இந்தியா எத்தனை தடை போட்டாலும், சீனா தான் உலகின் நம்பர் ஒன் இவி மார்க்கெட்!! காரணம் என்னவா இருக்கும்?
உலகளவில் பொருளாதாரத்தில் முன்னணியில் இருப்பது யார் என்கிற போட்டி கடந்த பல வருடங்களாக அமெரிக்கா, சீனா இடையே நிலவி வருவதை பற்றி நான் கூறி வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். ஆனால் எலக்ட்ரிக் வாகனங்களை பொறுத்தவரையில், சீனா தான் முன்னிலை வகிக்கிறது.
நம் இந்தியா உள்பட உலக நாடுகள் அனைத்தும் எலக்ட்ரிக் வாகனங்கள் தான் எதிர்காலம் என்பதை உணர்ந்து அதற்கேற்ப செயல்பட்டு வருகின்றன. அதாவது, எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க முன்வரும் நிறுவனங்களுக்கு மானியம் வழங்குவது, எலக்ட்ரிக் வாகனத்தை முதன்முறையாக வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு நிதியுதவி என ஒவ்வொரு மாதிரியான நடவடிக்கைகளில் உலக நாடுகள் ஈடுப்பட்டு வருகின்றன.

ஆனால் தற்போதைய நிலவரப்படி, உலகின் மிக பெரிய எலக்ட்ரிக் வாகன சந்தையாக இருப்பது சீனா ஆகும். உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளுள் ஒன்று என இதற்கு அசால்ட்டாக காரணத்தை சொல்லிவிட முடியாது. ஏனெனில் நம் இந்தியா சீனாவை மக்கள் தொகையில் சமீபத்தில்தான் முந்தியதை நீங்கள் கேள்விப்பட்டு இருக்கலாம். ஆனால் நம் இந்தியா எலக்ட்ரிக் வாகனங்கள் விஷயத்தில் இன்னும் பின்தங்கியே உள்ளது. இதற்கு இந்தியாவின் பொருளாதார நிலையை காரணமாக சொல்ல வேண்டும்.
அமெரிக்கா சீனாவிற்கு இணையாக பொருளாதாரத்தில் முன்னிலை வகித்தாலும், மக்கள் தொகையில் பின்தங்கி உள்ளது. இவ்வாறு பல்வேறு அம்சங்கள் சீனாவுக்கு சாதகமாக இருப்பதினாலேயே அந்த நாடு உலகளவில் மிக பெரும் எலக்ட்ரிக் வாகன சந்தையாக உள்ளது. இதற்கு மக்களின் மனநிலையையும் ஓர் முக்கிய காரணமாக சொல்லாம். அதாவது, சீனா பரப்பளவில் மிக பெரிய தேசம் என்பதில் சந்தேகமே இல்லை.

ஆனால் சீனாவில், கிட்டத்தட்ட 80% மக்கள் கிழக்கு பகுதியில்தான் மிகவும் நெருக்கமாக வாழ்கின்றனர். சீனாவின் மேற்கு பகுதியிலும், மத்திய பகுதியிலும் பாலைவனம் மற்றும் வறட்சியான சூழல் நிலவுவதால் வெறும் 20% மக்கள் மட்டுமே அவ்வளவு பெரிய பரப்பளவில் வாழ்கின்றனர். 80% சீன மக்கள் வாழும் பகுதியை பார்த்தீர்கள் என்றால், அங்கு கிராமப்புறங்களை பார்ப்பதே அரிதானது. எல்லா இடங்களும் பெரிய பெரிய கட்டிடங்களை கொண்ட நகரங்களாகவே இருக்கும்.
பொதுவாகவே, நகர பகுதிகளில் வாழும் மக்களின் மனநிலை அடுத்தடுத்து புதியவை என்ன என்பதையே தேடி செல்லும். இத்தகைய மனநிலையே பெரும்பாலான சீன மக்களை எலக்ட்ரிக்கை நோக்கி வேகமாக நகர்த்துகிறது. கடந்த 2022ஆம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையின்படி, சீனாவில் மொத்த வாகன விற்பனையில் 25% எலக்ட்ரிக் வாகனங்கள் அடங்குகின்றன. அதாவது, அந்த நாட்டில் 4இல் ஒருவர் நிச்சயமாக எலக்ட்ரிக் வாகனத்தை வாங்குகிறார்.

ஆனால் அமெரிக்காவில் 7இல் ஒருவரும், ஆட்டோமொபைலின் பிறப்பிடமான ஐரோப்பாவில் 8இல் ஒருவரும் தான் எலக்ட்ரிக் வாகனத்தை தேர்வு செய்கின்றனர். இந்தியா இவற்றை விடவும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. சீனாவில் கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் 56.7 லட்ச எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. இது உலகளவில் விற்பனையான மொத்த எலக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையில் பாதிக்கும் மேல் என கூறப்படுகிறது.
இந்த 2023ஆம் வருடத்தில் உலகளவில் 1.4 கோடி புதிய எலக்ட்ரிக் வாகன வாடிக்கையாளர்கள் கிடைப்பர் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையில் சீனாவின் பங்கு ஏறக்குறைய 60% ஆக இருக்கும் என கூறப்படுகிறது. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மட்டுமின்றி, சீனாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியும் விண்ணை தொட்டு வருகிறது. உலகளவில் பாதி எலக்ட்ரிக் வாகனங்கள் சீனாவில் தான் உற்பத்தி செய்யப்படுகின்றனவாம்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: அமெரிக்காவின் வழியில் நம் இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகள் பின்தொடர, சீனா மட்டும் தனியாக ஓர் இராஜாங்கத்தை நடத்தி வருகிறது. தற்போது நமக்கு கிடைத்துள்ள புள்ளி விபரங்களின்படி, உலகளவில் எலக்ட்ரிக் வாகனங்களின் வளர்ச்சிக்கு சீனா மிக முக்கிய பங்காற்றி வருகிறது. ஆனால், எதிர்காலத்தில் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையில் சீனாவிற்கு ஒரே நேரெதிர் போட்டியாக நம் இந்தியா விளங்கும் என சமூக ஆர்வலர்கள் கூறிவருவதை மறந்துவிட வேண்டாம்.


Click it and Unblock the Notifications









