சென்னையில் 40kmph வேகத்திற்கு மேல் சென்றால் அபராதம்? கிரேட்டர் சென்னை போலீஸ் என்ன சொல்கிறது?
சென்னையில் பகல் நேரத்தில் நகரத்திற்குள் 40kmph வேகத்திற்கும், இரவு நேரத்தில் 50kmph வேகத்திற்கும் மேல் செல்லக்கூடாது என சமீபத்தில் ஓர் பரபரப்பான செய்தி வெளியாகி வாகன ஓட்டிகளை பதற்றமடைய வைத்துள்ளது. இணையத்திலும் மிகுந்த விவாதத்திற்குரிய பேச்சாக மாறியுள்ள இந்த விஷயத்தில் அந்தர் பல்டி அடித்தாற்போல் சென்னை போக்குவரத்து போலீஸ் துறை விளக்கமளித்துள்ளது.
நெடுஞ்சாலையில் ஏற்படும் அதே எண்ணிக்கையிலான சாலை விபத்துகள் முக்கிய நகரங்களில் நிகழ்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, நீண்ட தூர நெடுஞ்சாலைகளில் நிகழும் சாலை விபத்துகளின் எண்ணிக்கையும், குறிப்பிட்ட பரப்பளவு மட்டுமே கொண்ட நகரத்தில் நிகழும் சாலை விபத்துகளின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட ஒன்றே.

அந்த வரிசையில், நமது சென்னையிலும் அதிக சாலை விபத்துகள் நடக்கின்றன. இதனை குறைக்க சென்னை மாநகர போலீஸார் புதிய புதிய முயற்சிகளை அவ்வப்போது மேற்கொண்டு வருகின்றனர். இந்த வகையில் சென்னையில் முக்கிய 30 இடங்களில் ஆட்டோமேட்டிக்காக அபராத செல்லானை வழங்கக்கூடிய ஸ்பீடு ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளதாக சமீபத்தில் சென்னை போக்குவரத்து போலீஸார் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்த 30 இடங்களில் பொருத்தப்பட்டுள்ள ஸ்பீடு ரேடார்கள் வழியாக சாலையில் வாகனங்கள் பகலில் 40kmph வேகத்திற்கும், இரவில் 50kmph வேகத்திற்கும் மேல் சென்றால் தன்னிச்சையாக வாகனத்தின் பதிவெண்ணை வைத்து அதன் உரிமையாளருக்கு அபராத செல்லானை அனுப்பிவிடும் என சென்னை போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை சிலரால் பாராட்டப்பட்டாலும், பலரது கண்டனத்திற்கு உரியதாக மாறியது.

சென்னை போக்குவரத்து நெரிசலில் 40kmph வேகத்திற்கு மேல் பயணிக்கவே சில பகுதிகளில் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும், அத்தகைய இடங்களிலும் 40kmph வேகத்திற்குள் சென்றால் பயண நேரம் மிகவும் தாமதமாகும் என நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை சமூக வலைத்தளங்களில் தெரிவிக்க, சிலரோ இது பொதுமக்களிடம் இருந்து பணத்தை அபராதமாக பெற போலீஸாரின் திட்டம் என முனுமுனுப்பதையும் கேட்க முடிந்தது.
இந்த நிலையில் இந்த விஷயத்தில் சென்னை போக்குவரத்து போலீஸார் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதாவது, சென்னையில் ஏ.என்.பி.ஆர் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதன் காரணம் வாகன ஓட்டிகளின் வேகம் பற்றிய ஓர் புரிதலை பெறுவதற்காகவே, அபராதம் பெறுவதற்காக அல்ல என சென்னை போக்குவரத்து போலீஸார் (GCTP) தங்களது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

சென்னை போலீஸாரின் இந்த டுவிட்டர் பதிவில், "அதிக வேகத்திற்கான அபராத செல்லானை வழங்குவதற்காக GCTP நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துகள் உலா வருகின்றன. GCTP 6 ஸ்பீடு டிஸ்பிளே போர்டுகளை தான் பொருத்தியுள்ளது. வாகன ஓட்டிகள் தங்களது வாகனம் இயங்கும் வேகத்தை அறிவதற்காக இவை பொருத்தப்பட்டுள்ளன.
இந்த போர்டுகள் ஓர் எச்சரிக்கை பலகையாகவே இருக்குமே அன்றி, செல்லான்களை வழங்கக்கூடியவை அல்ல. இருப்பினும், மேலும் 10 நிலையான ஸ்பீடு ANPR கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றால் அபராத செல்லானை வழங்க முடியும். ஆனால் இவை தற்போதைக்கு வாகன ஓட்டிகள் குறித்த ஓர் புரிதலை பெறுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வேக வரம்பு விஷயத்தில் நாங்கள் இறுதிக்கட்ட முடிவை எடுக்கும் வரையில் இவை அபராத செல்லானை வழங்காது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: பல வெளிநாட்டு நகரங்களில் ஸ்பீடு ரேடார்கள் தன்னிச்சையாக அபராத செல்லானை அனுப்புகின்றன. இவ்வளவு ஏன், நமது இந்தியாவில் கூட டெல்லி உள்பட சில நகரங்களில் உள்ளது. ஆனால் நம் சென்னை மாநகராட்சி போலீஸார் இந்த விஷயத்தில் ஓர் புரிந்துணர்வை பெற இப்போதுதான் ஆரம்பித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications









