ஐடி கம்பெனி ஊழியர்களுக்கு கார் மூலம் சிஇஓ கொடுத்த ஷாக்! சென்னையில் இந்த மாதிரி கம்பெனி எல்லாம் எங்க இருக்கு?
எந்த தொழிலாக இருந்தாலும் சரி, தொழிலாளர்கள் நல்லா இருந்தால்தான் அந்த வணிகம் சிறப்பாக இருக்கும். இது, குண்டூசி தயாரிக்கும் கம்பெனியில் இருந்து பெரிய ராக்கெட் தயாரிக்கும் கம்பெனி வரையில் அனைத்திற்கும் பொருந்தும். ஏனெனில், தொழிலுக்கான முதலீடை போட்டு, வணிகத்திற்கான திட்டங்களை வகுப்பதுடன் முதலாளிகளின் பணி முடிந்துவிடுகிறது. ஆனால், தொழிலாளர்கள் தான் அடிப்படை பணிகளில் இருந்து எல்லா விஷயங்களிலும் நேரடியாக ஈடுப்பட கூடியவர்களாக இருக்கின்றனர். இதனை நன்கு புரிந்து வைத்துள்ள சென்னை ஐடி நிறுவனம் ஒன்று அதன் பணியாளர்களுக்கு பிராண்ட்-நியூ காரை வழங்கி சிறப்பித்துள்ளது.
சென்னையின் பெருங்குடியில் ராஜீவ் காந்தி சாலையில் செயல்படும் மென்பொருள் நிறுவனம் (Software Company) 'அகிலிசியம் கன்சல்ட்டிங்' (Agilisium Consulting) ஆகும். உயிர் அறிவியல் துறையில் பல்லுயிர்களின் உயிர் அணுக்களை ஆய்வு செய்து அது தொடர்பான தரவுகள் மற்றும் ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்குவதான் அகிலிசியம் கன்சல்ட்டிங் நிறுவனத்தின் பணி ஆகும்.

இந்த சென்னை ஐடி கன்சல்ட்டிங் நிறுவனத்தின் வணிகம் மொத்தமும் பிஸ்னஸ்-பிஸ்னஸ் ஆக உள்ளது. அதாவது, மக்களையோ அல்லது தனிப்பட்ட வாடிக்கையாளரையோ அணுகக்கூடிய நிறுவனம் இது கிடையாது. உயிர் அறிவியல் துறையில் உள்ள மற்றொரு நிறுவனத்தின் தேவையை அறிந்து அதற்கேற்ப தனது சேவையை அகிலிசியம் கன்சல்ட்டிங் நிறுவனம் வழங்கி வருகிறது.
இவ்வாறான ஐடி நிறுவனங்கள் சென்னையிலேயே வேறு சில நிறுவனங்கள் இருந்தாலும், அகிலிசியம் கன்சல்ட்டிங் நிறுவனத்தின் வணிகம் சமீப காலமாக சிறப்பாக இருந்து வருகிறது. தங்களது நிறுவனத்தில் நீண்ட வருடங்களாக பணியாற்றும் பணியாளர்களை இதற்கு முக்கியமான காரணமாக அகிலிசியம் கன்சல்ட்டிங் நிர்வாகம் கருதுகிறது. அவ்வாறு நீண்ட வருடங்களாக நிறுவனத்துடன் இணைந்து பயணித்துவரும் பணியாளர்களுக்கு பரிசுகளை வழங்க முடிவு செய்தது.

ஆனால், அதற்காக இவ்வளவு விலையுயர்ந்த பரிசாக பிராண்ட்-நியூ காரை வழங்கும் என்று இந்த நிறுவனத்தின் பணியாளர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. நீண்ட வருடங்களாக பணியாற்றும் பணியாளர்கள் என்றவுடன், 20, 30 வருடங்கள் என நினைத்துவிட வேண்டாம். ஏனெனில், அகிலிசியம் கன்சல்ட்டிங் நிறுவனமே 2014ஆம் ஆண்டில்தான் நிறுவப்பட்டது. இந்த வகையில் பார்த்தால், 10 வருடங்களுக்கும் மேலாக செயல்பட்டுவரும் இந்த ஐடி நிறுவனத்திற்கு வெளிநாடுகளிலும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் கிளைகள் உள்ளன.
இத்தகைய நிறுவனம் தனது நீண்ட கால பணியாளர்களுக்கு வழங்கியிருப்பது, புத்தம் புதிய ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) காரை ஆகும். மொத்தம் 25 பணியாளர்களுக்கு பிராண்ட்-நியூ ஹூண்டாய் கிரெட்டா கார்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளன. 25 பணியாளர்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் கார் பரிசளிக்கப்பட்டதால், இதனை பெருங்குடியில் உள்ள நிறுவனத்தின் கட்டிடத்திற்கு வெளியே சிறிய நிகழ்ச்சி போல் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதனால், காரை பெறவுள்ள பணியாளர்களுள் சிலர் தங்களது குடும்பத்துடன் அலுவலகத்திற்கு வந்து இருந்தனர். டெலிவிரி பெற்ற பணியாளர்களின் பெயர்கள் அவர்களுக்கான கிரெட்டா காரின் நம்பர் பிளேட்டில் பொறிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து அகிலிசியம் கன்சல்ட்டிங் நிறுவனத்தின் நிறுவனரும், சிஇஓ-வுமான ராஜு பாபு கூறுகையில், "என்மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி; பின்தொடர்பவர்கள் இல்லாமல், இங்கு தலைவர் இல்லை" என்றார்.
ஹூண்டாய் கிரெட்டா காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், ஹூண்டாய் நிறுவனத்தின் காம்பெக்ட் எஸ்யூவி காரான இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.11.11 லட்சத்தில் இருந்து ரூ.20.50 லட்சம் வரையில் உள்ளன. 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு TGDi பெட்ரோல் என மூன்று விதமான என்ஜின் ஆப்ஷன்களில் கிரெட்டா கார் விற்பனை செய்யப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கிரெட்டா ஆனது இந்தியாவில் மக்கள் பலரால் மிகவும் விரும்பி வாங்கப்படும் காராக விளங்குகிறது. ஆதலால், பணியாளர்களுக்கு பரிசாக வழங்குவதற்கு ஹூண்டாய் கிரெட்டா ஆனது மிகவும் ஏற்ற காராகும். இருப்பினும், பணியாளர்களுக்கு புத்தம் புதிய காரை பரிசாக வழங்குவது என்பது உண்மையில் ஆச்சிரியமான விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








