குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் முன் இருக்கை: ஆராய்ச்சி மாணவர்களின் அதிர்ச்சி ரிப்போர்ட்!
குழந்தைகளை முன் இருக்கையில் அமர வைத்துக்கொண்டு காரில் பயணிப்பது மிகவும் ஆபத்தானது என்று கேரளாவைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

வாகன விற்பனையில் இந்தியா ஓர் வளர்ந்து வரும் சந்தையாக உருவாகி வருகிறது. அதற்கேற்ப, நாளுக்கு நாள் இருசக்கரம் மற்றும் கார்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால், நாட்டில் உள்ள சாலைகள் பெரும் போக்குவரத்து நெரிசலையும், வாகன விபத்துகளையும் சந்தித்து வருகின்றது. அதன்படி, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன விபத்தில் ஏராளமான உயிர்கள் பரிதாபமாக பலியாகி வருகிறது.

இதில், பெரும்பாலும் இளைஞர்களே அதிகமாக உள்ளனர். ஆர்வகோளாறினால் அதிகவேகமாக வாகனங்களை இயக்கும் இளைஞர்கள், ஒருகட்டத்தில் வாகனத்தை கட்டுப்படுத்த முடியமால் விபத்தினில் சிக்குகின்றனர். அதுமட்டுமின்றி, எதிர்புறத்தில் வரும் அப்பாவிகளையும் விபத்தில் சிக்க வைத்து ஆபத்தை ஏற்படுத்துகின்றனர்.

இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை எந்த அளவிற்கு வளர்ச்சியடைந்து வருகிறதோ, அதே அளவிற்கு அவற்றால் ஏற்படும் பின் விளைவுகளும், விபத்துகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. அந்த வகையில், தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டில் மட்டும் 70 ஆயிரம் பேர் சாலை விபத்தில் இறந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தடுக்கும் விதமாக அரசும், போக்குவரத்துத்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும், இது அசுர வளர்ச்சியை அடைந்து, தீராத தலை வலியாக உருவாகியுள்ளது.

விபத்து என்பது யாரும் தெரிந்து செய்வதில்லை. இருப்பினும், நாம் செய்யும் சிறு தவறின் காரணமாகதான் அவை ஏற்படுகின்றது என்பதை நாம் மறுக்க முடியாத ஒன்று. ஆம், தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களை இயக்குவது, சீட் அணியாமல் காரை ஓட்டிச் செல்வது, மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இதுபோன்று, நாம் செய்யும் சிறு தவறு தான் நம்மையும், நம்மைச் சார்ந்திருப்பவர்களையும் தீராத துயரத்தில் ஆழ்த்துகிறது.

இந்த நிலையில், கேரள மாநிலத்தில், அரசு மற்றும் தனியார் துறை சார்பாக வாகன விபத்துகள் குறித்த கருத்தரங்கு ஒன்று அண்மையில் நடைபெற்றது. இதில், கேரள மாநிலத்தின் குழந்தை உரிமைகள் பாதுகாக்க கமிஷன், போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் அமைப்பு உட்பட பல்வேறு முக்கிய அதிகாரிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

அதன்படி, இந்த கருத்தரங்கில் கலந்துக்கொண்ட டைனமிக் என்ற அறிவியல் சார்ந்து ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள், ஓர் அதிர்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டனர். அதில், கார் விபத்துக்குள்ளாகும்போது, முன் இருக்கையில் அமர்ந்துச் செல்லும் குழந்தைகள் அதிகளவு ஆபத்தினை சந்திப்பதாக தெரிவித்தனர். அதேசமயம், பின் இருக்கையில் அமரும் குழந்தைகள் சிறதளவு ஆபத்தை மட்டுமே சந்திப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். இது முன்னிருக்கையில் இருக்கும் ஆபத்தைக் காட்டிலும் மிகவும் குறைவுதான் என கூறப்படுகிறது.

