“தரமற்ற சாலைகளில் விபத்துகள் குறைவாகவே நடக்கின்றன” - சத்தீஸ்கர் அமைச்சர்!! இது என்னங்க புது புரளியா இருக்கு...
நல்ல சாலைகள் தான் விபத்துகளுக்கு காரணம் என்றும், மோசமான சாலைகளாலேயே சாலை விபத்துகள் குறைவாக நடைபெறுவதாகவும் சத்தீஸ்கர் மாநில அமைச்சர் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். யார் அவர்? எதற்காக இவ்வாறான கருத்தை அவர் தெரிவித்துள்ளார்? என்பது குறித்த முழுமையான விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

உலகளவில் சாலை விபத்துகள் அதிகளவில் நடைபெறும் நாடுகளை லிஸ்ட் எடுத்து பார்த்தோமேயானால், அதில் இந்தியா நிச்சயமாக முன்னிலையில் இருக்கும். அந்த அளவிற்கு, நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டிலும் பல்லாயிரக்கணக்கான சாலை விபத்துகள் நடைபெறுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு இந்தியா, அளவில் மிக பெரிய நாடு என்பது ஒரு காரணமாக விளங்கினாலும், நம் நாட்டில் பல்வேறு பகுதிகளில் போதிய சாலை வசதிகள் இல்லை என்பதே சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. போடப்பட்ட சாலைகளிலும் ஏகப்பட்டவை குண்டு குழியாக, பயணிப்பதற்கே அபாயகரமானவைகளாக உள்ளன.

எந்தவொரு நாட்டிலும் சாலைகள் தான் அந்த நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள உள்கட்டமைப்பு பணிகளுக்கு அடையாளம் ஆகும். ஏனெனில் சாலைகளே நாட்டில் ஒரு பகுதியையும் மற்றொரு பகுதியுடன் இணைக்கின்றன. அப்போதுதான், நாட்டின் அனைத்து பகுதிகளும் சமச்சீராக பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய முடியும். சாலைகள் முறையாக பராமரிக்கப்படவில்லை எனில் நாட்டின் மற்ற உள்கட்டமைப்புகளுக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்.

ஆனால் பிரேம் சாய்சிங் தேகம் என்ற பெயர் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தின் அமைச்சர், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது சாலை பராமரிப்பு பணிகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு வித்தியாசமான பதில் ஒன்றை அளித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அமைச்சர் பிரேம் சாய்சிங் தேகமின் அந்த பதில் நிச்சயம் உங்களையும் அதிர்ச்சியுற வைப்பதாக இருக்கும்.

அவர் கூறியதாவது, "சாலைகளை சீரமைக்க கோரி மொபைல் போன் அழைப்புகள் எங்களுக்கு வருகிறது. ஆனால் எங்கு சாலைகள் தரமற்றவைகளாக உள்ளதோ அங்கு சாலை விபத்துகள் குறைவாக ஏற்படுகின்றன. எங்கு சாலைகள் நல்லப்படியாக உள்ளதோ, அங்கு விபத்துகள் தினந்தோறும் நடக்கின்றன. சாலைகள் சிறப்பாக இருக்க வேண்டுமெனில் அனைவரும் கட்டுப்பாட்டை வெளிக்காட்ட வேண்டும்" என்பதாகும்.

அதாவது, மோசமான சாலைகளை தான் ஆதரிக்கவில்லை என்பதை தெளிவுப்படுத்திய அமைச்சர், சாலைகள் எல்லா இடங்களிலும் நல்லபடியானதாக இருக்க வேண்டும், அதேநேரம் நல்ல சாலைகளில் விபத்துகளையும், உயிரிழப்புகளையும் குறைக்க வேக வரம்பிற்குள் எவ்வாறு வாகனங்களை இயக்க வேண்டும் என்பதை மக்கள் கற்க வேண்டும் என அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அமைச்சர் பிரேம் சாய்சிங் தேகம், "மோசமான சாலைகளில் மக்கள் மெதுவாக பயணம் செய்வதை தவிர்த்து வேறு வழி இல்லை. வடாஃப் நகரில் (சாலை எப்போது சீரமைக்கப்படும் என பத்திரிக்கையாளர்கள் கேள்வியெழுப்பிய பகுதி) சாலை சீரமைப்பு வேலைகளை சம்மந்தப்பட்ட துறையினர் முடுக்கி விட்டுள்ளனர். ஒப்பந்ததாரருக்கும் டெண்டர் விடப்பட்டுள்ளது. மழை காரணமாக ஒப்பந்ததாரர் இன்னும் பணிகளை துவங்கவில்லை" என தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சாலை சீரமைப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளதாக கூறினாலும், பேட்டியின் துவக்கத்தில் மோசமான சாலைகளில் விபத்துகள் குறைவாகவே நடக்கின்றன என சத்தீஸ்கர் அமைச்சர் பிரேம் சிங் தேகம் கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவ்வாறு சாலை கட்டமைப்புகள் விஷயத்தில் இந்திய அரசியல்வாதிகள் எதிர்மறையான கருத்துகளை தெரிவிப்பது இது ஒன்றும் புதியது அல்ல.

2019 ஆண்டிலேயே அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினர் பல்லாப் லோசான் தாஸ் இதேபோன்றதான அறிக்கை ஒன்றை தெரிவித்து இருந்தார். அதாவது, அவரும் தரமான சாலைகளே விபத்துகளுக்கு வழிவகுப்பதாகவும், நேர்த்தியான சாலைகள் வாகன ஓட்டிகளை கூடுதல் ஆக்ஸலரேஷன் கொடுக்க தூண்டுவதாகவும் அப்போது கூறியிருந்தார்.

இவ்வளவு ஏன், சில மாதங்களுக்கு முன்னர் கர்நாடக மாநில துணை முதல்வரே, தரமான சாலைகள் தான் பெரும்பான்மையான விபத்துகளுக்கு காரணமாக அமைவதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா மட்டுமல்ல, பெரும்பாலான நாடுகளில் அதிவேக பயணமே விபத்துகளுக்கு காரணமாக உள்ளன. அதற்காக சாலைகள் தரமற்றவைகளாகவே இருக்கட்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாதுதானே...


Click it and Unblock the Notifications








