நடுராத்திரி கழுத்து நிறைய நகை போட்டு பெண்கள் சென்னை மெட்ரோவில் போலாம் போல! வெளியான சூப்பர் ரிப்போர்ட்!
சென்னை மெட்ரோ சேவை தான் இந்தியாவிலேயே பெண்களுக்கு அதிக பாதுகாப்பு நிறைந்த மெட்ரோ சேவையாக பெயர் பெற்று உள்ளது. மற்ற மெட்ரோ ரயில் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இருப்பதிலேயே சென்னை மெட்ரோவில் தான் குறைவான எண்ணிக்கையில் குற்றங்கள் நடப்பதாக தெரியவந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தேசிய குற்ற ஆவண பியூரோவின் 2022-ம் ஆண்டிற்கான அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் ஒரு முக்கியமான தகவல் ஒன்று இடம் பெற்றுள்ளது. அதன்படி இந்தியாவில் இயங்கி வரும் ஆறு மெட்ரோ சேவைகளில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களின் எண்ணிக்கையை கணக்கிடப்பட்டு அதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. அதில் சென்னை மெட்ரோவில் தான் இருப்பதிலேயே குறைவான எண்ணிக்கையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு மட்டும் சென்னை மெட்ரோவில் மொத்தம் 736 வழக்குகள் பெண்களுக்கு எதிரான குற்றம் காரணமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2021-ம் ஆண்டை காட்டிலும் குறைவான எண்ணிக்கை தான் அப்பொழுது மொத்தம் 874 குற்றங்கள் நடந்துள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றம் என்றால் பெண்களை தாக்குவது, பாலியல் ரீதியாக துன்புறுத்துவது, கடத்துவது, வரதட்சணை கேட்டு கொடுமை செய்வது, கற்பழிப்பு மற்றும் பெண்களை பின்தொடர்வது உள்ளிட்ட குற்றங்கள் இதில் உள்ளடங்கும்.
இந்த பட்டியலில் டெல்லி தான் முதலிடத்தில் இருக்கிறது. 2022 ஆம் ஆண்டு மட்டும் மொத்தம் 14,158 வழக்குகள் பதிவாகியுள்ளன. அடுத்ததாக மும்பை மற்றும் பெங்களூர் ஆகிய மெட்ரோக்களிலும் தலா 3000 வழக்குகளுக்கு மேல் பதிவாகியுள்ளது. இருப்பதிலேயே சென்னையில் தான் குறைவான எண்ணிக்கையில் வழக்குகள் பதிவாகியுள்ளன.

சென்னை மெட்ரோவில் குறைவான எண்ணிக்கையில் வழக்குகள் பதிவானதற்கு சிசிடிவி கேமரா, பிங்க் பெட்ரோல், பள்ளி, கல்லூரி மற்றும் கமர்ஷியல் இடங்களில் அதிக விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு வசதிகளை அதிகப்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. இவை எல்லாம் தான் சென்னையில் குற்றங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதாக கருதப்படுகிறது.
இருந்தாலும் சென்னை மெட்ரோவில் நடந்த குற்றங்களில் இதற்கு முன்னர் நடந்த குற்றங்களில் மொத்தம் 1878 வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளன. கடந்த 2022 ஆம் ஆண்டு மட்டும் 59 வழக்குகளில் தீர்ப்புகள் பெறப்பட்டுள்ளது. இது போக 109 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது தவறு இல்லை என தீர்ப்பு வந்துள்ளது.

இதற்கு மோசமாக ஆய்வு செய்யப்பட்ட ஆவணங்களுடன் செய்யப்பட்ட வழக்கு பதிவு தான் காரணம் என கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல் கண்ணால் கண்ட சாட்சிகள் இல்லை எனவும் போதுமான ஆவணங்கள் ஆதாரங்கள் இல்லை எனவும் இந்த வழக்குகள் குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாதகமாக தீர்ப்பு சொல்லப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சந்திப் ராய் ரத்தோர் கூறும்போது:" சென்னையில் அதிக எண்ணிக்கையிலான பெண் போலீசார்கள் பணியில் உள்ளனர். இதனால் பெண்கள் தைரியமாக முன்வந்து புகார்களை அளிக்கின்றனர். இதன் மூலம் நாங்கள் அவர்களுக்கு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர உதவுகிறோம். இது போக பெண்களுக்கு சாதகமாக பல்வேறு சிஸ்டத்தை மாற்றியுள்ளோம். பிங்க் பேட்ரோல். மொபைல் பேட்ரோல் ஆகியவற்றை மேம்படுத்தி பெண்களுக்கு உதவுகிறோம்" என கூறினார்.
போலீசார் சென்னையில் உள்ள பெண்களுக்கான பாதுகாப்பிற்காக பல்வேறு வகையில் உதவி செய்து வருகின்றன. இதற்காக நிர்பயா நிதி மூலம் ரூபாய் 165.8 கோடியை செலவு செய்துள்ளனர். இதன் மூலம் 5250 கேமராக்களை 1750 பகுதிகளில் பொருத்தியுள்ளனர். இதுபோக சைபர் தடையவியல் ஆய்வகத்தை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் மொபைல் தரவுகளை எடுக்கவும், சமூக வலைதளங்களை ஆய்வு செய்யவும் குற்றங்கள் நடக்கும் இடங்களை மேப் செய்யவும் பயன்படுத்தி வருகின்றனர்.
சென்னை போலீசார் ஒருங்கிணைக்கப்பட்ட சாஃப்ட்வேர் சிஸ்டத்தை உருவாக்கியுள்ளனர். இது ஒரு குற்றம் நடந்தால் உடனடியாக அதை தடுப்பதற்காக பல்வேறு அலர்ட்களை அனுப்பும் வகையில் இதை உருவாக்கியுள்ளனர். அதுபோக வீடியோக்கள் மூலம் செயின் பறிப்பு, கைபை பறிப்பு, மொபைல் பறிப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை கண்காணிப்பு செய்து அதற்கான அலாரத்தை செய்யவும் வாகனத்திற்கு கேமரா டேம்பரிங் போன்ற விஷயங்களை முன்கூட்டியே கண்டறிந்து அதற்கான அலார்ட் செய்யவும் இந்த சாப்ட்வேர் உதவுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் மற்ற நகரங்களை விட சென்னை பெண்களுக்கு பாதுகாப்பான மெட்ரோ சேவையை வழங்கி வருகிறது என்பது நிச்சயம் சென்னை மக்களுக்கு ஒரு நற்செய்தியாகவே உள்ளது. சென்னை எப்பொழுதும் பெண்களுக்கு ஓரளவு பாதுகாப்பான ஊராகவே இருக்கிறது. மற்ற நகரங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடக்கும் சூழ்நிலையில் சென்னையில் இது குறைவு தான்.


Click it and Unblock the Notifications









