பூந்தமல்லி- போரூர் மெட்ரோ சோதனை ஓட்டத்துல என்னலாம் செக் பண்ணுவாங்க தெரியுமா?
சென்னையில் பூந்தமல்லி போரூர் இடையான மெட்ரோ ரயில் தடத்தில் இன்று முதல் சுமார் 9.1 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடக்கிறது. சென்னையில் ஆள் இல்லாத மெட்ரோ ரயில் பெட்டிகளை கொண்டு இந்த வழி தடத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதற்கான சோதனை ஓட்டம் நடக்கவுள்ள நிலையில் இந்த சோதனை ஓட்டம் எப்படி நடத்தப்படும். இதில் என்னென்ன விஷயங்கள் எல்லாம் சோதனை செய்யப்படும் என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சென்னையில் தற்போது 2 வழி தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயங்கி வருகிறது. இந்நிலையில் பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை மெட்ரோ ரயில் தடம் தயார் செய்யப்பட்டது. 2ம் கட்ட மெட்ரோ கட்டுமான பணிகளின் கீழ் இது கட்டமைக்கப்பட்டது. இதற்காக ரூ 63,246 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பாதையில் ரயில் கொண்டு வரும் போது அது டிரைவர் இல்லாமல் முற்றிலும் தானியங்கியாக இயங்கும் மெட்ரோ ரயிலாக உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழி தடத்தில் சோதனை ஒட்டம் கடந்த மார்ச் மாதம் துவங்கியது. முதற்கட்ட சோதனை ஓட்டம் பூந்தமல்லியில் இருந்து முல்லை தோட்டம் வரை சுமார் 3 கி.மீ நீளத்திற்கு சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது ரயிலுக்கு மேலே செல்லும் வயரில் மட்டும் சிறிய பிரச்சனை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதுவும் சரி செய்யப்பட்டது. பின்னர் இந்த சோதனை ஒட்டம் எதிர்பார்த்தபடி சிறப்பாக இருந்தது.
இந்நிலையில் இன்று முதல் பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை சோதனை ஓட்டம் நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. இது சுமார் 9.1 கி.மீ தூரத்திற்கான சோதனை ஒட்டம் ஆகும். இது ஒரு பக்க ரயில் தண்டவாளத்திற்கான சோதனை மட்டுமே வரும் ஜூன் மாதம் தான் 2ம் ரயில் தண்டவாளம் சோதனைக்கு தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சோதனை ஓட்டத்தில் முதலில் மெட்ரோ ரயிலை 15 கி.மீ வேகத்தில் இயக்கி சோதனை செய்வார்கள். அடுத்து படிப்படியாக வேகம் ஏற்பட்ட்டு 35-40 கி.மீ வேகத்தில் சோதனை செய்யப்படும். இறுதியாக அதிகபட்ச வேகமான 80 கி.மீ வேகத்தில் இந்த சோதனை நடத்தப்படும். இதற்காக 2 மெட்ரோ ரயில்கள் பயன்படுத்தப்படுகிறது. விரைவில் இன்னொரு 2ரயில்கள் இந்த சோதனையில் ஈடுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சோதனையின் போது ரயிலின் ஆக்ஸிலரேஷன், பிரேக்கிங், ரயில் பெட்டியில் உள்ளே இருக்கும் ஏசி, ரயில் தண்டவாளத்தின் வடிவமைப்பு மற்றும் பொருத்தப்பட்ட விதம் உள்ளிட்ட அம்சங்கள் சோதனை செய்யப்படும். ஒவ்வொருன்றும் எப்படி வேலை செய்கிறது என ரிப்போர்ட் தயார் செய்யப்படும் ரயில் இயக்கத்தின் போது சரியான இயக்கம் எது என இந்த ரிப்போர்ட்டை அடிப்படையாக கொண்டு தான் தயார் செய்யப்படும்.

இது போக ரயில் செல்லும் போது அதிர்வுகள், எப்படி இருக்கிறது. சத்தம் ஏதும் வருகிறதா? முக்கியமாக வேகமாக ரயில் இயங்கும் போது ரயிலுக்குள் எப்படி அதிர்வுகள் வருகிறது? திருப்பங்களில் எப்படி ரயில் செயல்படுகிறது உள்ளிட்ட விஷயங்கள் ஆய்வு செய்யப்படும். இது எல்லாம் ரயில் பயன்பாட்டிற்கு வந்த பிறகு விபத்துக்களை தவிர்க்கவும், பயணிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை வழங்கவும் துணையாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னை மெட்ரோ நிர்வாகம் இந்த பணிகளை மிக துரிதமாக செய்து வருகிறது. அதே நேரம் இந்த சோதனை ஓட்டம் மிக முக்கியமான கட்டம் என்பதால் இதில் எந்த விதமான பிழைகளும் ஏற்படாமல் மிக சரியாகவும், துல்லியமாகவும் சோதனை ஓட்டத்தை நடத்தி பிரச்சனைகள் இல்லை என்பதை தெரிந்து கொண்ட பிறகு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.


Click it and Unblock the Notifications









