வெளிநாடுகளே வியந்து பார்க்கப்போகுது! ஊட்டி, கொடைக்கானலுக்கு இப்படி ஒரு ரயில் வருதா?
வெளிநாடுகளில் உள்ளது போல ஊட்டி, கொடைக்கானல் பகுதியில் ஃப்யூனிகுலர் ரயில்களை கட்டமைக்க முடியுமா என்ற ஆய்வை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அது போக மாமல்லபுரம் பகுதியில் ரோப் கார் வசதியையும் கொண்டு வருவதற்கான திட்டத்தையும் வைத்துள்ளது. ஃப்யூனிகுலர் ரயில் என்றால் என்ன? சாதாரண ரயிலுக்கும் இந்த ரயிலுக்கும் என்ன வித்தியாசம்? இந்த ரயில் எப்படி இயங்கும்? ஏன் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதி மற்றும் மலை சார்ந்த பகுதிகளில் மட்டும் இது திட்டமிடப்படுகிறது? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் சுற்றுலா என்பது மிக முக்கியமான வருவாய் ஈட்டும் வழிகளில் ஒன்றாக இருக்கிறது. தமிழகத்ததை பொருத்தவரை மலை பிரதேசங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் முக்கிய சுற்றுலா தளங்களாக உள்ளன. இந்நிலையில் இந்த பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் ஈர்ப்பை பெற ஃப்யூனிகுலர் ரயில்களை கட்டமைக்க முடியுமா என்ற ஆய்வை தற்போது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

ஊட்டியில் தற்போது ஏற்கனவே மலை ரயில் இயங்கி வருகிறது. இந்த புதிய ஃப்யூனிகுலர் ரயில் என்றால் என்ன என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. இது முற்றிலும் புதிய தொழிநுட்பம் எல்லாம் கிடையாது வெளிநாடுகளில் ஏற்கனவே இந்த ரயில்கள் எல்லாம் தற்போது பயன்பாட்டில் இருக்கிறது. பூமியின் புவியீர்ப்பை பயன்படுத்தி மாசு இல்லாமல் அதே நேரத்தில் அதிக சுமைகளை தாங்கி செல்லும் வகையில் உருவாக்கப்படும் ரயில் ஆகும்.
இதை எளிதாக புரியும்படி விளக்க வேண்டும் என்றால் தற்போது பழனியில் மலை ஏறுவதற்காக வின்ச் மற்றும் ரோப் கார் ஆகிய வசதிகள் இருக்கிறது. இந்த இரண்டையும் பயன்படுத்தியே இந்த ஃபியூனிகுலர் ரயில்கள் உருவாக்கப்படுகிறது. ஒரு தராசில் ஒரு இடத்தில் அதிக எடை வைத்து மற்றொரு இடத்தில் எடை குறைவாக இருந்தால் அதிகமாக எடை இருக்கும் பகுதி கீழேயும், குறைவாக எடை இருக்கும் பகுதி மேலேயும் இருக்கும்.

அதே நேரம் குறைவாக எடை இருக்கும் பகுதியில் அதிக எடை இருக்கும் பகுதியை விட அதிக எடையை வைத்தால் தானாக அந்த பகுதி கீழே சென்று, கீழே இருக்கும் பகுதி மேல வரும். இந்த தொழிற்நுட்பம் தான் ஃப்யூனிகுலர் ரயிலில் பயன்படுத்தப்படும். பெரிய கேபிள் ஒன்றில் இரண்டு பக்கத்திலும் ரயில் பெட்டிகள் கட்டப்படும். அதில் ஒரு பெட்டி மேலேயும், ஒரு பெட்டி கீழேயும். இருக்கும்.
மேலே இருக்கும் பெட்டியில் எடையை ஏற்றும் போது தானாக பாராம் தாங்காமல் மேல இருக்கும் பெட்டிகீழ் நோக்கி வரும். அந்த இழுவையால் கீழே இருக்கும் பெட்டி மேல் நோக்கி நகர துவங்கும். இந்த தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி மலை மீது ஏறி இறங்கும் வகையில் ஃப்யூனிகுலர் ரயில்கள் உருவாக்கப்படும். அதே நேரம் இது முழுமையாக எடை தராசு போல இயங்காது. இதில் பாதுகாப்பிற்காக மின் மோட்டார் இணைக்கப்பட்டிருக்கும்.

