Circular Journey Ticket ஆன்லைன்ல தேடி பார்த்தாலும் கிடைக்காது! இந்த ஒரு டிக்கெட்ல இந்தியா முழுசா சுத்தலாம்!
இந்தியாவில் ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். பலர் புக்கிங் செய்து பயணிக்கின்றனர். சிலர் புக்கிங் செய்யாமல் பயணிக்கின்றனர்.
பெரும்பாலும் ரயில்களில் பயணிப்பவர்கள் கிளம்பும் இடத்திலிருந்து செல்லும் இடத்திற்கு டிக்கெட் எடுக்கின்றனர். அடுத்து ரிட்டர்ன் டிக்கெட் எடுக்கின்றனர். ஆனால் ஒரே டிக்கெட் எடுத்துக்கொண்டு இந்தியா முழுவதும் சுற்றி வரலாம் எனச் சொன்னால் நம்ப முடிகிறதா? அப்படி ஒரு வாய்ப்பு இருக்கிறது. அதைப் பற்றித் தான் இங்குக் காணப்போகிறோம்.

இந்திய ரயில்களில் ஒருவர் கிளம்பிய இடத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்குச் சுற்றிவிட்டு மீண்டும் கிளம்பிய இடத்திற்கே வரும்படி பயணத்தைத் திட்டமிட்டால் அவர்களுக்காக ரயில்வே நிர்வாகம் சர்க்குலர் ஜர்னி டிக்கெட் என்ற ஒரே டிக்கெட் பயணம் என்ற ஆப்ஷனை வைத்துள்ளது.
இந்த டிக்கெட்டை ஆன்லைனில் எடுக்க முடியாது. மாறாக ஜோனல் தலையக ரயில் நிலையங்களில் தான் எடுக்க முடியும். தமிழகத்தில் மதுரை, திருச்சி, கோவை, சேலம் போன்ற ரயில் நிலையங்களில் நேரடியாகச் சென்று ஆஃப் லைன் முறையில் டிக்கெட் எடுக்க வேண்டும். இதற்காக ஒரு விண்ணப்பம் இருக்கும் அதை வாங்கி பூர்த்தி செய்ய வேண்டும்.
நீங்கள் கிளம்பும் நாளிலிருந்து எந்த ரயிலில் கிளம்புகிறீர்கள் எதுவரை செல்கிறீர்கள் அங்கிருந்து எந்த ரயிலுக்கு மாறுகிறீர்கள், பின்னர் எங்கெங்கு எந்த ரயிலில் எந்தெந்த நாளில் சென்று எப்பொழுது திரும்பி வருகிறீர்கள் என அதில் குறிப்பிட வேண்டும்.
இதைப் பதிவு செய்து கொடுத்தால் ரயில்வே அதிகாரிகள் நீங்கள் பயணிக்கும் தூரத்தைக் கணக்கில் அதற்கு டெலஸ்கோபிக் முறையில் கட்டணத்தைக் கணக்கிட்டுச் சொல்லுவார்கள். அதற்கான பணத்தைச் செலுத்திவிட்டால் அதன் பின்னர் உங்களுக்கு ஒரு சர்க்குலர் ஜெர்னி டிக்கெட் வழங்கப்படும்.
இந்த டிக்கெட் நீங்கள் பயணம் செய்ய அனுமதி மட்டுமே அதாவது முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணம் செய்யலாம். நீங்கள் இதை வைத்து முன்பதிவு செய்ய விரும்பினால் இந்த டிக்கெட்டை வைத்து ரிசர்வேசன் கவுண்டரை அணுக வேண்டும். அங்கு நீங்கள் பயணம் செய்யும் ரயில்களில் முன்பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும்.
ஆனால் இந்த முறை முன்பதிவிற்குக் கட்டணமாக வெறும் முன்பதிவு, சூப்பர்ஃபாஸ்ட் கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும், முழு கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. இதைச் செலுத்தினால் உங்கள் சர்க்குலர் ஜெர்னி டிக்கெட்டை வைத்தே நீங்கள் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ஏறிக்கொள்ள முடியும்.
