ஃபிளைட் மாதிரி வசதிகள் கொண்ட சென்னை தாழ்தள சொகுசு பஸ்கள்! இதுல இவ்வளவு விஷயம் இருக்குதா?
நேற்று புதிதாக 100 புதிய பஸ்கள் பயன்பாட்டிற்காக கொண்டுவரப்பட்டுள்ளன. அதில் 58 பஸ்கள் ஏசி அல்லாத தாழ் தள பஸ்களாக உருவாக்கப்பட்டுள்ளன. இதில் மற்ற பஸ்களை விட அதிக வசதிகள் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னையில் தாழ் தள சொகுசு பஸ்க்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சென்னை பகுதியில் கடந்த 2011-12 ம் ஆண்டு எம்டிசிக்காக 100 புதிய ஏசி தாழ் தள பஸ்களும், ஆயிரம் ஏசி அல்லாத செமி தாழ் தள பஸ்களும் பயன்பாட்டிற்கு வந்தன. இந்த பஸ்களை எல்லாம் ஜேஎன்என்யூஆர்எம் என்ற அமைப்பிலிருந்து வழங்கப்பட்ட நிதியிலிருந்து வழங்கப்பட்டிருந்தது.

இந்த பஸ்கள் எல்லாம் கடந்து 2016-18 ஆண்டுகளுடன் பயன்பாட்டில் இருந்து நிறுத்தப்பட்டது. அதன் பிறகு சென்னையில் சொகுசு பஸ்கள் பயன்பாட்டில் இல்லாமல் இருந்தன. இந்நிலையில் தற்போது புதிதாக சென்னைக்கு 611 பஸ்களை வாங்க தமிழக அரசு முடிவு செய்திருந்தது. அதில் ஒரு பஸ் எலெக்ட்ரிக் பஸாகவும் இருக்கும் என திட்டமிட்டு இருந்தது.
இந்த பஸ்ஸில் முதல் 58 பஸ்கள் தற்போது டெலிவரி செய்யப்பட்டுள்ளன. இந்த பஸ்கள் எல்லாம் தற்போது பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள பஸ்கள் எல்லாம் அடுத்த ஆறு மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் தற்போது இயங்கி வரும் மற்ற பஸ்களுக்கும் இந்த தாழ்தள பஸ்களுக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருக்கிறது.

இந்த தாழ் தள பஸ்களில் ஏர் சஸ்பென்ஷன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பஸ்ஸின் உயரத்தை மாற்றிக் கொள்ள முடியும். இதுபோக இந்த பஸ்களில் எல்லாம் ஜிபிஎஸ் டிராக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. இது போக பஸ்ஸின் உள்ளே பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்யும் வகையில் எல்இடி டிஸ்ப்ளே போர்டுகளும் பொருத்தப்பட்டுள்ளது. பஸ்ஸுக்குள் இருக்கும் பயணிகளின் வசதிக்காக பெரிய ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த பஸ்களில் பொதுமக்கள் ஸ்டாப்புகளில் இறங்கும்போது பொதுமக்களுக்கான அறிவிப்புகளை செய்ய அறிவிப்பு சிஸ்டமும் பொருத்தப்பட்டுள்ளது. சீட்டுகள் எல்லாம் சொகுசு வசதியுடன் கூடிய சீட்டுகளாக வழங்கப்பட்டுள்ளன. இதனால் சென்னையில் தற்போது இயங்கி வரும் மற்ற பஸ்ஸில் பயணிப்பதற்கும் இந்த தாழ் தள பஸ்களுக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருக்கிறது.

