போரூர் - பூந்தமல்லி மெட்ரோ ரயில் எப்போது பயன்பாட்டிற்கு வரும்? இனியாவது டிராஃபிக் இல்லாம பயணிக்கலாம்..
சென்னை வாசிகள் மத்தியில் மெட்ரோ ரயில் சேவைக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. லக்சூரி மற்றும் சொகுசான டிராவல் அனுபவத்தை இந்த ரயில் சேவை மக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. எனவேதான் இதனை விரிவாக்கம் செய்வதில் தமிழக அரசும் தீவிரம் காட்டிக் கொண்டிருக்கின்றது. இதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாகவே 2025-2026 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் அறிவிப்பு அமைந்திருக்கின்றது. இந்த பட்ஜெட் பல்வேறு துறைக்களுக்கான பலன்களை உள்ளடக்கியதாக இருந்தது. குறிப்பாக, வாகன உலகம் சார்ந்த திட்டங்களை மிக அதிகளவில் இந்த பட்ஜெட் கொண்டிருப்பதை நம்மால் காண முடிகின்றது.
குறிப்பாக, சென்னை மக்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பான பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் திட்டம் பற்றிய தகவலை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பலரின் கவனத்தைக் கவர்ந்திருக்கின்றது. இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இந்த வழித்தடம் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்றே அவர் தெரிவித்து இருக்கின்றார்.

இதுதவிர, இன்னும் பல இடங்களில் மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் செய்ய இருப்பதையும் இந்த பட்ஜெட் வாயிலாக அவர் தெரிவித்து இருக்கின்றார். அந்தவகையில், ஏர்போர்ட்டில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் விரிவாக்கம் செய்யப்பட இருப்பதையும் அவர் இந்த பட்ஜெட் வாயிலாக உறுதிப்படுத்தி இருக்கின்றார்.
ரூ. 9,335 கோடி மதிப்பிலேயே இந்த மெட்ரோல் ரயில் வழித்தட விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. இதுமட்டுமல்ல கோயம்பேட்டில் இருந்து பட்டாபிராம் வரையும், பூந்தமல்லியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரையிலும் மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே எதிர்காலத்தில் சென்னையை முழுக்க முழுக்க மெட்ரோ ரயில்கள் அலங்கரித்த வண்ணம் இருக்கும் என தெரிகின்றது. கோயம்பேடு - பட்டாபிராம் வழித்தடம் ரூ. 9,744 கோடி பட்ஜெட்டிலும், பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதூர் வழித்தடம் ரூ. 8,779 கோடி பட்ஜெட்டிலும் அமைக்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவை அனைத்தைக் காட்டிலும் போரூர் - பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை இந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பது பலரைக் கவரும் அமைந்திருக்கின்றது. இந்த பகுதி மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இது உள்ளது. குறிப்பாக, மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் காரணமாக இந்த பகுதி மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாக மாறி இருக்கின்றது.
இது அனைத்திற்கும் விரைவிலேயே முற்று புள்ளி வைக்கப்பட இருக்கின்றது. இதுவே பலரின் மகிழ்ச்சிக்கு காரணமாக அமைந்திருக்கின்றது. சுமார் 63,246 கோடி பட்ஜெட்டில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை அரசு உருவாக்கி வருகின்றது. 118.9 கிமீ தூர ரூட்டை உள்ளடக்கியதே இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் சேவை திட்டம் ஆகும்.
மாதாவரம் - சிப்காட், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி, மாதாவரம் - சோழிங்கநல்லூர் மற்றும் பூந்தமல்லி - போரூர் ஆகியவை இதில் அடங்கும். இந்த புதிய ரூட்களில் டிரைவர் இல்லாமல் இயங்கும் புதிய ரயில்களே இயக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மூன்று பெட்டிகள் கொண்டதாகவே அந்த ரயில்கள் இருக்கும் என கூறப்படுகின்றது.
இத்துடன், மணிக்கு 80 கிமீ வேகம் முதல் 90 கிமீ வேகம் வரை அது இயக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது. இத்துடன் மெட்ரோ ரயில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சௌகரியமான பயணத்திற்காக உள் மற்றும் வெளிப்பக்கத்தில் சிசிடிவி கேமிரா, செல்போன் சார்ஜிங் போர்ட், கைப் பிடிகள், வழித்தடம் மற்றும் வரவிருக்கும் நிறுத்தத்தைக் காண்பிக்கும் திரைகள் உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கும் என கூறப்படுகின்றது.
இதுதவிர நிற்பவர்கள் சாய்ந்துக் கொள்ள ஏதுவாக 'பெர்ச்' (Perch) வகை இருக்கைகளும் இதில் கொடுக்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகின்றது. ஆகையால், இந்த வழித்தடத்தில் இயங்கும் மெட்ரோ ரயில்களுக்கும் சென்னை வாசிகள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னை வாசிகளின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக போரூர் - பூந்தமல்லி ரூட் மெட்ரோ ரயில் சேவை உள்ளது. இது டிசம்பர் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என பரவலாகக் கூறப்பட்டு வந்த நிலையில், இந்த பட்ஜெட் வாயிலாக தமிழக நிதியமைச்சர் உறுதிப்படுத்தி இருக்கின்றார். ஆகையால், இந்த ஆண்டு இறுதியில் புதிய ரூட் மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டிற்கு வர இருப்பது உறுதியாகி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








