சென்னையில் கூடவா இப்படியெல்லாம் கார் விபத்து நடக்குது? இந்தியன் மோட்டார் வாகன சட்டம் என்ன சொல்லுது?
புனேவில் கடந்த ஜூன் மாதத்தில் 17 வயது சிறுவன் மது போதையில் அதிவேகமாக ஓட்டி சென்ற விலையுயர்ந்த போர்ஷே கார் மோதி இருவர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்றதான சம்பவம் இனி எங்கும் நடைபெற கூடாது என நாம் வேண்டிக் கொண்டிருக்கும் நிலையில், நம் சென்னையில் சிறுவன் ஒருவன் வேகமாக ஓட்டி சென்ற கார் மோதி இருவர் காயமடைந்துள்ளனர் மற்றும் பல்வேறு வாகனங்கள் சேதமடைந்துள்ளன. என்ன நடந்தது? வாருங்கள் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் இருசக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு குறைந்தப்பட்ச வயது 16 ஆகும். ஆனால், 16 வயது என்பது மிகவும் குறைவு என்பதை உணர்த்தும் வகையில் பல்வேறு சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுகின்றன. ஏனெனில், அந்த அளவிற்கு சாலை போக்குவரத்தானது பாதுகாப்பற்றதாக உள்ளது. தமிழ்நாட்டில், மற்ற 3-சக்கர & 4-சக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு குறைந்தப்பட்ச வயதாக 18 உள்ளது.

இந்த வயது வரம்புகளை பொருட்படுத்தாமல், சிறு வயதில் நிறைய பேர் வாகனங்களை ஓட்டுகின்றனர். அதன் விளைவாக, சாலை விபத்துகளும் அதிகம் நடைபெறுகின்றன. அந்த வரிசையில், சென்னையின் ஜாம்பஜார் பகுதியில் 14 வயது சிறுவன் ஒருவனால் விபத்து நடந்துள்ளது. சென்னையின் பிசியான பகுதிகளுள் ஒன்று, ஜாம் பஜார் ஆகும். அந்த வகையில், நேற்று (ஜூலை 16) மாலையிலும் ஜாம் பஜார் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
மாலை 6 மணியளவில் டொயோட்டா இன்னோவா கார் ஒன்று சாலையை கிழித்துக்கொண்டு அதிவேகமாக வந்தது. இதனை பார்த்த மற்ற வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அதிர்ச்சியடைந்தனர். என்னவென்று, சூதாரிப்பதற்குள் அந்த இன்னோவா கார் சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களையும், சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இந்த மோதலில் இருவர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 5 இருசக்கர வாகனங்கள் சேதமாகி உள்ளன. மோதிவிட்டு கார் நிற்காமல் சென்றதை பார்த்ததும், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஜாம்பஜார் காவல் துறையினர் தங்களது வாகனங்களில் அந்த காரை விரட்டி சென்றனர். 1 கிமீ தொலைவிற்கு பின் அந்த இன்னோவா காரை மடக்கி பிடித்த போலீசார், காரின் கதவுகளை திறந்து பார்த்த போது அவர்களுக்கு பெரிய ஷாக் காத்திருந்தது.
ஏனெனில், அந்த காரினுள் இரு சிறுவர்கள் இருந்துள்ளனர். அதில், 9ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவன் ஒருவன் தான் இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளான். இதனையடுத்து, அந்த இன்னோவா காரை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த சிறுவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில், இது அந்த சிறுவர்களில் ஒருவனது பெரியப்பாவின் கார் என்பதை போலீசார் கண்டறிந்தனர். அடுத்தக்கட்ட விசாரணைகள் ஜாம்பஜார் காவல் நிலையத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே கூறியதுபோல், இவ்வாறு போதிய வயதை எட்டாத, ஓட்டுனர் உரிமம் இல்லாத சிறுவர்கள் கார் & பைக்குகள் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்துவது நம் நாட்டில் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து இந்திய மோட்டார் வாகன சட்டம் பிரிவு 199 (ஏ) என்ன சொல்கிறது என்றால், மைனர் வாகனம் ஓட்டினாலே (விபத்து ஏற்படுத்துவது/ ஏற்படுத்தாதது எல்லாம் அடுத்தப்படியான விஷயம்) அந்த வாகனத்தின் உரிமையாளர் தான் முழு பொறுப்பாகும். அவருக்கு அதிகப்பட்சமாக 3 வருடங்கள் வரையில் சிறைத்தண்டனை அல்லது ரூ.25,000 அபராதம் விதிக்கப்படுவதற்கு சட்டம் அனுமதிக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது சென்னை ஜாம்பஜாரில் நடந்துள்ள சம்பவத்திலும், அந்த சிறுவனின் பெரியப்பா தான் அவனுக்கு காரின் சாவியை வழங்கியுள்ளார் என நாங்கள் கூறவில்லை. ஆனால், அவருக்கு தெரியாமல் நடந்தாலும் இந்த குற்றத்தில் அவருக்கும் பங்கு உண்டு. ஆதலால், சிறுவர், சிறுமியரின் கண்ணில் படும் வகையில் வாகனங்களின் சாவியை வைக்க வேண்டாம்.


Click it and Unblock the Notifications








