சென்னையில் டிரைவரில்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில் இயக்க முடிவு!
சென்னையில் டிரைவரில்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கு திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதுபற்றிய கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
சென்னையில் டிரைவரில்லாமல் ஓடும் மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கு சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேசன் திட்டமிட்டுள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் டிரைவரில்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. முதல்முறையாக டெல்லியில் டிரைவரில்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில்கள் இந்த மாத இறுதியில் இருந்து சேவைக்கு வர இருக்கின்றன. இதற்கான அனுமதி சில மணிநேரத்திற்கு முன்தான் கிடைத்துள்ளது.

டெல்லிக்கு அடுத்து டிரைவரில்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில்களை இயக்க சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேசன் நிறுவனம் முயற்சிகளில் தீவிரமாக இறங்கி இருக்கிறது.

சென்னையில் திட்டமிடப்பட்டு இருக்கும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின்படி, டிரைவரில்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில்களை இயக்கும் வகையில் கட்டமைப்புகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், 80 சதவீத கட்டமைப்பு சுரங்கப்பாதையாக அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டு இருக்கிறது.

இதற்கான பாதுகாப்பு கொள்கை முடிவுகளை எடுப்பதற்கான பணிகளில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புறத் துறை அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன்படி, இந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேசன் நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இயக்கப்பட இருக்கும் மெட்ரோ ரயில்களில் டிரைவர் கேபின் இருக்காது. முழுக்க முழுக்க பயணிகள் அமரும் வகையில் பெட்டிகள் கட்டப்பட உள்ளன. அனைத்து ரயில்களையும் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து கண்காணிக்க முடியும்.
Recommended Video


விபத்து அபாயம் ஏற்பட்டால், கட்டுப்பாட்டு மையத்தில் இருப்பவர் ரயில்களின் கட்டுப்பாட்டை இருந்த இடத்திலிருந்தே எடுத்து இயக்க முடியும். இந்த முறையின் மூலமாக, 100 சதவீதம் பாதுகாப்பான பயணத்தை அளிக்க முடியும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

மேலும், மனித தவறுகளால் ஏற்படும் விபத்துக்களையும் தவிர்க்க முடியும் என்று அவர் கூறினார். இந்த ரயில்களுக்காக விசேஷ சிக்னல் சிஸ்டம் அமைக்கப்பட உள்ளன. முன்னால் செல்லும் மற்றும் பின்னால் வரும் ரயில்களுக்கு ஏற்ப வேகத்தை தானியங்கி முறையில் கட்டுப்படுத்தும் வகையில் இந்த ரயில்கள் இயங்கும்.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.44,000 கோடி மதிப்பீட்டில், 108 கிமீ தூரத்திற்கு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில், 108 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட இருக்கின்றன.

இந்த திட்டம் குறித்து விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசின் ஒப்புதலுக்கு சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேசன் நிறுவனம் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு அமைப்பிடம் இருந்து நிதி உதவி பெற்று திட்டத்தை துவங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது.

அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் இந்த திட்டத்திற்கான ஒப்பந்தம் செய்யப்பட இருக்கிறது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் முடிவடைந்து ரயில்கள் இயக்குவதற்கு 10 ஆண்டுகள் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications