கார் ஓட்டுநர் உரிமத்தை போராடி பெற்ற சென்னை இளைஞர்.. சிறு வயதிலேயே மின்சார விபத்தால் இரண்டு கைகளை இழந்தவர்!
இரண்டு கைகளை இழந்தவரால் ஓட்டுநர் உரிமத்தைப் பெற முடியுமா என நீங்கள் கேட்கலாம்.. முடியும் என நிரூபித்துக் காட்டி இருக்கின்றார் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கே தனேசன் எனும் இளைஞர். 31 வயதான இவர் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றவர் ஆவார்.
சிறு வயதில் ஏற்பட்ட மின்சார விபத்தினால் இரண்டு கைகளையும் அவர் இழந்திருக்கின்றார். இந்த நிலையிலேயே, அவர் முதுகலைப் பட்டம் வரை சட்டப்படிப்பில் பெற்றிருக்கின்றார். இதைத்தொடர்ந்து, தன்னுடைய நீண்ட நாள் கனவான ஓட்டுநர் உரிமத்தையும் அவர் பெற்றிருக்கின்றனர். வட சென்னை ஆர்டிஓ வாயிலாகவே இவருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டு இருக்கின்றது.

Source: The New Indian Express அதற்கு முன்னர் அரசு மருத்துவர்களிடம் இருந்து அவர் உடற்தகுதி சான்றிதழை பெற்றிருக்கின்றார். இதன் அடிப்படையிலேயே அவருக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஓட்டுநர் உரிமத்தைப் பெற்ற கே தனேசன், தன்னைப் போன்று இன்னும் பல மாற்றுத் திறனாளிகள் வாகனத்தை இயக்கும் கனவுடன் இருக்கின்றனர்.
அவர்களுக்கும் அதிக சிரமத்தை வழங்காமல் உரிமம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை அவர் முன் வைத்தார். ஓட்டுநர் உரிமம் கிடைத்த உடன் தனேசன் முதலில் பெரம்பூரில் உள்ள கோவில் ஒன்றிற்கு குடும்பத்துடன் சென்றிருக்கின்றார். அவர் அருகில் இருக்கும் இடங்களுக்கு மட்டுமல்ல சற்று நீண்ட தூர பயணங்களையும் மேற்கொண்டிருக்கின்றார்.

அந்தவகையில், திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்னை வியாசர்பாடியில் இருந்து அவரே தனி ஆளாக காரை ஓட்டிச் சென்றிருக்கின்றார். கே தனேசன் ஓட்டுவதற்கு என சிறப்பு மாற்றங்கள் அந்த காரில் செய்யப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக, ஹாரன், இன்டிகேட்டர், வைப்பர் உள்ளிட்டவற்றை அவர் சுலபமாக இயக்கும் வகையில் மாடிஃபைச் செய்திருக்கின்றனர்.
அத்துடன், இதற்கான கன்ட்ரோல் சுவிட்சுகள் மிகவும் இலகுவானதாக வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும், சுவிட்சுகள் அனைத்தும் ஹேண்ட் பிரேக்கிற்கு அருகிலேயே பொருத்தப்பட்டு இருக்கின்றன. இது ஓர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட கார் என்பதால் கூடுதல் சிரமம் ஏதும் இன்றி அவரால் கார்களை இயக்க முடிந்திருக்கின்றது.

ஆக்சலரேட்டர் மற்றும் பிரேக்குகளுக்கு ஓர் காலையும், ஸ்டியரிங் வீலைக் கன்ட்ரோல் செய்ய மற்றொரு காலையும் அவர் பயன்படுத்துகின்றார். மேலும், காரைத் தொடர்ந்து தன்னுடைய அடுத்த லட்சியம் பைக்கை ஓட்டுவது என கே தனேசன் கூறியிருக்கின்ரார். இதற்கான பயிற்சியில் தான் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்து இருக்கின்றார்.
எனவே சீக்கிரமே பைக்கை ஓட்டுவதற்கான உரிமத்தையும் அவர் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுபோன்று மாற்று திறனாளிகள் இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் பெறுவது முதல் முறையல்ல. சமீபத்தில் கேரளாவைச் சேர்ந்த மாற்று திறனாளி இளம் பெண் காரை ஓட்டுவதற்கான லைசென்ஸைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இவரை மேற்கோளாகக் காட்டியே கே தனேசன் தனக்கான ஓட்டுநர் உரிமத்தைப் பெற முயற்சித்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜிலுமோல் தாமஸ். பிறவிலேயே கைகள் இல்லாமல் பிறந்தவர் இவர் ஆவார். இவரே காரை ஓட்டுவதற்கான உரிமத்தைச் சென்ற ஆண்டில் பெற்றிருந்தார்.
பல ஆண்டு கால போராட்டத்திற்கு பின்னரே அவருக்கான ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டது என்பது கவனிக்கத்தகுந்தது. சுமார் ஐந்தாண்டுகள் அவர் ஓட்டுநர் உரிமத்தைப் போரடியதாகக் கூறப்படுகின்றது. இதுமாதிரியான சிரமங்கள் ஏதும் இல்லாமல் மாற்று திறனாளிகள் ஓட்டுநர் உரிமம் பெற வேண்டும் என்பதே கே தனேசன் மற்றும் ஜிலுமோல் தாமஸின் வேண்டுகோள் ஆகும். ஜிலுமோல் தாமஸ், பயன்படுத்தி வரும் செலிரியோ காரும் அவருக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓட்டுநர் உரிமம் கிடைத்திருப்பதால் இவர்கள் பொதுப் போக்குவரத்திற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும் என்கிற சூழல் தவிர்க்கப்பட்டு இருக்கின்றது. குறிப்பாக, மிகவும் உள்ளே இருக்கும் பகுதிகளிக்கு செல்ல வாடகை ஆட்டோ அல்லது கார்களில்தான் போக வேண்டும் என்கிற கட்டாயம் தற்போது தவிர்க்கப்பட்டு இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