எந்தெந்த ரயில்களில் எந்தெந்த சீட் ஒதுக்கப்பட்டுள்ளது என சர்க்குலர் ஜெர்னி டிக்கெட்டிலேயே குறித்துத் தரப்படும். இது மட்டுமல்ல, இதில் ஏதாவது பயணத்தில் முன்பதிவு காத்திருப்பு பட்டியலிலிருந்தால் அதை ரயில் பயணத்திற்கு முன்பு செக் செய்யும் வசதியும் வழங்கப்படும்.
கவனத்தில் கொள்ள வேண்டியவை: இந்த சர்க்குலர் ஜெர்னி டிக்கெட்டை குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் மட்டுமே எடுக்க முடியும். இந்த சர்க்குலர் ஜெர்னி என்பது 1000 கி.மீக்கு மிகாமல் இருக்க வேண்டும். நீங்கள் பயணிக்கும் ரயில்களில் முன்பதிவு செய்ய விரும்பினால், நீங்கள் பயணம் செய்யும் நாளில் முன்பதிவு டிக்கெட்கள் இருக்க வேண்டும். இல்லை என்றால் காத்திருப்பு பட்டியலுக்குத் தள்ளப்படுவீர்கள்.
என்ன லாபம்?: பலர் தனித்தனியாகவே ஆன்லைனில் எளிதாக டிக்கெட் எடுக்கலாமே ஏன் ஒரே டிக்கெட்டை ஆஃப்லைனில் கஷ்டப்பட்டு எடுக்க வேண்டும் எனக் கேட்கிறார்கள். இந்த டிக்கெட்டை எடுப்பதால் 2 வகையான லாபம் இருக்கிறது.
சர்க்குலர் டிக்கெட் எடுக்கும் போது டெலஸ்கோபிக் முறையில் கணக்கிடப்பட்டு டிக்கெட் வழங்கப்படுகிறது. தூரம் அதிகமாக அதிகமாக டிக்கெட் விலை குறையும். தனித்தனியாக டிக்கெட் எடுத்தால் ஒவ்வொரு பயணமும் 0 கி.மீ கணக்கிடப்படும். ஒரே டிக்கெட்டாக எடுப்பதால் பணத்தை மிச்சப்படுத்தலாம்.
இரண்டாவது பலன் நீங்கள் பயணிக்கும் போது ஒவ்வொரு டிக்கெட்டாக எடுத்துச் செல்ல வேண்டியதில்லை முழு பயணமும் ஒரே டிக்கெட்டில் முடிந்துவிடும். தனித்தனி டிக்கெட் என்றால் குழப்பம் வர வாய்ப்பு இருக்கிறது. முன்பதிவு செய்யாத ரயில்களில் டிக்கெட்டிற்காக கவுண்டருக்குச் செல்ல வேண்டாம். இந்த டிக்கெட்டிலேயே முன்பதிவில்லாமலும் பயணிக்கலாம்.
இந்த டிக்கெட் நீங்கள் பயணத்தைத் துவங்கும் நாளிலிருந்து 50 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதற்குள் உங்கள் பயணத்தை முடித்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் இந்த டிக்கெட்கள் ஆன்மீக சுற்றுப் பயணம், பள்ளி, கல்லூரி சுற்றுலா போன்றவற்றிற்கு டிக்கெட் புக் செய்பவர்களுக்கு லாபமாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரயில்வேயில் இப்படியாகப் பலருக்கும் தெரியாத பல வசதிகள் இருக்கிறது. இதை ரயில்வே நிர்வாகம் உரியவர்களுக்குத் தெரியும் படி முறையாக விளம்பரம் செய்ய வேண்டும். பலர் இந்த வசதி இருப்பது தெரியாமல் தனித்தனியாக டிக்கெட் புக்கிங் செய்து வருகின்றனர். இந்த செய்தியை நீங்களும் உங்களுக்குத் தெரிந்தவர்களுக்குப் பகிருங்கள்.


Click it and Unblock the Notifications








