வாகன திருடர்கள் வேற ஊர பாத்து ஓடி போங்க! இனி சென்னையில் உங்களால கை வரிசையை காட்டவே முடியாது!
வாகன திருட்டு காவல்துறைக்கு மிகப் பெரிய சவாலான ஒன்றாக மாறி உள்ளது. இன்றைய நவீன காலகட்டத்தில் ஜிபிஎஸ், டிராக்கிங் கருவி என பல அம்சங்கள் வாகன திருட்டைத் தவிர்க்கும் பொருட்டு பயன்படுத்தப்படுகின்ற போதிலும் வாகன கொள்ளையர்கள் அசால்டாக தங்களின் வரிசையைக் காட்டிவிட்டு போய்விடுகின்றனர். நொடிப்பொழுதில் விட்டுச்செல்லும் வாகனங்களை தடையமே இல்லாமல் லாவகமாக திருடிச் செல்லும் அளவிற்கு திருடர்கள் கை தேர்ந்தவர்களாக இருக்கின்றனர். இவ்வாறு களவுப்போகும் வாகனங்களில் ஒரு சில மட்டுமே மீட்டெடுக்கப்படுகின்றன. பல வாகனங்கள் கண்டுபிடிக்கப்படாமலே போய்விடுகின்றன.
அவற்றைக் கண்டுபிடிப்பதில் காவல்துறை பெரும் சவாலைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே களவுபோகும் வாகனங்களை மீட்டெடுக்கும் பொருட்டு சென்னை காவல்துறை நகர முக்கிய பகுதிகளில் கண்கானிப்பு கேமிராக்களைப் பொருத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வாகன திருட்டு குற்றங்களைத் தவிர்க்கும் பொருட்டும், திருடுபோகும் வாகனங்களைக் கண்டுபிடிக்கவும் இந்த கேமிராக்கள் மிக சிறப்பாக உதவும் என சென்னை காவல்துறை நம்பிக்கைத் தெரிவித்து இருக்கின்றது.

சென்னை மாநகரம் முழுவதிலும் உள்ள முக்கிய சாலை சந்திப்புகளிலேயே இந்த கேமிராக்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. சுமார் 500 கேமிராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள கேமிராக்களுடனேயே இந்த கேமிராக்களும் இன்ஸ்டால் செய்யப்பட்டு உள்ளன. இது ஓர் நவீன திறன் கொண்ட கேமிரா ஆகும்.
இந்த கேமிராக்களின் கண்கள் திருடப்பட்ட வாகனங்களைக் கண்டுபிடிக்கும் நோக்கிலேயே தயார் செய்யப்பட்டவை ஆகும். எனவே இதன் பார்வையில் திருட்டு வாகனங்கள் சிக்கும் எனில் அதுகுறித்த எச்சரிக்கையை காவல்துறைக்கு உடனடியாக அக்கேமிரா வழங்கும். இதன் வாயிலாக காவலர்களால் அவ்வாகனத்தை உடனடியாக சிறைப்பிடிக்க முடியும்.

குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு சென்னை போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மாதிரியான சூழலிலேயே வாகன திருட்டையும் முற்றிலும் தடுக்கும் பொருட்டு இந்த சூப்பரான முயற்சியைச் சென்னை காவல்துறை கையில் எடுத்துள்ளது. ஏற்கனவே, போலீஸார் இரவு நேர சோதனையின்போது நடமாடும் கேமிராக்களைக் கொண்டு திருட்டு வாகனங்களைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், இதில் பெரிய அளவில் பலன் கிடைக்கவில்லை என கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே அடுத்தக்கட்ட முயற்சியாக சென்னை காவல்துறை சென்னையின் முக்கிய சாலைச் சந்திப்புகளில் நவீன கேமிராக்களை இன்ஸ்டால் செய்திருக்கின்றது. இதன் வாயிலாக திருட்டு வாகனங்களின் நடமாட்டம் உடனடியாகக் கண்கானிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சென்னை பெருநகர பாதுகாப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக சுமார் 1,750 இடங்களில் வீடியோ பகுப்பாய்வு கொண்ட 5,250 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றுடன் இணைந்தே முக்கிய சாலை சந்திப்புகளில் பொருத்தப்பட்டு உள்ள 500 நவீன கேமராக்களும் அதன் பணியை மேற்கொள்ள இருக்கின்றன. இந்த கேமிராவின் சிஸ்டம்களில் களவுபோன வாகனங்களின் எண்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கும்.
இதன் வாயிலாகவே திருட்டு வாகனங்களின் நடமாட்டம் கண்கானிக்கப்பட உள்ளது. இது அவ்வாகனத்தின் நடமாட்டத்தை புகைப்படத்துடன் காவல்துறைக்கு எச்சரிக்கும். இதன் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் உடனடியாக அந்த வாகனத்தை மீட்கவும், அதை ஓட்டிச் செல்லும் நபரையும் கைது செய்ய முடியும்.
எனவேதான் வாகனம் திருடுபோன உடனேயே காவல்துறைக்கு அதுகுறித்து தகவலை வழங்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்து இருக்கின்றது. இவ்வாறு செய்வதன் வாயிலாக அவ்வாகனம் நகரை விட்டு வெளியேறுவதை முற்றிலுமாக தவிர்க்க முடியும். இந்த கேமிராக்கள் வாயிலாக ஏற்கனவே திருட்டு வாகனங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக காவல்துறை அதிகாரிகள் சிலர் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.
சமீபத்திய தகவல்களின்படி, புதிய கேமராக்களால் சென்னையில் தினமும் சராசரியாக ஐந்து வாகனங்கள் அடையாளம் காணப்பட்டு மீட்கப்படுவது தெரிய வந்திருக்கின்றது. எனவே, இது வாகன திருடர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. அதேவேளையில், பொதுமக்களை சென்னை போலீஸின் இந்த நடவடிக்கை நிம்மதியடையச் செய்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாதுகாப்பான இடத்தில் விட்டு சென்றாலும் வாகனங்களை திருடர்கள் திருடிக் கொண்டு போய்விடுவதாக வாகன உரிமையாளர்கள் வேதனைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலிலேயே வாகன திருட்டு அச்சத்தில் இருந்து விடுதலை அளிக்கும் நடவடிக்கையாக சென்னை காவல்துறை சூப்பரான கேமிராக்களை களமிறக்கி இருக்கின்றது. ஆனால், வாகன திருட்டு ஆசாமிகளால்தான் இனி பொழப்பை நடத்த முடியாது.


Click it and Unblock the Notifications








