செங்கல்பட்டுக்கு போகிற மாதிரி 1 மணிநேரத்தில் பெங்களூருக்கு போய்டலாம்! நாடாளுமன்றத்தில் ஒலித்த குரல்!!
புல்லட் இரயில்கள் (Bullet Trains) உலகம் முழுவதும் அதிகளவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சில நாடுகள் கடந்த பல வருடங்களாக புல்லட் இரயில்களை தங்களது சேவையில் பயன்படுத்தி வருகின்றன. ஆனால், இந்தியாவில் இன்னமும் புல்லட் இரயில்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. ஆனால் உண்மையில், இந்தியா போன்ற அளவில் பெரியதான நாட்டிற்கே புல்லட் இரயில் சேவைகள் அவசியமானவை ஆகும். இந்த நிலையில், இந்தியாவிற்கான புல்லட் இரயில் சேவை குறித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு புதிய அப்டேட்டை வழங்கியுள்ளார். அவர் அப்படி என்ன கூறினார்? வாருங்கள் அதனை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
பரப்பளவில் உலகின் பெரிய நாடுகளுள் ஒன்று நம் இந்தியா ஆகும். நம் நாட்டில் ஓரிடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு இரயிலில் செல்வதற்கு 2- 3 நாட்கள் கூட ஆகிறது. இந்த பயண நேரத்தை குறைப்பதற்காக மத்திய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வந்தே பாரத் இரயில்கள் கொண்டுவரப்படுவது கூட அந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியே ஆகும்.

இருப்பினும், வந்தே பாரத் இரயில்கள் கூட வழக்கமான எக்ஸ்பிரஸ் இரயில்களை காட்டிலும் சில மணிநேரங்கள் விரைவாக செல்வதற்கு மட்டுமே ஏற்றவை ஆக இருக்கின்றன. வந்தே பாரத் இரயில்களை காட்டிலும் விரைவாக செல்ல வேண்டுமென்றால், புல்லட் இரயில்கள் தான் ஏற்றவை ஆகும். ஏற்கனவே கூறியதுபோல், சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் ஏற்கனவே புல்லட் இரயில் சேவைகள் வந்துவிட்டன.
இந்தியாவிலும் இத்தகைய இரயில் சேவைகள் விரைவில் வரவுள்ளதாகவும், இந்தியாவின் முதல் புல்லட் இரயில் சேவை ஆனது மும்பை மற்றும் அகமதாபாத் நகரங்களுக்கு இடையே கொண்டுவரப்பட உள்ளதாகவும் கடந்த சில வருடங்களாக கூறப்பட்டு வருகிறது. மேலும், இதற்கான தண்டவாள பணிகள் கூட துவங்கிவிட்டதாக படங்கள் மற்றும் வீடியோக்களுடன் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், இந்தியாவின் புல்லட் இரயில் சேவை குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய குடியரசு தலைவர் முர்மு, இந்தியாவின் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் புல்லட் இரயில் சேவையை கொண்டுவருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் பணிகளை துவங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இதில் இருந்து, இந்த அதிவேகமான இரயில் சேவையை நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொண்டுவர மத்திய அரசு விரும்புவதை அறிய முடிகிறது.
மேலும், நடைபெற்றுவரும் மும்பை - அகமதாபாத் புல்லட் இரயில் சேவை பணிகள் குறித்து பேசிய இந்திய குடியரசு தலைவர், இந்த பணிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்திருப்பதால் அவை வேகமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை மற்றும் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரங்களுக்கு இடையே சுமார் 508கிமீ தொலைவிற்கு இந்தியாவின் முதல் புல்லட் இரயில் சேவை அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த வழித்தடத்தில் இயக்கப்பட உள்ள புல்லட் இரயில்கள் அதிகப்பட்சமாக மணிக்கு 320kmph வேகத்திற்கு இயங்கக்கூடியவை ஆக இருக்கும். இதன் மூலமாக, மும்பை - அகமதாபாத் இடையேயான தூரத்தை ஏறக்குறைய வெறும் 2 மணிநேரத்தில் கடந்துவிடலாம் என கூறப்படுகிறது. மேற்கு இந்தியாவின் இரு முக்கிய மாநகரங்களான இவை இரண்டிற்கு இடையே சூரத் மற்றும் வதோதாரா என்கிற 2 நகரங்களில் மட்டுமே புல்லட் இரயில்கள் நின்று செல்லும் வகையில் இந்த இரயில் சேவை வழங்கப்பட உள்ளது.
சூரத் மற்றும் பிலிமோரா இடையேயான முதற்கட்ட பணிகள் 2026 ஆகஸ்ட் மாதத்தில் நிறைவு பெற்றுவிடும் என கணிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ இரயில் சேவையை பற்றி பேசிய குடியரசு தலைவர் முர்மு, கடந்த 10 வருடங்களில் 21 நகரங்களுக்கு மெட்ரோ இரயில் சேவைகள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், வந்தே மெட்ரோ போன்ற திட்டங்கள் நாட்டிற்கான பொது போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான மத்திய அரசாங்கத்தின் வெளிப்பாடு எனவும் தெரிவித்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புல்லட் இரயில்கள் இந்திய போக்குவரத்தின் மிக முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்பது உறுதி. ஆனால், இந்தியாவின் முதல் புல்லட் இரயில் சேவை வருவதற்கே இன்னும் 5 வருடங்களுக்கு மேல் ஆகும் என்பதுபோல் தெரிகிறது. அப்படியென்றால், நம் சென்னையில் புல்லட் இரயில் சேவை வருவதற்கு குறைந்தது இன்னும் 10 வருடங்கள் ஆகிவிடும்.


Click it and Unblock the Notifications









