சென்னைக்கு டபுள் டக்கர் பஸ் வரப்போகுது! எந்த "ரூட்"லன்னு தெரியுமா?
சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பஸ்களை இயக்க தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. கடந்த 2008-ம் ஆண்டு இந்த டபுள் டக்கர் பஸ்களின் சேவை நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதை செயல்பாட்டுக்கு கொண்டுவர தமிழக அரசு யோசித்து வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சென்னையில் கடந்த 2008ஆம் ஆண்டு வரை டபுள் டக்கர் என சொல்லக்கூடிய ஒன்றுக்கு மேல் மற்றொரு தளம் கொண்ட பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ்களில் பயணிப்பது என்பது ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரும். குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில் உயரமான கட்டிடங்கள் உள்ள பகுதிகளில் இந்த பஸ்கள் செல்லும்போது அதன் அழகை வித்தியாசமான கோணத்தில் இருந்து ரசிக்க முடியும்.

அதே நேரத்தில் இந்த பஸ்களில் அதிகமான எண்ணிக்கையில் பயணிகள் பயணிக்க முடியும். 2008-ம் ஆண்டில் மாநகரில் பல்வேறு மேம்பாலங்கள் வந்து விட்டதாலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி விட்டதாலும் இந்த பஸ்ஸின் சேவை நிறுத்தப்பட்டது. அதே நேரம் டிரைலர் பஸ்கள் எனப்படும் ஒரு பஸிற்க்கு பின்னால் மற்றொரு பஸ்ஸை பொருத்தி பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது.
இந்த பஸ்களும் குறுகலான சாலைகளின் எண்ணிக்கை அதிகமாகி விட்டதாலும் பஸ் ரூட்களில் நெருக்கடி அதிகமாகி விட்டதாலும் இந்த ரக பஸ்களையும் தமிழக அரசு நிறுத்தி தற்போது சாதாரண பஸ்கள் மட்டுமே இயக்கி வருகிறது. இந்நிலையில் தற்போது தமிழக அரசு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க மீண்டும் இந்த ரக பஸ்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே சென்னையில் டபுள் டக்கர் பஸ் இயக்கப்பட்டு வந்தபோது 18ஏ என்ற தாம்பரம் முதல் பிராட்வே வரை செல்லும் வழித்தடத்தில் இயக்கப்பட்ட பஸ்கள் தான் பிரபலமாக இருந்தன. அந்த காலகட்டத்தில் சென்னையின் முக்கியமான பகுதியை இந்த பஸ் கடந்து சென்றதால் இதில் பயணிக்க சுற்றுலா பயணிகளே ஆர்வம் காட்டினார்.
ஆனால் இந்த ரோட்டில் தற்போது டபுள் டக்கர் பஸ்களை இயக்கும் வாய்ப்பு மிக மிக குறைவு தான். தமிழக அரசு தற்போது சென்னையில் சுற்றுலா தளங்களை இணைக்கும் வகையில் டபுள் டக்கர் பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளது. குறிப்பாக சென்னை இசிஆர் சாலையில் இந்த டபுள் டக்கர் பஸ்கள் இயக்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதிய டபுள் டக்கர் பஸ்கள் ஏசி பஸ்களாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறும் போது:"சென்னையில் டபுள் டக்கர் பஸ்களின் சேவையை மீண்டும் துவங்குவது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். வாய்ப்புள்ள தடத்தில் இந்த பஸ்களை மீண்டும் இயக்க உள்ளோம். முதற்கட்டமாக சுற்றுலா இடங்களை இணைக்கும் வகையில் இந்த சேவையை கொண்டு வர ஆய்வு செய்து வருகிறோம்." என்று கூறினார்.
இதையடுத்து தற்போது போக்குவரத்து துறை அதிகாரிகள் எந்த ரூட்டில் பஸ்சை இயக்கினால் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாமல் இயக்க முடியும் என ஆய்வு செய்கின்றனர். டபுள் டக்கர் பஸ் உயரமாக இருக்கும் என்பதால் கேபிள் ஒயர்கள் செல்லும் இடங்களில் இந்த பஸ்களை இயக்க முடியாது. குறுகலான சாலை இந்த ரூட்டில் இருந்தால் இந்த பஸ்களை இயக்க முடியாது. இதை கணக்கிட்டு எந்த ரூட்டில் இயக்கலாம் என ஆய்வு செய்து வருகின்றனர்.
இதன்படி இந்த மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாத துவக்கத்தில் இந்த ரூட் முடிவு செய்யப்படும். ரூட் முடிவு செய்யப்பட்டவுடன் டபுள் டக்கர் பஸ்களை தயாரித்து செயல்பாட்டிற்கு கொண்டு வரும் பணி துவங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்குள் இந்த டபுள் டக்கர் பஸ்கள் சென்னையில் வளம் வர வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டபுள் டக்கர் பஸ்கள் சென்னைக்கு வந்தால் அது நிச்சயம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக இருக்கும். சென்னை மக்களும் இந்த ரக பஸ்களில் பயணிக்க நீண்ட நாட்களாக ஆர்வமாக இருந்து வருகின்றனர். பலர் இந்த பஸ்களை மறந்தே போய்விட்ட சூழ்நிலையில் தற்போது தமிழக அரசு இந்த டபுள் டக்கரை பஸ்சை மீண்டும் கொண்டு வருவது பலருக்கு பழைய இனிமையான காலங்களை எல்லாம் நினைவுபடுத்தும்.


Click it and Unblock the Notifications








