இனி டிராஃபிக் சிக்னலே வேணாம்! இந்த சின்ன விஷயத்தை பண்ணாலே டிராஃபிக் ஜாம் குறையும்! சென்னை போலீசார் செம ஐடியா!
சென்னையில் பல்வேறு பகுதியில் உள்ள முக்கிய போக்குவரத்து சிக்னல்களை அகற்ற போக்குவரத்து போலீசார் முடிவு செய்துள்ளனர். சாலையில் ஏற்படும் நெருக்கடியை குறைக்க இப்படியான நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியா முழுவதும் பெருநகரங்களில் வாகன நெருக்கடி அதிகமாக இருக்கிறது. மக்கள் பலர் தினமும் குறிப்பிட்ட பகுதியை பயன்படுத்தி வருவதால் அங்கு ஏராளமான வாகனங்கள் செல்கிறது. இந்த போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படியாக அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கும் முக்கிய நகரமாக சென்னையில் இருக்கிறது. சென்னையில் அதிக போக்குவரத்து நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.

இதையடுத்து சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் சென்னையில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் ஏன் அதிகமாக போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது என ஆய்வு செய்தனர். அப்பொழுது குறிப்பிட்ட சிக்னல்களை தேர்வு செய்து அந்த சிக்னல்களில் பயணிக்கும் வாகனங்கள் பெரும்பாலும் எந்த பகுதிக்கு செல்கின்றன? நேராக செல்கிறதா? வளைந்து திரும்பி செல்கிறதா ? என ஆய்வுகளை நடத்தினர்.
இதில் பெரும்பாலும் போக்குவரத்து வாகனங்கள் சிக்னல்களில் நேராக தான் செல்கிறது. வெகு சில வாகனங்களே சிக்னல்களில் திருப்பத்தை எடுத்து திரும்பி செல்கின்றனர். இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் சிக்னல்களை நீக்கி விடலாம் எனவும் சிக்னல் இருப்பதாலேயே அதிக பிரச்சனை ஏற்படுவதாகவும் கருதினர்.

மேலும் யூ டர்ன் எடுப்பதற்காக வழியை செய்து கொடுத்தாலே இந்த பிரச்சினையை சமாளிக்க முடியும் என கண்டறிந்தனர். சென்னை முழுவதும் ஆய்வு செய்யப்பட்டதில் 65 சிக்னல்கள் தேவை இல்லாமல் செயல்பட்டு வருவது தெரியவந்தது. இந்த சிக்னல்கள் எல்லாம் அதிகபட்சமாக 15 நிமிடங்கள் வரை மக்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
தற்போது சோதனை முயற்சியாக சென்னையில் ஸ்மார்ட் டிராஃபிக் சிஸ்டம் முறையில் சில முக்கிய சிக்னல்கள் முற்றிலுமாக அனைத்து வைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியில் வாகனங்கள் ஃப்ரீயாக சென்று வர தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக சென்னை ஸ்பென்சர் பிளாசா, நந்தனம் ஆகிய சிக்னல்கள் பகுதியாக அனைத்து வைக்கப்பட்டுள்ளது. தேனாம்பேட்டை சிக்னல் முற்றிலுமாக அனைத்து வைக்கப்பட்டுள்ளது. அண்ணா சாலையில் செல்லும் வாகனங்கள் சிக்னலில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் பயணிக்கலாம்.

நந்தனம் பகுதியிலிருந்து தேனாம்பேட்டை சிக்னலுக்கு வரும் வாகனங்கள் தி-நகர் செல்ல வேண்டும் என்றால் அவர்கள் தாராளமாக சிக்னல் இல்லாமல் இடது பக்கம் திரும்பி பயணிக்க முடியும். அதே நேரம் அண்ணா அறிவாலயத்தில் இருந்து தேனாம்பேட்டை சிக்னலுக்கு வரும் வாகனங்கள் எல்லாம் எந்த பிரச்சினையும் இல்லாமல் எல்டாம்ஸ் திரும்பி பயணிக்கலாம் .
ஒருவேளை அண்ணா அறிவாலத்தில் இருந்து வரும் வாகனம் தி-நகர் செல்ல வேண்டுமென்றால் அவர்கள் தேனாம்பேட்டை சிக்னலை கடந்து சில தூரம் சென்று அங்கு வழங்கப்பட்டிருக்கும் யூ-டர்ன் பகுதியில் வாகனத்தை திருப்பி மீண்டும் அண்ணா சாலையிலேயே ரிட்டன் வந்து தி-நகருக்கு திரும்ப முடியும்.
அதே போல தான் நந்தனம் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் எல்டாம்ஸ் ரோட்டிற்கு திரும்ப வேண்டும் என்றால் அவர்கள் அண்ணா அறிவாலயம் வரை வந்து அங்கு வழங்கப்பட்டிருக்கும் யூ-டர்னில் காரை திருப்பி மீண்டும் எல்டாம்ஸ் ரோட்டிற்கு செல்ல முடியும். இது கேட்பதற்கு குழப்பமாக இருந்தாலும் பயணித்தால் எளிதாக தான் தெரியும்.
இதை செய்வதால் தேனாம்பேட்டை பகுதியில் சிக்னல் அமைக்க வேண்டிய தேவையே இல்லை. வாகனங்கள் தானாக எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நகர முடியும். சிக்னலில் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய தேவை இருக்காது. இந்த முயற்சியை ஏற்கனவே கோவை மாநகர போக்குவரத்து போலீசார் செயல்படுத்தி பார்த்திருந்தனர். இதில் நல்ல ரிசல்ட் கிடைத்ததால் இதை தற்போது சென்னையில் சோதனை முயற்சியாக செய்து வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி குறையும்பட்சத்தில் இது சென்னையில் அடுத்தடுத்த பகுதியில் அமல்படுத்தப்படும் என தெரிகிறது. தற்போது சென்னையில் 65 பகுதியில் போக்குவரத்து சிக்னல்களை எடுக்கும் முடிவில் போலீசார் இருக்கின்றனர். இந்த நடைமுறையால் யூ-டர்ன் எடுத்து திரும்பும் வாகன ஓட்டிகளுக்கு சற்று சிரமமாக இருக்கலாம். ஆனால் சாலையில் செல்லும் பெரும்பாலான வாகன ஓட்டிகள் சிக்னலை நேராக தான் அதிகம் கிடக்கிறார்கள் அதனால் பெரும்பாலான வாகன ஓட்டிகளுக்கு இது வசதியாக இருக்கும்.
இந்த போக்குவரத்து சிக்னல்களை நீக்கும் திட்ட சோதனையை சென்னையில் வெற்றிகரமாக முடித்து விட்டால், இந்த திட்டம் சென்னை ஓஎம்ஆர், ஈசிஆர் உள்ளிட்ட பல்வேறு சாலைகளுக்கு அமல்படுத்தப்படும் என தெரிகிறது. இந்த மாற்றத்திற்கு போக்குவரத்து துறை மட்டுமல்லாமல் நெடுஞ்சாலை துறையும் ஒத்துழைப்பு செய்தால் இதை செய்து முடிக்க முடியும் என சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் தெரிவித்து வருகின்றனர்.
இதுவரை அனைத்து வாகனங்களும் போக்குவரத்து சிக்னலில் 15 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருந்த நிலையில் தற்போது நேராக செல்லும் வாகனங்கள் எந்தவித காத்திருப்பு நேரமும் இல்லாமல் சிக்னலை கடந்து விட முடியும். அதே நேரம் திரும்பும் வாகனங்கள் அதிகபட்சமாக 45 வினாடிகள் காத்திருந்தால் போதும் அவர்கள் வாகனத்தை திருப்பிக் கொண்டு தொடர்ந்து பயணிக்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னை போன்ற பெருநகரங்களில் வாகன போக்குவரத்து நெருக்கடி என்பது மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதற்கு போலீசார் இப்படி ஒரு தீர்வை கண்டுள்ளது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியதே. இதன் மூலம் பல மணி நேரம் மனித நேரங்கள் மிச்சப்படும். மக்களும் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருக்க முடியும்.


Click it and Unblock the Notifications









