தொடரும் வாகன வேட்டை.. சென்னையில் அகற்றப்பட்ட 3000 வாகனங்கள்.. எல்லாத்தையும் என்ன பண்ண போறாங்க தெரியுமா?
சென்னையில், நகராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் பழைய வாகனங்களை அகற்றும் பணியில் தொடர்ந்து நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையிலேயே 3,000 க்கும் அதிகமான வாகனங்களை நகராட்சி நிர்வாகம் புதிதாக சாலையோரங்களில் அகற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் கவனிக்க வேண்டிய தகவல் என்னவென்றால் அனைத்தும் கேட்பாரற்று கை விடப்பட்ட வாகனங்கள் ஆகும். இந்த வாகனங்கள் அனைத்தையும் ஏல விடுவதற்கான முயற்சியிலேயே தற்போது சென்னை நகராட்சி நிர்வாகம் களமிறங்கி இருக்கின்றது.
இந்த நிலையிலேயே சென்னை காவல்துறையின் உதவியை நாடி இருக்கின்றது நகராட்சி நிர்வாகம். சாலையோரங்களில் இருந்து கைப்பற்றப்பட்டு இருக்கும் அந்த வாகனங்கள் குற்ற வழக்குகளுடன் தொடர்புடையதா என்பதைச் சரிபார்க்கவே நகர காவல்துறையின் உதவியை நகராட்சி தற்போது நாடியிருக்கின்றது. அந்த வாகனங்கள் மீது எந்த குற்றப் பின்னணியும் இருக்காது எனில், அந்த வாகனங்களை அடுத்ததாக நகராட்சி ஏலம் விடுவதற்கான நடவடிக்கையை எடுக்கும்.

நகராட்சி நிர்வாகம் சென்னையில் கேட்பாரற்று கை விடப்பட்டு இருக்கும் வாகனங்களை அகற்றும் பணியில் கடந்த சில ஆண்டுகளாகவே ஈடுபட்டு வருகின்றது. குறிப்பாக, 2018 ஆம் ஆண்டில், சென்னையில் கடுமையான டெங்கு காய்ச்சல் பரவல் ஏற்பட்டபோதே இந்த பணியை கையில் எடுத்துவிட்டது சென்னை நகராட்சி நிர்வாகம்.
பழைய, கைவிடப்பட்ட வாகனங்களில் தேங்கியிருக்கும் தண்ணீர் டெங்கு பரப்பும் கொசுக்களின் இனப்பெருக்கம் செய்யும் கூடரமாக இருப்பது கண்டறியப்பட்ட பின்னரே இந்த பணியில் நகராட்சி நிர்வாகம் மிக தீவிரமாகக் களமிறங்கியது. இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் வாயிலாகவே முன்னதாகவே 5,000 க்கும் மேற்பட்ட பழைய வாகனங்கள் அகற்றப்பட்டன.

அவற்றை அப்போதைய மாநகராட்சி ஆணையராக இருந்து கார்த்திகேயன் ஏலம் விடுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டார். இந்த நிலையிலேயே மீண்டும் நகர்புற சாலையோரங்களில் பழைய வாகனங்களை விடும் வேலையில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். அத்தகைய வாகனங்களையே தற்போது நகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். இம்முறை சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் கண்டெடுக்கப்பட்டு அகற்றப்பட்டு இருக்கின்றன.
இவற்றிற்கு தடையில்லா சான்றை பெரும் முயற்சிகளிலேயே அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இது கிடைக்கும் பட்சத்தில் கைப்பற்றப்பட்ட மூன்றாாயிரத்திற்கும் அதிகமான அந்த பழைய வாகனங்கள் ஏலம் வாயிலாக விற்கப்படும். மேலும், இதன் வாயிலாக கிடைக்கும் வருவாயைக் கொண்டு நகரத்தின் வளர்ச்சி பணிக்காக செலவிடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறிப்பாக, நகரத்தின் பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்களை நிறுவ இந்த பணம் பயன்படுத்தப்பட இருக்கின்றது. சாலையோரங்களில் நிறுத்தப்படும் பழைய வாகனங்களால் போக்குவரத்து மிகப் பெரிய அளவில் பாதிப்படைகின்றது. இதுதவிர, மழை நீர் தேங்கி கொசு போன்ற வியாதி பரப்பும் பூச்சிகளின் உரைவிடமாகவும் அவை மாறி வருகின்றன.
இதைத் தவிர்க்கும் பணியிலேயே நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகின்றது. இதேபோல், பழைய வாகனங்களை தாமாக முன் வந்து ஸ்கிராப் செய்வதற்கு பழைய வாகனங்களின் உரிமையாளர்களை ஊக்குவிக்கும் முயற்சிகளும் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காற்று மாசுபாட்டிற்கு பழைய வாகனங்களின் இயக்கமே முக்கிய காரணம் என கருதப்படுகின்றது. இதன் அடிப்படையிலேயே பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகங்களை பயன்பாட்டில் இருந்து அகற்றுவதற்கான முயற்சிகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனங்களை சாலையோரத்தில் விடுவதனால் போக்குவரத்து மிகப் பெரிய பாதிப்படைகின்றது. சென்னை நகரத்தில் முன்பைக் காட்டிலும் இப்போது வாகனங்களின் நெரிசல் மிகப் பெரிய அளவில் வளர்ந்துக் காணப்படுகின்றது. இதனை மேலும் சவலானதாகவே மாற்றி வருகின்றன, சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள். ஆனால், இனி இந்த மாதிரியான வாகனங்களினால் எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிகின்றது.


Click it and Unblock the Notifications








