சென்னை பஸ்களில் பொருத்தப்படும் புதிய கருவிகள்! லட்சகணக்குல பணத்தை மிச்சம் செய்ய தமிழக அரசு செம பிளான்!
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 6பஸ்களை சிஎன்ஜி மற்றும் எல்என்ஜி எரிபொருளில் இயங்கும் பஸ்களாக மாற்றி தமிழக அரசு தனது சோதனை திட்டத்தை துவங்கி உள்ளது. டீசலுக்காக ஏகப்பட்ட பணம் செலவாகி வரும் நிலையில், அந்த செலவை குறைப்பதற்காக தமிழக போக்குவரத்து கழகம் இப்படியான நடவடிக்கையை எடுத்துள்ளது. இதை ஒரு சோதனை கட்டமாக செயல்பாட்டிற்கு கொண்டு வருகிறது. இது வெற்றியடையும் பட்சத்தில் தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்து கழகங்களில் இயங்கும் பஸ்களில் இது பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து கழகங்கள் மூலம் தினமும் 20,160 டீசல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களுக்காக தினசரி 1.76 கோடி ரூபாய் அளவுக்கு தமிழக அரசு செலவு செய்து வருகிறது. அதில் 27% டீசலுக்காக மட்டுமே தமிழக அரசியல் செலவு செய்து வருகிறது. இதன் மூலம் டீசல் செலவை குறைத்தால் மிகப்பெரிய பணத்தை மிச்சப்படுத்தலாம் என்பதால் தமிழக அரசு புதிய முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளது.

அதன்படி டீசல் பஸ்களில் டீசலுக்கு பதிலாக சிஎன்ஜி அல்லது எல்என்ஜி எரிபொருட்களை பயன்படுத்துவதன் மூலம் டீசல் செலவு வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை சோதனை செய்வதற்காக தமிழக அரசு இயங்கி வரும் 6 பஸ்களை தேர்வு செய்து அந்த பஸ்களில் மட்டும் சிஎன்ஜி மற்றும் எல்என்ஜி எரிபொருளில் இயங்கும் வகையில் ரெட்ரோ ஃபிட்டிங் கிட்க்களை பொருத்தியுள்ளது.
இந்த பஸ்கள் எப்படி இயங்குகிறது என்பதை பொறுத்து இந்த திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. தற்போது எல்என்ஜி கிட் பொருத்தப்பட்ட நான்கு பஸ்களும் சிஎன்ஜிக்கு பொருத்தப்பட்ட இரண்டு பஸ்களும் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் எல்என்ஜி பொருத்தப்பட்ட நான்கு பஸ்களில் இரண்டு பஸ்கள் சென்னை பகுதியில் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படுகிறது. இது ரூட் நம்பர் 553டபிள்யூ சைதாப்பேட்டை முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை செல்லும் ரோட்டில் பயன்படுத்தப்படுகிறது.

மற்ற இரண்டு பஸ்கள் விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்தில் செயல்பாட்டில் இருக்கும். காஞ்சிபுரம் டூ பூந்தமல்லி மஃப்ஷல் ரூட்டில் பயன்படுத்தப்படுகிறது. இதுபோக சிஎன்ஜி பொருத்தப்பட்ட இரண்டு பஸ்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அனுப்பப்படுகிறது. அங்குள்ள முக்கியமான போக்குவரத்து வழித்தடத்தில் இந்த பஸ் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராமநாதபுரம் பகுதியில் எல்என்ஜி எரிபொருளை ஏற்றுவதற்கான வசதி இல்லை என்பதற்காக சிஎன்ஜி கிட் பொருத்தப்பட்டுள்ளது.
டீசலுக்கு பதிலாக இந்த சிஎன்ஜி, எல்என் ஜி போன்ற எரிபொருட்களை பயன்படுத்துவதன் மூலம் 7 முதல் 20 சதவீதம் வரை எரிபொருள் செலவு மிச்சம் பண்ண முடியும் என போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் போக்குவரத்துக் கழகத்திற்கு ஆகும் செலவு வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பஸ்களின் சோதனை ஓட்டத்தின் போதே இது கிட்டத்தட்ட வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போவதற்கான முயற்சிகள் துவங்கிவிட்டன. இதன்படி தமிழக முழுவதும் உள்ள அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் தலா இரண்டு பஸ்கள் சிஎன்ஜி அல்லது எல்என்ஜி எரிபொருளில் இயங்கும் வகையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இப்படியாக சிஎன்ஜி மற்றும் எல்என்ஜி எரிபொருட்களை கொண்டு இந்த பஸ்கள் அந்தந்த பகுதியில் சிறப்பாக இயங்குகிறதா என சோதனை செய்யப்படுகிறது. சிறப்பாக இயங்கும் பட்சத்தில் இது விரிவாக்கம் செய்யப்படும்.
தமிழக அரசு கடந்த ஆண்டு ஆர்டர் செய்த 2000 புதிய பஸ்களில் 1000புதிய பஸ்களை டெலிவரி எடுத்து பயன்பாட்டுக்காக கொண்டு வந்துள்ளது. இதுபோக இந்த ஆண்டு புதிதாக 5700 புதிய பஸ்களுக்கான ஆர்டரை வழங்கியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்தம் 7700 புதிய பஸ்கள் தமிழகத்தில் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 7700 பஸ்களில் சென்னை பகுதியில் இயங்குவதற்கான 100 புதிய எலெக்ட்ரிக் பஸ்களுக்கான ஆர்டரும் உள்ளடங்கும்.
தற்போது தமிழக அரசு பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் இயக்கத்தில் இருக்கும் பஸ்களை முழுவதுமாக நீக்க திட்டமிட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் தற்போது இயங்கி வரும் பசுகளின் இன்ஜின் பிரேக் உள்ளிட்ட மற்ற அனைத்து உதிரிபாகங்களையும் சோதனை செய்யவும் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் விரைவாக துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படியான சோதனையில் தகுதியில்லாத பஸ்கள் எல்லாம் பயன்பாட்டில் இருந்து நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இப்படியாக தகுதியில்லாத பல்வேறு பஸ்கள் பயன்பாட்டில் இருந்து அந்த பஸ்கள் விபத்தில் சிக்கி வருவது வாடிக்கையான செய்தியாக மாறி வருகிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பிறகு இந்த செய்திகள் குறையும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழக அரசு பஸ்கள் தினம் தோறும் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பயணம் செய்யும் வாகனமாக இருக்கிறது. இந்த வாகனத்திற்கு எரிபொருள் செலவு சிக்கனம் செய்ய வேண்டியது அவசியமாகிறது. சிஎன்ஜி மற்றும் எல்என்ஜி போன்ற எரிபொருட்களை பயன்படுத்துவதன் மூலம் மிகப்பெரிய தொகையை தினந்தோறும் போக்குவரத்து கழகத்தால் மிச்சம் செய்ய முடியும்.


Click it and Unblock the Notifications