அந்தவகையில், காரில் ஏர்பேக்குகள் இருந்தாலும், 250கிமீ வேகத்தில் சென்று விபத்தினை ஏற்படுத்தும்போது காரின் முன் பகுதியில் அமர்ந்து செல்லும் குழந்தைகள், தூக்கிவீசப்பட்டு கழுத்தெலும்பு முறிவு, மண்டையோடு உடைதல் உள்ளிட்ட பல்வேறு மோசமான ஆபத்தை சந்திக்க நேரிடும் என விளக்கமளிக்கப்பட்டது. ஆனால், அதுவே பின்னிருக்கையில் அமர்ந்துச் செல்லும்போது இதுபோன்று நிகழ்வது மிகவும் குறைவாகவே நடப்பதாகவும், அதற்கு சான்றாக, இதற்கு முன்னதாக நடைபெற்ற விபத்துகளும், ஆய்வுகளும் இருப்பதாக அந்த அமைப்பு கூறியது.

இதுகுறித்து, இந்திய சாலைபாதுகாப்பு இன்ஸ்டியூட்டின் இயக்குநர் உபேந்திரா நாராயாணன் கூறியதாதவது, "குழந்தைகளை முன்னிருக்கையில் அமர வைக்கக் கூடாது என்று அரசு சட்டம் கொண்டு வரவேண்டும். சமீபத்தில், புதிதாக திறக்கப்பட்ட கொல்லம் நெடுஞ்சாலையில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தபோது, 4 ஆயிரத்திற்கும் மேலான கார்களில் குழந்தைகள் முன்னிருக்கையில் அமர வைத்துக் கொண்டு செல்லப்பட்டது காண முடிந்தது.

மேலும், சிலர் தங்களது குழந்தைகளை டிரைவர் இருக்கையில் அமர வைத்து சென்றனர். இது பெற்றோர்களின் அஜாக்கிரதையா இல்லை அக்கறையின்மையாக என தெரியவில்லை. ஆனால், இதுகுறித்த விழிப்புணர்வை வாகன ஓட்டிகளுக்கு கட்டாயம் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், எர்ணாகுளம் பிராந்தியத்தின் அதிகாரி மனோஜ்குமார், "இதுபோன்ற வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு செய்தாலும் திருந்த மாட்டார்கள். அவர்களுக்கு கடுமையான தண்டனையும், அபராத்தைதயும் வழங்க வேண்டும். அப்போது தான் அவர்கள் திருந்துவார்கள்" என கடுமையான கருத்தைத் தெரிவித்தார்.

கேரள மாநிலத்தின் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் உறுப்பினர் எம்பி அந்தோணி பேசுகையில், "குழந்தைகளை முன்னிருக்கையில் அமர வைக்கக்கூடாது என்ற சட்டம் பல வெளிநாடுகளில் நடைமுறையில் உள்ளது. இதுபோன்ற சட்டத்தை மத்திய அரசுக் கொண்டுவர வேண்டுமானால், நீண்ட நாட்கள் எடுக்கும்.

ஆகையால், மாநில அரசுகள் இதுபோன்ற சட்டத்தை முன்மொழியலாம். இதன்மூலம், குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். மேலும், கார் தயாரிப்பு நிறுவனங்கள் குழந்தைகளுக்கான ஐசோபிக்ஸ் இருக்கைகளை இணைப்பதை கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும்" என அவர் தெரிவித்தார்.

குழந்தைகளை என்னதான் சீட்பெல்ட் போட்டு முன் இருக்கையில் அமர வைத்தாலும் இந்த ஆபத்து அவர்களுக்கு நேர்வதாக கூறப்படுகிறது. அதேபோன்று காரில் ஏர்பேக்குகள் இருந்தாலும் இந்த ஆபத்து அவர்களை விட்டு விலகுவதில்லை என்றும் சிலர் தெரிவிக்கின்றனர். ஏனென்றால் குழந்தைகள் மிகவும் இலுகவான உடல் அமைப்பைப் பெற்றவர்கள். அவர்களின் தலைக் கூடு மற்றும் உடல்பகுதி முதிர்ச்சியடையாத நிலையில் மிகவும் மிருதுவானதாக இருக்கும். ஆகையால், குழந்தைகளை காரில் கொண்டு செல்லும்போது மிகவும் பாதுகாப்பான முறையில் கொண்டுச் செல்வது ஒவ்வொரு பெற்றோர்களின் கடமையாகும். அதேபோன்று இனி உங்கள் குழந்தைகளை முன் இருக்கையில் அமரவைத்துக் கொண்டு செல்வதை தவிருங்கள். இதுவே அனைவரின் வேண்டுகோள்.


Click it and Unblock the Notifications








