பிரஸ், போலீஸ்ன்னு ஸ்டிக்கரை காட்டி எஸ்கேப் ஆக முடியாது! இந்த ஸ்டிக்கர் ஒட்டுனாலே ஃபைன் போட்டு தீட்டபோறாங்க!
இன்று முதல் சென்னை பெருநகர பகுதியில் பிரஸ், போலீஸ் என விதவிதமான ஸ்டிக்கர்களை ஒட்டிக்கொண்டு வலம் வரும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர போலீசார் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். இப்படியாக ஸ்டிக்கர் ஒட்டி வரும் வாகனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தமிழக முழுவதும் உள்ள வாகன ஓட்டிகள் பலர் தங்கள் வாகனங்களில் பிரஸ், போலீஸ் என பல்வேறு விதமான ஸ்டிக்கர்களை ஒட்டிக் கொள்கிறார்கள். இதன் மூலம் சாலையில் வாகன தணிக்கையில் அதிகாரிகள் ஈடுபடும்போது தனக்கு என தனி மதிப்பு கிடைக்கும் என்ற நோக்கத்தில் இப்படியாக ஸ்டிக்கர்களை ஒட்டி வலம் வருகிறார்கள். இதில் பலர் போலியாக தான் ஸ்டிக்கர்களை ஒட்டி இருக்கிறார்கள் என தெரிகிறது.

இந்நிலையில் ஏற்கனவே இது குறித்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது இப்படியான போலி ஸ்டிக்கர்களை ஒட்டி செல்லும் வாகன ஓட்டிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என உத்தரவிட்டுள்ளது. இதன்படி இப்படியாக ஸ்டிக்கர்களை ஒட்டி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை பெருநகர போலீசார் அறிவித்துள்ள அறிவிப்பின்படி: "சென்னை மாநகரப் பகுதியில் தனியார் வாகனங்களில் பிரஸ், தலைமைச் செயலகம், டிஎன்இஜிபி, ஐசிசி, போலீஸ், ராணுவம் உள்ளிட்ட பல்வேறு விதமான துறை மற்றும் நிறுவனங்களின் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இப்படியான ஸ்டிக்கர்கள் வாகன பதிவெண் தகட்டிலும் வாகனத்தின் வேறு பகுதிகளும் காணப்படுகிறது.

இப்படியாக ஸ்டிக்கர் ஒட்டுவது சட்டப்படி தவறான விஷயமாக பார்க்கப்படுகிறது. இப்படியான ஸ்டிக்கர்களை பயன்படுத்தி சில சமூக விரோதிகள் போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பி விடுகின்றனர். சிலர் அரசியல் கட்சியின் சின்னங்கள், மருத்துவர், வக்கீல் போன்ற சின்னங்களை தங்கள் வாகனங்களில் ஸ்டிக்கர்களாக ஒட்டி வருகிறார்கள்.
இது மோட்டார் வாகன சட்டம் பிரிவு 198ன் கீழ் சட்ட விரோத நடவடிக்கையாகும். இதனால் இன்று முதல் சென்னை மாநகரப் பகுதியில் இப்படியான அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை பயன்படுத்தினால் மோட்டார் வாகன விதி 177 இன் கீழ் அந்த வாகன உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் " என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபராத விபரங்களை பொறுத்தவரை முதல் முறை இப்படியான ஸ்டிக்கருடன் போலீசில் சிக்கினால் அவருக்கு ரூபாய் 500 அபராதமும், இரண்டாவது முறையும் அதை சரி செய்யாமல் பிடிப்பட்டால் ரூபாய் 1500 அபராதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் இன்று முதல் சென்னை பகுதியில் அமலுக்கு வருகிறது.
அதே நேரம் உண்மையாக ஊடகம், நீதித்துறை, மருத்துவர், வழக்கறிஞர், போலீசார் ஆகியோருக்கு தங்கள் வாகனங்களில் நிபந்தனையுடன் இப்படியான ஸ்டிக்கர்களை ஒட்டிக்கொள்ள அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டிக்கர்களை உரிய நிபந்தனையுடன் மட்டுமே ஒட்ட வேண்டும் எனவும் எச்சரித்துள்ளது. நிபந்தனைகளை மீறி ஸ்டிக்கர் ஒட்டினாலும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியான ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனம் வாகன தணிக்கையின் போது பிடிபட்டால் குறிப்பிட்ட நபர் குறிப்பிட்ட துறையில் பணியாற்றுகிறார் என்பதை உறுதி செய்யவில்லை என்றாலும், அதே நேரம் நிபந்தனைகளை மீறி வாகனத்தில் ஸ்டிக்கரை ஒட்டி இருந்தாலும் இது சட்ட விதிமுறை மீறலாக கருதப்பட்டு அவருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனங்களில் பிரஸ்,போலீஸ் போன்ற ஸ்டிக்கர்களை பலர் பயன்படுத்தி வாகன தணிக்கையிலிருந்து தப்பி வருகிறார்கள் இதில் பல சமூக விரோதிகளும் போலீசாரின் பிடியிலிருந்து தப்பி வருகின்றனர். இதை தடுக்கவே இப்படியான நடவடிக்கையை போலீசார் எடுத்துள்ளனர். இதனால் நீங்களும் உங்கள் வாகனத்தில் முறையில்லாமல் இப்படியான ஸ்டிக்கர்களை ஒட்டி இருந்தால் நீக்கி விடுங்கள்.


Click it and Unblock the Notifications









