஆவது பார்க்க முடிகிறது. ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா உடன் ஒப்பிடுகையில் நம் தமிழ்நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு சற்று குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். தற்போதைக்கு தலைநகர் சென்னையில் மட்டுமே அதிக பேர் எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், சென்னையில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் ஓர் அதிரடியான அறிவிப்பு வெளிவந்துள்ளது.
அது என்னவென்றால், சென்னையின் முக்கியமான பகுதிகளில் எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையங்கள் அரசாங்கம் சார்பில் நிறுவப்பட உள்ளன. சென்னை முழுவதும் சார்ஜிங் நிலையங்களை கொண்டுவருவதுதான் சென்னை மாநகராட்சியின் எதிர்கால திட்டம். அவற்றுள் முதற்கட்டமாக சென்னையில் 9 முக்கியமான இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்த 9 சார்ஜிங் நிலையங்களில் இரு நிலையங்கள் தியாகராயர் நகரிலும், இரு நிலையங்கள் பெசன்ட் நகரிலும் அமைய உள்ளன. தி.நகரில் அதிக வாகன ஓட்டிகள் வருவார்கள் என்பதால், ஏற்கனவே பார்க்கிங் பகுதியாக உபயோகப்படுத்தப்பட்டு வரும் மாநகராட்சி மைதானம் மற்றும் சோமசுந்தரம் மைதானத்தில் இவி சார்ஜிங் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
பெசன்ட் நகரில் அமையவுள்ள இரு சார்ஜிங் நிலையங்களுள் ஒன்று பீச் பார்க்கிங் பகுதியில் அமைய உள்ளது. சென்னையின் மிக முக்கியமான பகுதிகளாக விளங்கும் இவற்றில் 4 சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட்டது போக, மெரினா கடற்கரை, செம்மொழி பூங்கா, அண்ணாநகர், மயிலாப்பூர் மற்றும் அம்பத்தூரில் தலா ஒரு இவி சார்ஜிங் நிலையம் முதற்கட்டமாக அமைக்கப்பட உள்ளன.

மக்கள் தொகை அதிகம் கொண்ட சென்னையின் இந்த பகுதிகளில் எந்த இடத்தில் இவி சார்ஜிங் நிலையம் அமைத்தால் பாதுகாப்பாக இருக்கும் என்பதை ஆய்வு செய்து, தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்துடன் இணைந்து 9 இடங்களை சென்னை மாநகராட்சி தேர்வு செய்துள்ளது. அரசாங்கத்தால் இந்த இவி சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட்டாலும், உண்மையில் சார்ஜிங் நிலையங்களை அமைத்து, அவற்றை முறையாக பராமரிக்க போவது ஏதோ தனியார் நிறுவனம் தான்.
இதற்கான டெண்டர் இன்னும் 2 வாரங்களில் தனியார் நிறுவனங்களிடம் கோரப்பட உள்ளன. அவற்றுள், குறைந்த செலவில், பாதுகாப்பான முறையில் இவி சார்ஜிங் நிலையங்களை அமைத்து பராமரிக்க முன்வரும் நிறுவனத்திற்கு டெண்டர் அளிக்கப்படும். இன்னும் 2 மாதங்களில் மேற்கூறப்பட்ட 9 இடங்களில் இவி சார்ஜிங் நிலையங்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுவிடும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளதால், டெண்டர் அளிக்கப்பட்ட வேகத்தில் சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் பணிகள் துவங்கப்பட உள்ளன.

எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான சார்ஜர்கள் பொதுவாக இரு வகைப்படுகின்றன. ஒன்று, வீட்டிலும், அலுவலகத்திலும் சார்ஜ் செய்யக்கூடிய, திறன் குறைந்த மாறுதிசை மின்னோட்ட (AC) சார்ஜர், மற்றொன்று அதிக மின்சாரத்தில் செயல்படக்கூடிய நேர்திசை மின்னோட்ட (DC) சார்ஜர் ஆகும். நேர்திசை மின்னோட்ட சார்ஜர்கள் அதிக மின்சாரத்தில் இயங்கக்கூடியவை என்பதால், அவற்றை வீட்டில் அமைப்பது செலவு மிகுந்த காரியம் ஆகும்.
அலுவலகங்களில் கூட இவற்றை அமைப்பது கிடையாது. ஏனெனில், அந்த அளவிற்கு அதிகப்படியான மின்சாரம் தேவைப்படுகிறது. இதனால், டிசி சார்ஜரை அரசாங்கங்கள் அல்லது தனியார் நிறுவனங்களால் மட்டுமே அமைக்க முடியும். அத்தகைய, வேகமாக சார்ஜ் செய்யக்கூடிய டிசி சார்ஜர் தான் சென்னையில் புதியதாக 9 இடங்களில் நிறுவப்பட உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெட்ரோல், டீசல் பங்க்களில் எரிபொருளை நிரப்புவதுபோல், எலக்ட்ரிக் வாகனத்தை விரிவாக சார்ஜ் செய்ய முடிவதில்லை என்பதுதான் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் மிகவும் மெதுவாக அதிகரித்து வருவதற்கு காரணம் ஆகும். ஆதலால், சென்னை மாநகராட்சி போன்ற அரசாங்கமே தாமாக முன்வந்து இவ்வாறு இவி சார்ஜிங் நிலையங்களை மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் நிறுவுவதன் மூலமாக எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க முடியும்.
Note: Images used for representational purpose only.


Click it and Unblock the Notifications