எல்லா நேரத்திலும் எடையை வைத்தே இதை மேலே கீழே ஏற்றி இறக்க முடியாது. அதனால் மின் மோட்டார் மூலம் குறையும் எடை அளவை அட்ஜெஸ்ட் செய்ய பவர் வழங்கப்படும். சாதாரணமான ரயில்களில் வீல்களில் தான் டிரைவ் சிஸ்டம் பொருத்தப்படும். ஆனால் இந்த ஃப்யூனிகுலர் ரயில்களில் வீல்கள் சுலபமாக நகர்வதற்காக மட்டுமே பொருத்தப்படும். இதில் எந்த விதமான கண்ட்ரோலர்களும் இருக்காது.
பொதுவாக இது போன்ற ஃப்யூனிகுலர் ரயில்கள் சிறிய மலைகுன்றுகள், நேரடியாக ஸ்லோப் அமைக்க வாய்ப்புள்ள பகுதிகளில் தான் அமைக்கப்படும். ஆனால் வெகுசில பகுதிகளில் மிக அதிகமான உயரத்தில் கூட இந்த ஃப்யூனிகுலர் ரயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஊட்டி மற்றும் கொடைக்கானல் மலைகளை பொருத்தவரை கடல் மட்டத்திலிருந்து சுமார் 2000 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. அப்படி பார்த்தால் இது மிக அதிகமான உயரம் தான். இதில் நேரடியாக ஸ்லோப் போன்ற அமைப்பை ஏற்படுத்த முடியாது.
ஆனால் ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3000 மீட்டர் உயரமான மலைகளில் கூட இந்த ஃப்யூனிகுலர் ரயில்களை கட்டமைத்துள்ளனர். இதற்கு ஆங்காங்கே மலைகளை குடைந்து ஸ்லோப்பான அமைப்பை உருவாக்கி குடைந்த குகைக்குள் ரயில் பயணிக்கும் வகையில் கட்டமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த ஊட்டி, கொடைக்கானல் பகுதியில் இப்படியான ரயிலை கீழே இருந்து மலைக்கு மேலே செல்லும் வகையில் உருவாக்க வேண்டும் என்றால் மலையை குடைந்து குகை அமைக்க வேண்டும்.
தற்போது இதை கொண்டுவருவதற்கான சாத்தியம் இருக்கிறதா என்ற ஆய்வு மட்டுமே நடத்தப்படவுள்ளது. இது சாத்தியமாகும் பட்சத்தில் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டால் அடுத்த சில ஆண்டுகளில் இது கட்டமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும். இந்த ஃப்யூனிகுலர் ரயில்கள் அடுத்தடுத்து செல்லும் ரயில்ப பெட்டிகள் போல இல்லாமல் ஒரே பெட்டியாக மட்டுமே வடிவமைக்க முடியும். ஊட்டி கொடைக்கானல் பகுதியில் ரம்மியமான காட்சிகளை ரசித்து செல்லும் வகையில் இது கண்ணாடியில் வடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த தொழிற்நுட்பம் அதிக ஆபத்து நிறைந்தது என்பதால் இதில் பல்வேறு விதமான ஆபத்துக்களை பாதுகாத்துக்கொள்ள பாதுகாப்பு அம்சங்கள் பல இந்த ரயிலில் பொருத்தப்படும். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் வெகுவாக குறையும். மேலும் இந்தரயிலின் இயக்கம் முழுவதும் தானியங்கி முறையில் இயங்க திட்டமிடப்படுகிறது. இதனால் மனித தவறுகளால் ஏற்படும் ஆபத்துகளும் வெகுவாக குறையும் பாதுகாப்பான பயணத்தை செய்ய முடியும்.
இந்த ஃப்யூனிகுலர் ரயில் கொண்டு வரப்பட்டால் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும். இந்த ரயில் நிச்சயம் மக்களுக்கு வித்தியாசமான, த்ரில்லான அதே நேரம் ரம்மியகாட்சிகள் நிறைந்த பயண அனுபவத்தை வழங்கும் தன்மை கொண்டதாக இருக்கும். இதை உருவாக்க ஏகப்பட்ட செலவுகள் செய்ய வேண்டியது இருக்கும். இதனால் இதில் பயணிக்க டிக்கெட் கட்டணமும் அதிகமாக இருக்கும். அதே நேரம் இதில் சரக்குகளை ஏற்றி செல்லும் வசதியும் செய்யப்படலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த ரயில் ஊட்டி, கொடைக்கானல் பகுதியில் அமைக்கப்படுவதற்கான சாத்தியம் குறைவு தான். அப்படியே அமைக்கப்பட்டாலும் மலைக்கு கீழே இருந்து மேல செல்லும் வகையில் வருவதற்கான வாய்ப்பு குறைவு என கூறப்படுகிறது. ஊட்டி, கொடைக்கானல் மலைக்கு மேலே ஏதாவது பகுதியில் சிறிய அளவில் அமைக்க வாய்ப்பு இருக்கிறது. இனி இந்த விஷயத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை நாம் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