மேலும் இந்த பஸ்ஸில் கூடுதலாக ஃபயர் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதுபோக பஸ் தீப்பிடித்து எரிந்தால் தீயை உடனடியாக அணைப்பதற்கு ஃபயர் சேஃப்டி நாசில்களும் வழங்கப்பட்டுள்ளன. பஸ் இன்ஜின் அதிகமாக சூடாகி ஹீட்டானால் தானாக அந்த தீயை அணைக்கும் சிஸ்டமும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பஸ்சில் மொத்தம் 35 சீட்டுகள் இருக்கின்றன0 இந்த சீட்டுகள் உட்பட மொத்தம் 70 பயணிகள் வரை பயணிக்கலாம்.
மிக முக்கியமாக இந்த பஸ்கள் வீல் சேருடன் வரும். மாற்றுத்திறனாளிகள் எளிதாக ஏறி இறங்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக அவர்கள் வீல் சேருடன் உள்ளே வந்து தங்களை லாக் செய்து கொள்ளும் வகையில் வசதிகள் இந்த பஸ்ஸில் வழங்கப்பட்டுள்ளன. இதை முறையாக செயல்படுத்த பஸ் ஓட்டுனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த பஸ் ஆட்டோமேட்டிக் கியர் சிஸ்டம் பொருத்தப்பட்ட பஸ்ஸாக இருக்கிறது. இதனால் இந்த பஸ் இயக்குவதற்கு டிரைவருக்கு பெரிய பிரச்சினை இருக்காது. கியர் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை தானியங்கியாக பஸ்ஸில் நிலைமைகளை புரிந்து தன்னைத்தானே மாற்றிக் கொள்ளும் வசதி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த பஸ்ஸை இயக்குவது டிரைவர்களுக்கு சுலபமாக இருக்கும்.
இந்த பஸ்ஸில் இருக்கும் ஒவ்வொரு சீட் பகுதிக்கு அருகேயும் SOS பட்டன் இருக்கிறது. இதை அழுத்தினால் டிரைவர் இருக்கும் பகுதியில் பஸ் உள்ளே பிரச்சினை நடப்பது தெரியும். உடனடியாக டிரைவர் மற்றும் நடத்துனர் அதற்காக ரியாக்ட் செய்ய முடியும். இதுபோக டிரைவர் சீட்டுக்கு அருகே எவாக்குவேஷன் பட்டன் இருக்கிறது. அதை அழுத்தினால் பஸ்ஸில் உள்ள அனைத்து கதவுகளும் திறந்து விடும். பஸ்ஸிலிருந்து மூன்று பகுதி வழியாக பொதுமக்கள் வெளியேறுவதற்கான வாய்ப்பிருக்கிறது.
இந்த புதிய தாழ் தள சொகுசு பஸ்களின் அளவை பொருத்தவரை 400 மீமி கிரவுண்ட் கிளியரன்ஸ் இருக்கிறது இது சாதாரண பஸ்களில் 750 மிமீயாகவும் டீலக்ஸ் பஸ்களில் 650மிமீயாகவும் இருக்கிறது. அதைவிட குறைந்த உயரத்தில் இந்த பஸ்ஸின் கிரவுண்ட் கிளியரன்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
அதனால் இந்த பஸ்களை அதிக இடைஞ்சல் நிறைந்த மற்றும் ரோடு சரி இல்லாத பகுதிகளில் கொண்டு செல்வது சிரமம். இதற்கான சோதனை நடத்தப்பட்ட பின்பே அந்த பகுதிகளில் பஸ் இயக்கப்படுமா அல்லது அதற்கான வாய்ப்பு இல்லையா என்பது முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த பஸ்கள் எல்லாம் கிட்டத்தட்ட விமானத்தில் இருப்பது போன்ற வசதிகள் நிறைந்த பஸ்களாக இருக்கின்றன. இதில் உள்ள அம்சங்களை பார்த்து பலரும் வியந்து வருகிறார்கள். சென்னை பகுதியில் இது எந்தெந்த ரூட்களில் பயன்பாடு வரப்போகிறது என்ற தகவல் பின்னர் வெளியிடப்படும். தற்போது இந்த ரூட்டுகளில் எல்லாம் இந்த பஸ்களை எடுத்துச் செல்வதற்கான ஆய்வுகள் நடந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications









