‘செஸ் போர்டு’-ஆக காட்சி தரும் சென்னையின் நேப்பியர் பாலம்!! வாகன ஓட்டிகளுக்கு பிரச்சனை வருமா?
சென்னைக்கு அருகே உள்ள மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற ஜூலை 28ஆம் தேதி துவங்கவுள்ளதை முன்னிட்டு அண்ணா சதுக்கத்திற்கு அருகே உள்ள நேப்பியர் பாலம் சதுரங்க விளையாட்டு பலகையின் ஸ்டைலுக்கு மாற்றப்பட்டுள்ளது.

44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28ஆம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 10ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளன. சுமார் 188 நாடுகளை சேர்ந்த 2,500 செஸ் வீரர்கள் இந்த போட்டிகளில் கலந்துக்கொண்டு விளையாட உள்ளனர். ஆகையால் இந்த செஸ் போட்டி தொடரினை தமிழக அரசு முக்கியமான விஷயமாக கருத்தில் கொண்டு ஒருபக்கம் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு சார்பில் 18 குழுக்கள் இந்த விழா நிகழ்ச்சிக்களுக்கான ஏற்பாடுகளை கவனித்து வருகின்றன. இதன் வெளிப்பாடாக, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் இந்த செஸ் போட்டிக்கான விளம்பர வீடியோ தமிழக அரசின் சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்டதை நீங்களும் இணையத்தில் பார்த்திருப்பீர்கள். அந்த விளம்பர வீடியோவில், சதுரங்க பலகையை போன்று மாற்றப்பட்ட நேப்பியர் பாலத்தையும் பார்க்க முடியும்.

இந்த பாலத்தின் மீது முதல்வர் ஸ்டாலின் நடந்துவருவது போல் காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தன. ஆனால் வீடியோவில் நீங்கள் கவனீத்தீர்கள் என்றால், சாலை மட்டுமே செஸ் போர்டு ஸ்டைலில் இருப்பது போன்றும், பாலத்தின் பக்கவாட்டு வளைவுகள் வெள்ளை நிறத்தில் இருப்பது போன்றும் காட்டப்பட்டு இருந்தன. ஆனால் தற்போது, நேப்பியர் பாலம் முழுவதும் செஸ் போர்டு போன்று காட்சி தருகிறது.

இந்த காட்சி பலரின் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் காரணமாக பாலத்தின் வழியாக செல்லும் மக்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுத்து கொள்ள மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக இரவு நேரங்களில் வண்ண விளக்குகளுடன் நேப்பியர் பாலம் மிகவும் ரம்மியமாக காட்சி தருவதால், செல்ஃபி எடுத்து கொள்வதற்காகவே நாளுக்கு நாள் கூட்டம் கூடிக்கொண்டே வருகிறது.

பொதுவாக மெரினா கடற்கரை, அண்ணா & எம்ஜிஆர் சதுக்கம் உள்ளிட்டவற்றால் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சென்னை மட்டுமில்லாது மாற்று மாவட்ட மக்களின் வாகனங்களும் உலா வந்து கொண்டிருக்கும். இவ்வாறு சென்னைக்கு சுற்றுலா வருவோர் கடற்கரை மற்றும் சதுக்கங்களை சுற்றி பார்த்துவிட்டு, தற்போது நேப்பியர் பாலம் பக்கமும் வருகின்றனர்.

ஆனால் அதேநேரம், இந்த பாலத்தின் வழியாக வாகனங்களில் செல்லும் மக்களில் சிலர், தலைச்சுற்றல் போன்ற ஒரு சில அசௌகரியங்களை உணர்வதாக தெரிவித்துள்ளனர். இவ்வளவு ஏன், இவ்வாறான கட்டக்கட்டமாக பெயிண்ட் செய்யப்பட்ட சாலைகளில் பயணம் செய்வதால் நரம்பு சம்மந்தமான பிரச்சனைகள் கூட வர வாய்ப்புள்ளதாக புரளிகள் கிளம்பியுள்ளன.

இதுகுறித்து சமீபத்தில் நரம்பியல் மருத்துவர் ஒருவர் அளித்த பேட்டியில், "ஒரு சில சூழல் ஓவியங்கள், ஒளி விளக்குகளால், எபிலெப்டோஜெனிசிஸ் என்னும் கை, கால் வலிப்பு போன்றவை ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலானோர்களுக்கு கண்டிப்பாக எந்தவொரு பிரச்சனையும் ஏற்படாது. ஒரு சிலருக்கு மட்டுமே இதுபோன்ற பிரச்சனை ஏற்படலாம்.

ஏற்கனவே எபிலெப்ஸி பிரச்சனை உள்ளவர்கள் மட்டும் நேப்பியர் பாலம் வழியாக செல்வதை தவிர்க்கலாம்" என கூறியுள்ளார். தற்போது இவ்வாறு பெயிண்ட் செய்யப்பட்டுள்ள நேப்பியர் பாலம் செஸ் போட்டிகள் முடிவடையும் வரையில், அதாவது ஆகஸ்ட் 10ஆம் தேதி வரையில் இவ்வாறான தோற்றத்தில்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்பே மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறும்.

ஆனால் நேப்பியர் பாலம் மீண்டும் தனது பழைய தோற்றத்திற்கு மாறும் என்பது உறுதி. ஏனெனில் கட்டக்கட்டமாக பெயிண்ட் செய்யப்பட்டுள்ள நேப்பியர் பாலத்தின் சாலைகளில் வழக்கமான கோடுகள் மற்றும் பார்டர்கள் அனைத்தும் மறைக்கப்பட்டுள்ளன. இது சில நேரங்களில் விபத்திற்கு வழிவகுக்கக்கூடும். சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களில் சிலரும் இதைதான் தெரிவித்து வருகின்றனர்.

கூவம் ஆறு கடலுடன் கலக்கும் முகப்பு பகுதிக்கு அருகே அமைந்துள்ள நேப்பியர் பாலத்தை 1869இல் அப்போதைய மெட்ராஸ் மாகாண கவர்னர் ஃபிரான்ஸிஸ் நேப்பியர் கட்டமைத்தார். அவரது நினைவாகவே அவரது பெயர் இந்த பாலத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. இந்த வகையில் பார்த்தோமேயானால், சென்னை நேப்பியர் பாலம் 150 வருடங்களுக்கும் மேல் பழமையான வரலாற்று சிறப்புமிக்கது.


Click it and Unblock the Notifications








