இந்த தீபாவளியை மறக்கவே மாட்டாங்க! ஊழியர்களுக்கு இப்படி ஒரு பரிசா! சென்னை தொழிலதிபரை வியந்து பார்க்கும் மக்கள்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தொழிலதிபர் ஒருவர், ஊழியர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் மக்கள் உற்சாகமாக கொண்டாடும் தீபாவளி (Diwali) பண்டிகை நெருங்கி விட்டது. தீபாவளிக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. அடுத்த வாரம் இந்நேரம் எல்லாம் (அக்டோபர் 24, திங்கள் கிழமை), நாம் அனைவரும் குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை மிகுந்த ஆரவாரத்துடன் கொண்டாடி கொண்டிருப்போம்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது வழக்கம். ஒரு சில நிறுவனங்களில் ஏற்கனவே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டு விட்டது. ஆனால் வேறு சில நிறுவனங்கள் இன்னும் தங்கள் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கவில்லை. தீபாவளிக்கு முந்தைய நாள் போனஸ் வழங்குவதை பல்வேறு நிறுவனங்கள் வாடிக்கையாக வைத்துள்ளன.

போனஸ் வாங்கிய கையோடு ஊழியர்கள் வேலையை விட்டு சென்று விடக்கூடாது என்பதற்காக இந்த யுக்தி கடைபிடிக்கப்படுகிறது. ஊழியர்கள் மீது நம்பிக்கை இல்லாமல் ஒரு சில நிறுவனங்கள் நடந்து கொள்வதை கிண்டல் அடிக்கும் வகையில் சமூக வலை தளங்களில் தற்போது வேடிக்கையாக நிறைய மீம்ஸ்கள் உலா வந்து கொண்டிருப்பதை நம்மால் காண முடிகிறது.

இப்படி பணியாளர்கள் மீது நம்பிக்கை இல்லாத நிறுவனங்களுக்கு மத்தியில், தன்னிடம் வேலை செய்யும் ஊழியர்களை தன்னுடைய குடும்ப உறுப்பினர்களாக கருதி தொழிலதிபர் (Businessman) ஒருவர் சந்தோஷத்தில் திக்கு முக்காட வைத்துள்ளார். இந்த தீபாவளி பண்டிகையை அவர்கள் வாழ்நாள் முழுமைக்கும் மறக்க முடியாத வகையில் அவரது பரிசுகள் அமைந்துள்ளன.

ஊழியர்களை மகிழ்ச்சியில் திக்கு முக்காட வைத்திருப்பவர் சென்னையை (Chennai) சேர்ந்த தொழிலதிபர் என்பது கூடுதல் சிறப்பு ஆகும். ''எங்க முதலாளி... நல்ல முதலாளி...'' என தீபாவளி பரிசு பெற்ற ஊழியர்கள் அனைவரும் தற்போது கோரஸாக பாட்டு பாடி கொண்டிருக்கும் தொழிலதிபரின் பெயர் ஜெயந்தி லால் சாயந்தி (Jayanthi Lal Chayanthi) என்பதாகும்.

இவர் நகைக்கடை (Jewellery) நடத்தி வருகிறார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தன்னிடம் நன்றாக வேலை செய்யும் ஊழியர்களுக்கு சர்ப்ரைஸாக விலை உயர்ந்த பரிசுகளை வழங்க ஜெயந்தி லால் சாயந்தி முடிவு செய்தார். என்ன பரிசு வழங்கலாம்? என யோசித்து கொண்டிருந்த சமயத்தில், கார்கள் மற்றும் டூவீலர்களை வழங்கலாமே என்ற யோசனை அவரது மனதில் உதித்தது.

இதன்பின்னர் காலம் தாழ்த்தாமல் உடனடியாக அவர் தன் யோசனையை செயல்படுத்தி விட்டார். இதன்படி 10 ஊழியர்களுக்கு கார்களையும், 20 ஊழியர்களுக்கு டூவீலர்களையும் அவர் தற்போது பரிசாக வழங்கியுள்ளார். இந்த பிரம்மாண்டமான தீபாவளி பரிசுகள் தற்போது இந்தியா முழுக்க அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) கார்கள் மற்றும் ஹோண்டா ஷைன் (Honda Shine) பைக்குகள் ஆகியவற்றை ஜெயந்தி லால் சாயந்தி தன் ஊழியர்களுக்கு பரிசாக கொடுத்துள்ளார். மேலும் ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) ஸ்கூட்டர்களும் கூட ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக வழங்கப்பட்டுள்ளன.

இவை அனைத்துமே தற்போது இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள வாகனங்கள் ஆகும். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிரபலமான மற்றும் தரமான வாகனங்களை ஜெயந்தி லால் சாயந்தி தன்னுடைய ஊழியர்களுக்கு பரிசாக வழங்கியுள்ளார். இவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு 1.2 கோடி ரூபாய் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இது தொடர்பாக ஜெயந்தி லால் சாயந்தி கூறுகையில், ''ஊழியர்களின் திறமையை பாராட்டும் மற்றும் ஊக்குவிக்கும் வகையில் இந்த பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் அவர்களின் வாழ்வில் சிறப்பை சேர்க்கும். எனது தொழிலின் ஏற்ற, இறக்கங்கள் அனைத்திலும் அவர்கள் என்னுடன் சேர்ந்து பணியாற்றியுள்ளனர்.

இதன் மூலம் லாபம் சம்பாதிப்பதற்கு அவர்கள் எனக்கு உதவி செய்துள்ளனர். அவர்கள் வெறும் ஊழியர்கள் அல்ல. அவர்களும் என்னுடைய குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான். எனவே சர்ப்ரைஸாக பரிசுகளை வழங்கி எனது குடும்ப உறுப்பினர்களை போலவே அவர்களை நடத்துவதற்கு நான் விரும்புகிறேன். இது எனது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து நிறுவனங்களின் உரிமையாளர்களும், தங்களிடம் வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரையும் மதிப்புடன் நடத்த வேண்டும். அவர்களுக்கு பரிசுகளை வழங்க வேண்டும்'' என்றார். தொழிலதிபர் ஜெயந்தி லால் சாயந்திக்கு தற்போது சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் பலரும் பாராட்டு மழையை பொழிந்து வருகின்றனர்.

ஜெயந்தி லால் சாயந்தி ஊழியர்களுக்கு பரிசாக வழங்கியுள்ள ஹோண்டா ஷைன் மற்றும் ஆக்டிவா ஆகிய டூவீலர்கள் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக உள்ளன. மறுபக்கம் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரும், அறிமுகமே தேவையில்லை என்னும் அளவிற்கு பிரபலமாக திகழ்ந்து கொண்டுள்ளது.

இது ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த கார்களில் ஒன்றாகும். இந்தியாவில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் ஆரம்ப விலை 5.92 லட்ச ரூபாயாக இருக்கிறது. மறுபக்கத்தில் இந்த ஹேட்ச்பேக் காருடைய டாப் வேரியண்ட்டின் விலை 8.85 லட்ச ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். பெட்ரோல் வெர்ஷன் மற்றும் சிஎன்ஜி வெர்ஷன்களில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கிடைக்கிறது.

இதில், ஸ்விஃப்ட் காரின் புதிய சிஎன்ஜி வெர்ஷனை மாருதி சுஸுகி நிறுவனம் வெகு சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. பெட்ரோல், டீசலின் விலை மிகவும் அதிகமாக இருப்பதால், சிஎன்ஜி கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது. எனவே மாருதி சுஸுகி நிறுவனம் தொடர்ச்சியாக பல்வேறு புதிய சிஎன்ஜி கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications








