ஒரு பைசா கூட கொடுக்க வேண்டாம்! மெட்ரோ இரயில்களில் டிக்கெட் கிடையாது - அதிரடியாக வந்த அறிவிப்பு!!
மெட்ரோ இரயில் (Metro Rail), மாடர்ன் இந்தியாவின் மாநகரங்களில் பிரதான போக்குவரத்து முறையாக மாறிவரும் ஒன்று. மாநகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது. டிக்கெட் விலை அதிகமாக இருப்பது மெட்ரோ இரயில் சேவையின் ஒரு குறையாக பார்க்கப்பட்டாலும், மெட்ரோ இரயில்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், பிரபல திரைப்பட இசையமைப்பாளரின் இசை கச்சேரியை முன்னிட்டு சென்னை மெட்ரோ இரயில்களில் குறிப்பிட்ட நாளில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நெரிசல் மிகுந்த மாநகரங்களில் விரைவான போக்குவரத்துக்கு மெட்ரோ இரயில்கள் வழிவகுக்கின்றன. இதன் காரணமாகவே, நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் மெட்ரோ இரயில் சேவைகள் துவங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நம் தமிழ்நாட்டை பொறுத்தவரையில், தலைநகர் சென்னையில் மட்டுமே மெட்ரோ இரயில் சேவை தற்போதைக்கு உள்ளது.

கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாநகரங்களில் மெட்ரோ இரயில் திட்டத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை மெட்ரோ இரயில் சேவையை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சென்னை மெட்ரோ இரயில் சேவையை குறிப்பிட்ட நாளில் இலவசமாக பயன்படுத்தலாம் என சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆனால், இதற்கு உங்களிடம் சென்னையில் நடைபெறவுள்ள பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசை கச்சேரிக்கான நுழைவு டிக்கெட் இருக்க வேண்டும் என சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளது. பயணிகள் அந்த டிக்கெட்டை வைத்து இரண்டு முறை சென்றுவர முடியும் எனவும் மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

'ஹிப்ஹாப் தமிழா ரிடர்ன் ஆஃப் தி டிராகன் மச்சி!' என்கிற பெயரில் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதியின் இசை கச்சேரி சென்னையில் வருகிற அக்.19ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஹிப்ஹாப் ஆதி தனது சொந்த குரலில் தனது இசை பாடல்களை பாடி மக்களை மகிழ்விக்க உள்ளார். இந்த இசை கச்சேரிக்கு ஜி.எஸ்.எஸ் டார்க் எண்டர்டெயின்மெண்ட் எல்.எல்.பி என்கிற நிறுவனம் ஸ்பான்சர் செய்கிறது.
அதாவது, இந்த இசைக் கச்சேரி நிகழ்ச்சியை நடத்தி முடிக்கும் பொறுப்பு இந்த ஜி.எஸ்.எஸ் டார்க் எண்டர்டெயின்மெண்ட் எல்.எல்.பி நிறுவனத்திற்கு உள்ளது. இந்த நிறுவனம் தான் இசைக் கச்சேரியை மேலும் விளம்பரப்படுத்தும் வகையிலும், கச்சேரிக்கு வரும் மக்களின் போக்குவரத்தை இன்னும் எளிமையாக்கும் முயற்சியாகவும் பிரத்யேக க்யூ.ஆர் பயணச்சீட்டை பேடிஎம் இன்சைடர் வாயிலாக பெறப்படும் டிக்கெட் உடன் சேர்த்து வழங்கி வருகிறது.
அந்த க்யூ.ஆர் கோட்-ஐ மெட்ரோ இரயில் நிலையங்களில் ஸ்கேன் செய்தால் இலவசமாக பயணிக்கலாம். சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகத்தின் எக்ஸ் பதிவின்படி, இந்த க்யூ.ஆர் கோட்-ஐ இருமுறை பயன்படுத்த முடியும். அதாவது, கச்சேரியை முடித்துக் கொண்டு வீடு திரும்பும்போதும் அதனை பயன்படுத்தலாம். அதேபோல், ஒரு க்யூ.ஆர் கோட்-ஐ பயன்படுத்தி இருவர் மெட்ரோ இரயிலில் பயணிக்கலாமாம். அல்லது ஒருவர் இருமுறை பயன்படுத்தலாம்.
சென்னையின் நந்தனம் மெட்ரோ இரயில் நிலையத்திற்கு மிக அருகாமையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசைக் கச்சேரி நடைபெறவுள்ளது. இதில் மற்றொரு அசத்தலான அம்சம் என்னவென்றால், சென்னை மெட்ரோ இரயில் சேவையில் உள்ள எந்தவொரு இரயில் நிலையத்தில் இருந்தும் நந்தனம் மெட்ரோ இரயில் நிலையத்திற்கு இலவசமாக பயணிக்கலாம். அதேபோல், நிகழ்ச்சி முடிந்த பின் அவ்வாறே இலவசமாக செல்லலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறான இசை கச்சேரிகள் நள்ளிரவில் தான் நிறைவடையும். அத்தகைய நேரத்தில் மக்கள் திரும்பி செல்வதற்கு மெட்ரோ இரயில் சேவையே ஏற்றதாக இருக்கும். இது, ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசைக் கச்சேரிக்கு விளம்பரமாக அமைவது மட்டுமின்றி, சென்னை மெட்ரோ இரயில் சேவைக்கும் விளம்பரமாக அமைகிறது. ஏனெனில், இதன் மூலமாக முதல்முறையாக மெட்ரோ இரயில் சேவையை பயன்படுத்துபவர்கள் அதன்பின் அவ்வப்போது பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.


Click it and Unblock the Notifications








